சென்னைகிண்டியில் உள்ள சென்னை ஐஐடி வளாகத்தில் இன்று (ஜூலை 22) 60வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில், 2 ஆயிரத்து 573 மாணவர்கள் பட்டம்பெற்றனர். மேலும், 2 ஆயிரத்து 746 பட்டங்களும் (இணை மற்றும் இரட்டை பட்டயப் படிப்பு) வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கி கெளரவித்தார்.
இதனையடுத்து விழாவில் சிறப்புரை ஆற்றிய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், ''கடந்த 64 வருட காலமாக, இந்தியாவின் வளர்ச்சிக்காக சென்னை ஐஐடி ஆராய்ச்சி, தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் மற்றும் தொலைநோக்கு திட்டங்களால் மிக முக்கியப் பங்கை வகிக்கிறது. இங்கு பட்டம் பெறும் ஆயிரக்கணக்கான பட்டதாரிகள், தங்களது பங்கை நமது நாட்டுக்கு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த உலகத்திற்கும் அளிக்கின்றனர்.
சமூகத்தில் தொழில்நுட்பத்தின் தாக்கம் மிக ஆழமாக உள்ளது. பண மதிப்புக்கு அப்பால், தொழில்நுட்பம் சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு பங்கு அளிக்கும் கொள்கை மதிப்புகளை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்” எனத் தெரிவித்த அவர், சட்டத்திற்கும், தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் இடையே உள்ள தொடர்பை விளக்கினார்.
பட்டமளிப்பு விழாவின் போது, 453 Ph.D. ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி போன்ற வெளிநாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களுடன் கூட்டுப் பட்டங்கள் உட்பட பட்டங்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் பி.டெக், எம்.டெக், எம்.எஸ்சி, எம்.ஏ., எக்சிகியூட்டிவ் எம்.பி.ஏ., எம்.பி.ஏ., எம்.எஸ்., மற்றும் நிர்வாகிகளுக்கான இணையதள வசதி கொண்ட எம்.டெக் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த மாணவர்களுக்குப் பட்டங்கள் வழங்கப்பட்டன.