சென்னை:தமிழ்நாடு பொதுத்துறை நிறுவன தொழிலாளர்களுக்கான போனஸ் உள்ளிட்ட பல கோரிக்கைகள் குறித்து தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வலியுறுத்தி அக்.26-ல் அனைத்து மாவட்டங்களிலும் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என சிஐடியு அறிவித்துள்ளது.
தமிழ்நாடு பொதுத்துறை நிறுவனங்களில் செயல்படும் சிஐடியுவுடன் இணைக்கப்பட்ட சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் சென்னையில் அதன் ஒருங்கிணைப்பாளர் கே.திருச்செல்வன் தலைமையில் இன்று (அக்.23) நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிஐடியு மாநில தலைவர் சவுந்தரராசன், பொதுச்செயலாளர் சுகுமாறன், உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தமிழ்நாடு பொதுத்துறை நிறுவனங்களான அரசு போக்குவரத்து, மின்சார வாரியம், சிவில் சப்ளைஸ், டாஸ்மாக், ஆவின், டாமின், அரசு சிமெண்ட், அரசு சர்க்கரை, அரசு ரப்பர், அரசு உப்பு, பூம்புகார் ஷிப்பிங், மேக்னசைட், கூட்டுறவு உள்ளிட்ட நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 2022-23ஆம் ஆண்டுக்கான போனஸ் கோரிக்கை சம்பந்தப்பட்ட நிர்வாகங்களுக்கு சங்கங்கள் அனுப்பியுள்ளன.
ஆனால், இதுநாள் வரை பொதுத்துறை நிர்வாகங்கள் தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முன்வரவில்லை. அரசின் இத்தகைய அணுகுமுறை தொழிலாளர்கள் மத்தியில் இந்த ஆட்சியின் மீது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு பொதுத்துறை நிறுவன தொழிலாளருக்கு 2018-19ம் கணக்காண்டு வரையில் 8.33 மற்றும் 11.67 என 20 சதவிகித போனஸ் வழங்கப்பட்டு வந்த நிலையில் முந்தைய அரசு கொரோன பொதுமுடக்கத்தை காரணம் காட்டி 2019-20 கணக்காண்டில் தொழிலாளருக்கு வழங்கி வந்த போனஸ் தொகையை 10சதவிகிதமாக குறைத்தது. அரசின் நிலையை புரிந்து கொண்டு தொழிலாளர்கள் வேறுவழியின்றி ஏற்றுக்கொண்டார்கள். அதன்பிறகு ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசும் முந்தைய அரசின் போனஸ் நிலைபாட்டை தொடர்ந்து 2020-21, 2021-22 கணக்காண்டுகளில் 10சதவிகிதமாக குறைத்து போனஸ் வழங்கியதை தொழிலாளர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.
போனஸ் சட்டப்படி நிர்வாகங்கள் கணக்காண்டின் வரவு-செலவு, லாப-நட்ட கணக்கு, போனஸ் கணக்கீடு அடிப்படையில் தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அறிவிக்கும் நடைமுறை முற்றிலுமாக கைவிடப்பட்டு, அரசின் நிதித்துறையின் கண்ணசைவிற்கும், கருணைக்கும் காத்திருக்கும் நிலைமை உருவாக்கப்பட்டுள்ளது பொதுத்துறை நிறுவனங்களில் சுயேட்சையான நிர்வாக நடவடிக்கைகளுக்கு ஊறுவிளைவிக்கவே செய்யும்.
தமிழ்நாடு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பொதுமக்களின் தேவைகளை பூர்த்தி செய்வது மட்டுமல்ல, அரசுக்கு வருவாய் ஈட்டி தரும் நிறுவனங்கள் அரசின் திட்டங்களை நிறைவேற்றுவதிலும், சேவைத்துறையாக செயல்படுகின்றன. தீபாவளி பண்டிக்கைக்கு இரண்டு வார காலமே உள்ள நிலையில், தமிழ்நாடு பொதுத்துறை நிறுவனங்களின் நிர்வாகங்கள் தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கொரோனா காலத்திற்கு முந்தைய நிலையில் கூடுதல் போனஸ் அறிவிக்க வலியுறுத்தி 26.10.2023 அன்று மாநில பொதுத்துறை சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் மாவட்ட தலைநகரங்களில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:டிஎன்பிஎஸ்சி தலைவர் பரிந்துரை கோப்புகளை மீண்டும் நிராகரித்த ஆளுநர்.. முறைகேடு புகாருக்கு ஆளான நபருக்கு உறுப்பினர் பதவியா? எனக் கேள்வி!