தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'திமுகவிற்கு தமிழர்கள், இஸ்லாமியர்கள் பற்றி கவலை இல்லை...!' - Valluvar Kottam

சென்னை: பாஜக சார்பில் 'குடியுரிமை சட்டத்திற்கு எதிராக மக்களை தூண்டிவிடும் தேச விரோதிகளை கண்டித்து' என்ற தலைப்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

Citizenship Bill BJP protests in Chennai
Citizenship Bill BJP protests in Chennai

By

Published : Dec 20, 2019, 11:40 PM IST

பாஜக சார்பில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக மக்களைத் தூண்டிவிடும் தேசவிரோதிகளைக் கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மத்தியமுன்னாள் இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா, பாஜக மாநில துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட தலைவர்கள் கண்டன உரையாற்றினர்.

அப்போது, பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா, "கல்லூரி மாணவர்கள் மண் குதிரைகளை நம்பி வீதிக்கு வராதீர்கள். ரஜினி போராட்டம் வேண்டாம் என்றுதான் கூறினார். எந்தத் தரப்பிற்கும் அவர் ஆதரவாகப் பேசவில்லை. ஏன் அவர் மீது இந்த வெறுப்பை பரப்ப வேண்டும். பொறுப்பான குடியுரிமை சட்டம் இந்த நாட்டிற்கு வேண்டும். இலங்கை தமிழர்கள் படுகொலைக்கு காரணமான திமுக, காங்கிரஸ் தற்போது கைகோத்து பேசிவருகின்றனர்" எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து, மத்திய முன்னாள்அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் பேசுகையில், "இஸ்லாமியர்கள் இந்தியாவை விட்டு செல்ல வேண்டும் என்று நாங்கள் கூறவில்லை, மிகவும் மோசமான ஒப்பந்தங்கள் காங்கிரஸ் ஆட்சியில் போடப்பட்டுள்ளது. இந்திய எல்லைகளைச் சரியாக காங்கிரஸ் வரையறை செய்யவில்லை. நம் நாட்டிற்கு காங்கிரஸ் செய்த துரோகத்தை பிரதமர் மோடி சரி செய்துவருகிறார்.

திமுக சடலத்தை வைத்து அரசியல் செய்யக்கூடியது. தமிழர்கள், இஸ்லாமியர்கள் உரிமைகளைப் பற்றி கவலை இல்லை. திமுகவின் கவலையெல்லாம் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்று அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெறுவது குறித்துதான். இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் உயிரிழந்தவர்களை திமுக கண்டுகொள்ளவில்லை.

அப்போது, திமுகவின் உண்ணாவிரதமே ஈழத்தமிழர்கள் கொத்துக்கொத்தாக கொல்லப்பட்டதற்கு காரணம். ஒருவேளை அன்று பிரபாகரன் கொல்லப்படவில்லை என்றால் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி வந்திருந்தால் சிறைப்பிடித்து கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருப்பார். திமுக கட்சியை ஒழித்துக்கட்டுவதற்கான நேரம் இது" எனத் தெரிவித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட தொண்டர்கள்

அதன்பின், செய்தியாளர்களிடம் பேசிய பொன். ராதாகிருஷ்ணன், "தாங்கள் செய்த பணிகள், தொண்டுகள் மூலமாக மக்களை கவர்ந்து ஆட்சிக்கு வர வேண்டும் என எண்ணுகின்ற அரசியல் கட்சிகள் உண்டு. அதேபோல், மக்கள் மத்தியில் எந்த நன்மையும் செய்யாமல் அச்சத்தை உண்டாக்கி அதன்மூலம் ஆட்சிக்கு வரும் கட்சிகளும் உண்டு.

திமுக எப்போதெல்லாம் பலவீனமாக உள்ளதோ அப்போதெல்லாம் மக்களுக்கு, சிறுபான்மையினருக்கு, மாணவர்களுக்கு, மொழிக்கு ஆபத்து என பலவிதமான அச்சத்தை உண்டாக்கி யுக்திகள் மூலம் ஆட்சிக்கு வருவார்கள்.

அதுபோல் தற்போது இந்திய குடியுரிமை சட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் உள்ள தமிழர்களுக்கு குறிப்பாக ஈழத்தமிழர்களுக்கு இடமில்லை என்றும், இஸ்லாமியர்களுக்கு இடமில்லை என்றும் பொய் பரப்புரை செய்கின்றனர். மோடி தற்போது இந்தச் சட்டத்தை கொண்டுவந்ததற்கு காரணம் 60 ஆண்டு காலமாக காங்கிரஸ், பிற கட்சிகள் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்பதால்தான்.

திமுக 22ஆம் தேதி நடத்தவுள்ள ஆர்ப்பாட்டம் 'பிணம் தின்னும் கழுகு' எவ்வாறு பிணங்களை தேடுமோ அதுபோல் ஆர்ப்பாட்டம் செய்து கலவரங்கள் மூலம் 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் ஆதாயம் தேட நினைக்கின்றனர். இலங்கைத் தமிழர்களின் முக்கியமான கவலை தமிழர்கள் நிலம் சிங்களர்களுக்கு செல்லக் கூடாது என்பதுதான் நோக்கமாகவுள்ளது. இதனால்தான் அவர்கள் என்ன கஷ்டம் வந்தாலும் இலங்கையில் வாழ நினைக்கின்றனர்" எனக் கூறினார்.

இதையும் படிங்க:

குடியுரிமை திருத்த சட்டம்: டெல்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு!

ABOUT THE AUTHOR

...view details