உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள், நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு அரசு புதிதாகத் தொடர்ந்துள்ள வழக்கு என பரபரப்பான சூழ்நிலையில் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டுத் தொடர் நேற்று தொடங்கியது. இந்நிலையில் இன்று சட்டப்பேரவையில் திமுக சார்பில் குடியுரிமை திருத்தச் சட்டத்தைப் பற்றி விவாதிக்க அனுமதி கோரியது.
ஆனால், சட்டப்பேரவை சபாநாயகர் அனுமதியளிக்காததைக் கண்டித்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். அதன் பின்னர் திமுக தலைவர் ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசுகையில், ' கடந்த 2.01.2020ஆம் தேதி சட்டப்பேரவைத் தலைவருக்கு இந்தியக் குடியுரிமை திருத்தச் சட்டத்தை உடனே திரும்பப் பெற வேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று கடிதம் மூலம் கோரிக்கை வைத்தேன்.
இந்நிலையில் இன்று இதை நேரமில்லா நேரத்தில் பேச அனுமதிக்க சபாநாயகரிடம் கேட்டேன். ஆனால், அவர்கள் அனுமதி அளிக்கவில்லை. இந்தியா முழுவதும் பேரணி, ஆர்ப்பாட்டம், துப்பாக்கிச் சூடு என இவ்விவகாரம் பற்றி எரிந்து வருகிறது. எனவே இதை முக்கியப் பிரச்னையாகக் கருதி சட்டமன்றத்தில் எழுப்பினோம். ஆனால், சபாநாயகர் பேச அனுமதி அளிக்கவில்லை.