சென்னை:தமிழ்நாட்டிலுள்ள பள்ளி, கல்லூரியில் ஏற்படும் சாதிய தொடர்பான வன்முறை தடுப்பது குறித்த கருத்துகள் மற்றும் ஆலோசனைகளைத் தலைமை ஆசிரியர்கள், ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் அமைக்கப்பட்ட ஒரு நபர் குழுவிற்கு அனுப்பி வைக்கலாம் என பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் அறிவொளி தெரிவித்துள்ளார். மேலும், பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் casteviolencecommiteechandru@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும், அனுப்பி வைக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டிலுள்ள பள்ளி, கல்லூரிகளில் சாதிய மனப்பான்மையால் மாணவர்களிடம் வன்முறை சமீப காலமாக நடைபெற்று வருகின்றன. திருநெல்வேலியில் துவங்கிய சம்பவம், திருவண்ணாமலை வரையில் தொடர்ந்தது. தற்போது, கல்லூரி மாணவர்களும் தங்களுக்குள் வன்முறைச் செயலில் ஈடுபட்டு வருகின்றனர். சமூகத்தில் நிலவும் போக்குதான் மாணவர்களிடம் சாதிய வன்மம் அதிகரிக்கக் காரணமாக கூறப்படுகின்றன.
இதையும் படிங்க:குழந்தைகளையும் தாக்கும் மன அழுத்தம்: பெற்றோர் தெரிந்துகொள்ள வேண்டியது.!
மாணவர்களிடையே சாதி, இனப் பிரிவினைகள் இல்லாத ஒரு சூழ்நிலையை உருவாக்கிட மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், அரசுக்கு ஆலோசனைகளை வழங்கிட ஓய்வு பெற்ற நீதியரசர் கே.சந்துரு தலைமையில் ஒரு நபர் குழு அமைத்திட தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும், இந்தக் குழு இது தொடர்பாக கல்வியாளர்கள், மாணவர்கள், பெற்றோர், சமூக சிந்தனையாளர்கள், பத்திரிகைத் துறையினர் என பல்வேறு தரப்பினரிடமிருந்தும் கருத்துகளைப் பெற்று, அதனடிப்படையில் அரசுக்கு விரைவில் அறிக்கை சமர்ப்பித்திடும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து, ஆக்கப்பூர்வமான முறையில் சாதி, இன பேதமற்ற சமூகத்தை உருவாக்க ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர் உடன் இணைந்து, அனைவரும் ஒற்றுமையாக வாழ்வதற்குத் தேவையான வழிகாட்டுதல்கள் மற்றும் ஆலோசனைகள், உந்துதல்கள் (Motivation) தொடர்பான அறிக்கைகள் அளித்திட வேண்டும்.