பிரைமில் வெளியானது தண்டட்டி:ராம் சங்கையா இயக்கத்தில் பசுபதி, ரோகிணி, விவேக் பிரசன்னா உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த மாதம் 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் தண்டட்டி. கிராமத்தில் வாழும் பாட்டிகளின் காதில் இருக்கும் தண்டட்டி பற்றிய கதையை இயக்குநர் சொல்லியிருந்தார். இப்படம் வெளியாகி ஓரளவு வரவேற்பு பெற்றது. சிறிய முதலீட்டில் எடுக்கப்பட்ட படமாக இருந்தாலும் ரசிக்கும் வகையில் திரைக்கதை எழுதியிருந்தார் இயக்குநர் ராம் சங்கையா. பசுபதி, அம்மு அபிராமி மற்றும் ரோகிணி ஆகியோரது நடிப்பு பேசப்பட்டது. இந்த நிலையில் இன்று இப்படம் அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகி உள்ளது. இப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
50 நாட்களை கடந்த அருள்நிதியின் கழுவேத்தி மூர்க்கன்:கௌதமராஜ் இயக்கத்தில் அருள்நிதி, சந்தோஷ் பிரதாப், துஷாரா விஜயன் உள்ளிட்டோர் நடித்து கடந்த மாதம் வெளியான திரைப்படம் ‘கழுவேத்தி மூர்க்கன்’. குற்றம் செய்தவரை கழுவில் ஏற்றும் ஆதிகாலத்து வழக்கத்தை திரைக்கதையில் இணைத்து வித்தியாசமான கதையாக கொடுத்திருந்தார் இயக்குநர் கௌதமராஜ். விமர்சனரீதியிலும் வசூல் ரீதியாகவும் இப்படம் பேசப்பட்டது. இந்த நிலையில் இந்த படம் இன்று 50 ஆவது நாளை கடந்துள்ளது.
இதுகுறித்து இதன் இயக்குநர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது. “ஒரு திரைப்படம் என்பது சமூகத்தில் ஒரு உரையாடலை நிகழ்த்த வேண்டும், ஏதோ ஒன்றை விட்டுச் செல்ல வேண்டும், 50 நாள்களாக கழுவேத்தி மூர்க்கன் எழுதப்பட்டும் பேசப்பட்டும் கொண்டிருக்கிறது, நாம அடிவாங்குறவங்க பக்கம்தான் நிக்கணும், அவங்கள அடி வாங்காம பார்த்துக்கணும்” என தெரிவித்துள்ளார்.
ஹீரோவாக களம் இருக்கும் லாரன்ஸ் தம்பி எல்வின்:நடிகர் மற்றும் இயக்குநர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் தற்போது சந்திரமுகி இரண்டாம் பாகம் வெளியாக உள்ளது. இந்த நிலையில் இவரது தம்பி எல்வின் கதாநாயகனாக அறிமுகமாகிறார். அருள்நிதி நடித்த டைரி படத்தை இயக்கிய இன்னாசி பாண்டியன் இயக்கும் இப்படத்தில் லாரன்ஸ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவர் ராகவா லாரன்ஸ் நடித்த ருத்ரன் படத்தை இயக்கியிருந்தார். 5ஸ்டார் கதிரேசன் இப்படத்தை தயாரிக்கிறார். இதற்கான அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.
காமராஜர் சிலைக்கு மரியாதை செய்த விஜய் மக்கள் இயக்கம்:நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கத்தின் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்து வருகிறார். இந்த நிலையில் தலைவர்களின் பிறந்தநாள் மற்றும் நினைவு நாள்களில் அவர்களது சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துமாறு தனது மக்கள் இயக்கத்தினருக்கு விஜய் உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் இன்று காமராஜரின் பிறந்த நாளை ஒட்டி சென்னை ஆலந்தூரில் ஊர்வலமாக சென்று அவரது சிலைக்கு விஜய் மக்கள் இயக்கத்தினர் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு இன்று முதல் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இரவு நேர பயிலகம் தமிழ்நாடு முழுவதும் தொடங்கப்படவுள்ளது.