சென்னை:கோபுரம் பிலிம்ஸ் என்ற நிறுவனம் மூலம் திரைப்படங்களை வெளியிட்டு வருபவர், மதுரையைச் சேர்ந்த சினிமா பைனான்சியர் அன்புச்செழியன். இவர் தங்கமகன், வெள்ளைக்காரதுரை, மருது, ஆண்டவன் கட்டளை உள்ளிட்ட சில படங்களை தயாரித்துள்ளார். மேலும் மற்ற சினிமா தயாரிப்பு நிறுவனங்களுக்கு பைனான்ஸ் செய்தும் வருகிறார்.
இந்நிலையில், சென்னை நுங்கம்பாக்கம் காம்தார் நகர் முதல் தெருவில் உள்ள அவரது வீட்டில் வருமான வரித்துறை உதவி ஆணையர் முத்து தலைமையிலான 15 பேர் கொண்ட குழுவினர், துப்பாக்கி ஏந்திய காவல்துறையினருடன் இன்று (ஆக. 2) காலை 5 மணி முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் தியாகராய நகரில் அமைந்துள்ள அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் அலுவலகம் மற்றும் திருவல்லிக்கேணி உட்பட சென்னையில் மட்டும் 10 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. அதேபோல் மதுரை மேலமாசி வீதியில் இருக்கக்கூடிய அவருடைய அலுவலகம், கீரைத்துறை பகுதியில் இருக்கக்கூடிய சொந்த வீடு மற்றும் தெப்பக்குளம் பகுதியில் இருக்கக்கூடிய வீட்டில் வருமானவரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.