கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உட்பட்ட பழையபேட்டை பகுதியில் இயங்கி வந்த பட்டாசு சேமிப்பு கிடங்கில் இன்று (ஜூலை 29) காலை திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், குடோனில் பணியில் இருந்த சிலர் சுமார் 200 மீட்டர் தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டனர். மேலும், இந்த வெடி விபத்தில் இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கோர சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில் நிகழ்ந்த பெரிய பட்டாசு வெடி விபத்துகள்:
2020 செப்.4: கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் இயங்கி வந்த பட்டாசு ஆலையில் திடீர் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்த நிலையில் 2 பேர் படுகாயமடைந்தனர்.
2020 அக்.23: விருதுநகர் மாவட்டம் செங்குலம் பகுதியில் இயங்கி வந்த பட்டாசு கிடங்கில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த கோர விபத்தில் 6 பேர் உயிரிழந்த நிலையில் 2 பேர் படுகாயமடைந்தனர்.
2021 பிப்.12:விருதுநகர் மாவட்டம் அச்சங்குளம் அருகே உள்ள சாத்தூர் பகுதியில் பட்டாசு தொழிற்சாலை தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 19 பேர் உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
2021 அக்.26: கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் பட்டாசு மொத்த விற்பனை கடையில் குவித்து வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் திடீரென வெடித்தது. இந்த விபத்தில் கடையில் இருந்த 5 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். 10க்கும் மேற்பட்டோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
2022 நவ.10: மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள அழகுசிறை என்ற இடத்தில் செயல்பட்டு வந்த பட்டாசு ஆலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும், 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
2023 மார்ச்.22:காஞ்சிபுரம் மாவட்டம் வளத்தோட்டம் அருகே இயங்கி வந்த பட்டாசு தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த கோர விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த வரிசையில் தான் இன்று கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் பட்டாசு குடோனில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. குடியிருப்பு பகுதியில் செயல்பட்டு வந்த பட்டாசு குடோனுக்கு முறையாக உரிமம் உள்ள போதிலும் அபாயகரமான இந்த குடோனை எப்படி குடியிருப்பு பகுதியில் வைக்க அரசு தரப்பில் அனுமதி வழங்கப்பட்டது என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதையும் படிங்க:கிருஷ்ணகிரி பட்டாசு குடோன் வெடி விபத்தில் 8 பேர் பலி; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு!