சென்னை: கிறிஸ்தவ மதம் மாறிய ஆதிதிராவிட மக்களுக்கும் பட்டியல் இனத்தில் சேர்த்து சலுகைகளை வழங்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி, தமிழ்நாடு சட்டப் பேரவையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றியதற்கு, கிறிஸ்தவ அமைப்பினர் நன்றி தெரிவிக்கும் விதமாக கூட்டம் நடத்தினர்.
இந்தத் தீர்மானத்தை கொண்டு வந்து நிறைவேற்றிய திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் விழாவானது, கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கம் ஒருங்கிணைப்பில், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.
இதில் முதலமைச்சர் ஸ்டாலின், இனிகோ இருதயராஜ், செல்வப்பெருந்தகை, சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதேபோல், இந்த விழாவில் தமிழ்நாடு கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவர், மயிலை பேராயத்தின் பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி, தென்னிந்திய திருச்சபையின் பேராயர், செங்கல்பட்டு ஆயர் நீதிநாயன், தென்னிந்திய திருச்சபை பொதுச் செயலாளர் பெர்னாண்டஸ் ரத்தினராஜா உள்ளிட்டோர் நேரில் வந்து, முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர். இந்த விழாவில் மேடையில் ஏற முடியாமல் மேடைக்கு கீழ் அமர்ந்திருந்த எஸ்றா சற்குணத்திடம், மேடையில் இருந்து கீழே இறங்கி வந்து முதலமைச்சர் வாழ்த்து பெற்றார்.
இதனையடுத்து, இது தொடர்பாக தலித் கிறிஸ்தவர்கள் தரப்பில் கூறுகையில், "தமிழ்நாடு சட்டமன்றத்தில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் என்பது, மதம் மாறிய தலித் கிறிஸ்தவர்களுக்கு, பட்டியல் இனத்தில் சேர்ப்பதற்கு மத்திய அரசுக்கு அழுத்தம் தரும் வகையில் அமையும். இந்தத் தீர்மானம் என்பது, மற்ற மாநிலங்களில் இது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றுவதற்கு உந்துதலாக இருக்கும். மேலும், இந்த ஒதுக்கீடு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்குக்கு, தலித் கிறிஸ்தவர்களுக்கு வலு சேர்க்கும் வகையில் அமையும். இந்தத் தீர்மானத்தைக் கொண்டு வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்" என கூறினர்.
இதையும் படிங்க:கிறிஸ்தவ மதத்துக்கு மாறிய ஆதிதிராவிடர்களுக்கும் சலுகைகள்: முதலமைச்சர் தனித்தீர்மானம்