சென்னை:சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகமான "தாயகத்தில்" மதிமுக தலைமை நிலையச் செயலாளர் துரை வைகோவின் அலுவலகத்தை, இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துரை வைகோ, 'தமிழ்நாடு முதலமைச்சர் பிரதமர் கலந்து கொண்ட நிகழ்வில் தமிழ்நாட்டின் தேவைகளைத் தான் பேசி உள்ளார். கச்சத்தீவை மீட்க வேண்டியதை சுட்டிக்காட்டி உள்ளார்.
10 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த மதுரவாயல் பாலம், சென்னை - பெங்களூரு விரைவுச்சாலை என 31 ஆயிரம் கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை தொடங்கி வைக்க வருகை தந்ததால் எதிர்க்கவில்லை. கடந்த காலங்களில் நீட் தேர்வு போன்ற பிரச்னைகளில் மாணவர்கள் உயிரிழந்ததால் எதிர்ப்புத்தெரிவித்து கறுப்புக்கொடி காட்டினோம். நீட், பெட்ரோல் டீசல் விலை, போன்ற பிரச்னைகளில் இன்றும் ஒன்றிய அரசை எதிர்க்கிறோம்'' என விளக்கமளித்தார்.