சென்னை:தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படிப்பில் 762 இடங்களும், இஎஸ்ஐசி மருத்துவக்கல்லூரியில் 23 இடங்களும், அரசுப் பல் மருத்துவக்கல்லூரிகளில் 37 இடங்களும் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு அளிக்கப்படுகிறது. மேலும் கே.கே.நகர் இஎஸ்ஐசி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் எம்பிபிஎஸ் படிப்பில் 50 இடங்களும் அகில இந்திய ஒதுக்கீட்டின்கீழ் தேசிய மருத்துவ மாணவர் சேர்க்கைக்குழுவின் மூலம் நிரப்பப்பட உள்ளது.
அதேபோல், அகில இந்திய அளவில் மாநில மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங்களில் 15 சதவீதமும், மத்திய அரசின் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களில் உள்ள மருத்துவக்கல்வி இடங்கள் என 1 லட்சத்திற்கும் மேற்பட்ட இடங்களை நிரப்ப உள்ளது.
அகில இந்திய ஒதுக்கீட்டில் கடந்தாண்டு வரையில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கு மாணவர்கள் கல்லூரி மாற்றம் செய்ய 2 சுற்றுகள் அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், நடப்பாண்டில் 3 சுற்று கலந்தாய்வில் பங்கேற்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால், ஒரு மாணவர் அகில இந்திய ஒதுக்கீட்டிலும், மாநில அரசின் ஒதுக்கீட்டிலும் இடத்தை மாறி மாறி தேர்வு செய்ய முடியும்.
ஒரு மாணவர் அகில இந்திய ஒதுக்கீட்டில் இடத்தை தேர்வு செய்த பின்னர் 3-வது சுற்றில் மாநில ஒதுக்கீட்டு இடத்தில் சேர்ந்தால், அவர் அகில இந்திய ஒதுக்கீட்டில் எடுத்த இடம் காலியாகும். எனவே, அதன் பின்னர் நடைபெறும் ஸ்டே வேகன்சியில் அகில இந்திய ஒதுக்கீட்டில் அந்த இடம் நிரப்பாவிட்டால் காலியாகவே இருக்கும். அகில இந்திய ஒதுக்கீட்டு கலந்தாய்வில் சரியான தகவல் பரிமாற்றம் இல்லாமல் இருந்ததால் கடந்தாண்டு 6 எம்பிபிஎஸ் இடங்கள் காலியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து கல்வியாளர் நெடுஞ்செழியன் கூறும் பொழுது, ''இந்தியாவில் உள்ள மத்திய மாநில அரசுகளின் கல்வி நிறுவனங்கள், தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர் நிலை பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தேசிய மருத்துவக்குழுவினால் ஜூலை 20ஆம் தேதி முதல் செப்டம்பர் 30ஆம் தேதி வரை நான்கு சுற்றுகளாக நடத்தப்படுகிறது.
இந்த கலந்தாய்வில் மாணவர்கள் பங்கேற்பதற்கான தகவல் தொகுப்பில் வெளியிடப்பட்டுள்ள விவரங்கள் குழப்பத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. இதில் உள்ள விவரங்களை மாணவர்கள் சரியாகப் புரிந்து கொண்டு இடங்களைப் பூர்த்தி செய்வது மிகவும் சிரமமாக இருக்கும்.
மருத்துவப் படிப்பில் மாணவர்கள் முதல் மூன்று சுற்றில் கலந்து கொண்டு, கல்லூரிகளை மாற்றி தேர்வு செய்ய முடியும். அகில இந்திய ஒதுக்கீட்டில் இடத்தைத் தேர்வு செய்த மாணவர்கள் மாநிலத்திலும் இடத்தைத் தேர்வு செய்ய முடியும். அவர்கள் ஏதாவது ஒரு இடத்தில் மூன்று சுற்றுக்குள் தேர்வுசெய்து சேர வேண்டும்.
இறுதிச்சுற்றான ஸ்டே வேக்கன்சி கலந்தாய்வில் கலந்து கொள்ளும் மாணவர்கள் தங்களுக்குரிய இடங்களைத் தேர்வு செய்த பின்னர் அந்த இடத்தில் சேர வேண்டும். சேராவிட்டால் கலந்தாய்வில் பங்கேற்பதற்கு கட்டப்படும் தொகை திருப்பித் தரப்படாது. நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் உள்ள இடங்களில் சேர்வதற்கு தொகையாக 2 லட்சம் வரை செலுத்த வேண்டி உள்ளது. மேலும் இறுதிச்சுற்றில் மாணவர்கள் கல்லூரியை தேர்வு செய்த பின்னர் சேராவிட்டால் அவர்கள் அடுத்த ஓராண்டு நீட் தேர்வினை எழுதுவதற்குத் தடை விதித்தும் கல்லூரியில் சேர்வதற்கு தடை விதித்தும் தேசிய மருத்துவ ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அகில இந்திய ஒதுக்கீட்டில் இடங்களைத் தேர்வு செய்வதில் மாணவர்களுக்குப் பல்வேறு சிரமங்கள் உள்ளன. குறிப்பாக, மாணவர்கள் இளநிலை படிப்பினை முடித்த பிறகு குறிப்பிட்ட நாட்கள் பணிபுரிய வேண்டும் என்பதற்கான பாண்டு எழுதி வாங்கப்படுகிறது. ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு கல்லூரிக்கும் வேறுபடுகிறது. இந்த விவரம் மாணவர்களுக்கு சரியாக தெரியாமல் இடங்களை அகில இந்திய ஒதுக்கீட்டில் தேர்வு செய்துவிட்டு சிரமப்படுகின்றனர்.