சென்னை: அரியலூர் மாவட்டத்தில் சோழர் பாசன திட்டத்தை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எழுதிய கடிதத்தை சென்னை தலைமை செயலகத்தில் நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகனை சந்தித்து பாமக வழக்கறிஞர் பாலு அளித்தார். அதன் பின்னர் செய்தியாளிடம் பேசிய வழக்கறிஞர் பாலு, ”அரியலூர் சோழர் பாசனம் திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்ட ஆய்வறிக்கையை பட்ஜெட்டில் வெளியிட வேண்டும் எனவும், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அளித்த கடித்தை நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகனிடம் அளித்துள்ளதாக கூறினார்.
மேலும் சோழர் பாசனத் திட்டம் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த திட்டம் எனவும், இவற்றை செயல்படுத்தினால் அரியலூர் மாவட்டத்தில் 90,000 ஏக்கர் பாசன வசதி பெறும் எனவும் தெரிவித்தார். குறைந்த நிதி செலவில் இந்த திட்டத்தை செயல்படுத்தினால் அரியலூர் மாவட்டம் செழுமை பெறும். மேலும் அரியலூர் மாவட்டத்தின் மூன்றாவது பெரிய ஏரியான சுக்கிரன் ஏரியின் பரப்பளவு 1187 ஏக்கர். சுக்கிரன் ஏரி 1060 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டது. அன்றில் இருந்து இன்று வரை ஒருமுறை கூட சுக்கிரன் ஏரி முழுமையாக தூர்வாரப்படவில்லை.
ஒரு காலத்தில் தென்னை மரமே மூழ்கும் அளவுக்கு ஆழமாக இருந்த சுக்கிரன் ஏரியில், இன்று 5 அடி ஆழத்திற்கு கூட தண்ணீரைத் தேக்க முடியவில்லை. அரியலூர் மாவட்டத்தில் தூத்தூரில் அமைந்துள்ள தூத்தூர் ஏரி, காமரசவல்லியில் அரசன் ஏரி, ஏலாக்குறிச்சி வண்ணான் ஏரி, வேங்கனூர் ஆண்டியோடை ஏரி, சுள்ளான்குடி ராமுப்பிள்ளை ஏரி, பளிங்கநத்தம் மானோடை ஏரி போன்றவை 100 ஏக்கருக்கும் கூடுதலான பரப்பளவில் அமைந்துள்ள ஏரிகளாகும்.