சென்னையில் பொதுமக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்கப்படுவதாக சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது. இது குறித்து குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை குடிநீர் வாரியத்தின் சார்பில் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 200 வார்டுகளில் வசிக்கும் 85 லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு தினந்தோறும் வழங்கப்படும் 1,000 மில்லியன் லிட்டர் (எம்.எல்.டி) குடிநீரில் 11 மெட்ரிக் டன் குளோரின் செலுத்தப்பட்டு பாதுகாப்பான குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
சென்னை குடிநீர் வாரியம் சார்பில் கீழ்ப்பாக்கம் நீரேற்று நிலையம், புழல் நீரேற்று நீரேற்றும் நிலையம், சூரப்பட்டு நீரேற்றும் நிலையம், வீராணம் நீரேற்றும் நிலையம், செம்பரம்பாக்கம் நீரேற்றும் நிலையம், நெம்மேலி மற்றும் மீஞ்சூர் ஆகிய கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்கள் மூலமாக பொதுமக்களுக்கு தினந்தோறும் 1000 மில்லியன் லிட்டர் (எம்.எல்.டி) பாதுகாப்பான குடிநீர் சீராக வழங்கப்பட்டு வருகிறது.
பொதுமக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்கும் பொருட்டு சென்னை குடிநீர் வாரியத்தால் தினந்தோறும் கீழ்ப்பாக்கம், சூரப்பட்டு, செம்பரம்பாக்கம், புழல், வீராணம், நீரேற்று நிலையங்கள் மற்றும் 16 குடிநீர் விநியோக நிலையங்களில் 11 மெட்ரிக் டன் குளோரின் செலுத்தப்பட்டு பாதுகாப்பான குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.