பூந்தமல்லியில் படகில் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் சென்னை: மிக்ஜாம் புயல் காரணமாக, பூந்தமல்லி அருகே நசரத்பேட்டை ஊராட்சிக்கு உட்பட்ட தொகுதியில், வெள்ள நீர் புகுந்து வடியாத நிலையில், அப்பகுதியில் உள்ளவர்கள் படகின் மூலமாக பள்ளிகளுக்கும், பணிகளுக்கும் சென்று வரும் நிலை உள்ளதாக வருத்தம் தெரிவித்துள்ளனர்.
மிக்ஜாம் புயல் பாதிப்பு காரணமாக, கடந்த டிசம்பர் 4ஆம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதில் பல்வேறு பகுதிகளில் சாலைகள் மற்றும் குடியிருப்புகளில் வெள்ள நீர் சூழ்ந்ததால், மக்களின் இயல்வு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
இதனையடுத்து, மழைநீர் தேங்கிய பல்வேறு பகுதிகளில், பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு மழை நீர் வடிந்த நிலையில், பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். ஆனால், பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை ஊராட்சிக்கு உட்பட்ட தொகுதியில், மழை கராணமாக புகுந்த வெள்ள நீரானது வடியாத நிலையில், அப்பகுதியில் உள்ள மக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
குறிப்பாக, இப்பகுதியில் உள்ள குடியிருப்புகளைச் சுற்றிலும் இடுப்பளவு தண்ணீர் தேங்கி இருப்பதால், பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. கடந்த ஒரு வார காலமாக பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால், பொதுமக்கள் அனைவரும் வீட்டில் இருந்துள்ளனர். இந்நிலையில், நேற்று (டிச.11) பள்ளிகள் தொடங்கி இருப்பதால், அப்பகுதியில் உள்ளவர்கள் குழந்தைகளை படகின் மூலமாக பள்ளிகளுக்கு அனுப்பி வருகின்றனர்.
மேலும், தரைத் தளத்தில் உள்ள குடியிருப்புகளை சூழ்ந்த மழை நீர் வடியாததால், மாடியில் தஞ்சம் அடைந்த பொதுமக்கள், தங்களது பிள்ளைகளை ஏணி மூலமாக கீழே இறக்கி, ஊராட்சி நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள படகுகள் மூலம் பள்ளிகளுக்கு அனுப்பி வருகின்றனர். தெர்மாகோல் படகின் மூலமாக ஆபத்தான முறையில் பொதுமக்கள் பயணித்ததால், தற்போது ஊராட்சி நிர்வாகம் சார்பில் பெரிய அளவிலான படகுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த பகுதியில் வடியாத மழை நீரால், பஸ் சர்வீஸ் போன்று படகு சர்வீஸ் மூலமாக பள்ளிகளுக்கும், பணிகளுக்கும் அப்பகுதி மக்கள் சென்று வருகின்றனர். மேலும், செம்பரம்பாக்கம் ஏரி அருகில் இருப்பதால், இந்த பகுதியில் தண்ணீர் ஊற்று போல் வருகிறது. எனவே, இப்பகுதியில் முறையான வடிகால் அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க:காதலுடன் ஓடிய மகள்..காதலனின் தாயாரை நிர்வாணப்படுத்தி சித்ரவதை செய்த 7 பேர் கைது - கர்நாடகாவில் நடந்த கொடூரம்