தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குழந்தைகளுக்காக பெற்றோர்கள் ஒரு மணிநேரம் அதை ஆஃப் பண்ணுங்க! - செல்போனை பெற்றோர்கள் அணைத்து வைக்க ஆலோசனை

சென்னை: குழந்தைகள் தினத்தன்று இரவு 7.30 மணி முதல் 8.30 மணி வரை செல்போனை அணைத்து விட்டு பெற்றோர்கள் குழந்தைகளுடன் பேச வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை அறிவுரை வழங்கியுள்ளது.

school education

By

Published : Nov 6, 2019, 10:14 AM IST

நாளுக்கு நாள் தொழில் நுட்பம் இமாலய இலக்கை நோக்கி பயணிப்பதால் பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்குமிடையேயான இடைவெளி அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. வீட்டிற்குள் ஒருவர் முகத்தை மற்றொருவர் பார்த்து பேசும் பழக்கம் குறைந்துள்ளது. செல்போனில் மூழ்கிக் கிடக்கும் நாம் குழந்தைகளையும் அதே நிலைமைக்குத் தள்ளும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த பாதிப்பானது நகர்ப்புறம், கிராமப்புறம் என்ற வித்தியாசம் இல்லாமல் அனைத்து இடங்களிலும் வியாபித்திருக்கிறது. முன்னோர்களின் காலத்தில் கூட்டுக்குடும்பமாக இருந்த வாழ்க்கைமுறை எவ்வாறு தனிக்குடும்பமாக பிரிந்ததோ அதேபோன்ற நிலைதான் தனிக்குடும்பமும் சிதைந்து போகும் நிலை ஏற்பட்டுள்ளது. வீட்டில் இருக்கும் தாத்தா, பாட்டி குழந்தைகளிடம் அதிக கதைகளை கூறி மகிழ்விப்பர். தற்போது இந்த நிலை மாறிவிட்டது.

பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு அறிவுடன் ஆராயும் சமூக சிந்தனைகளை விதைப்பார்கள். ஆனால் நாடு போகும்போக்கை பார்த்தால் பெற்றோர்களுக்குதான் அதிக அறிவுரை வழங்க வேண்டியதாகிவிட்டது. கடந்த காலங்களில் வெகுதொலைவில் இருக்கும் உறவுகளை இணைக்கும் தகவல் தொடர்பு பாலமாக கடிதங்கள்தான் இருந்தது.

தற்போது தொலைபேசியிலேயே பல்வேறு வசதிகள் வந்துவிட்ட பிறகு உறவுகளுக்கான மதிப்பும், மரியாதையும் போய்விட்டது. எனவே, வீட்டில் குழந்தைகளுடன் அமர்ந்து பேசுவது கூட குறைந்து விட்டது.

இந்த சூழ்நிலையில் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில், "நவம்பர் 14 ஆம் தேதி குழந்தைகள் தினத்தன்று இரவு 7.30 மணி முதல் 8. 30 மணி வரை செல்போனை அணைத்துவிட்டு குழந்தைகளுடன் பெற்றோர்கள் உரையாட வேண்டும். இதனால், குழந்தைகளிடம் மகிழ்ச்சி , தன்னம்பிக்கை, அன்பு, புரிந்துகொள்ளுதல், மேலோங்கி உறவுகள் மேம்பட இந்த செயல் அமையும்.

இந்த நிகழ்ச்சியில் பங்குபெற பெற்றோர்களும், பள்ளிகளும் தனியார் நிறுவனத்துடன் தொடர்பு கொள்ள வேண்டும். தஞ்சாவூர் பெரியார் சிந்தனை உயராய்வு மையத்தின் மூலம் நடத்தப்படவுள்ள பெரியார் 1000 வினா விடைப் போட்டியில் மாணவர்களைப் பங்கு பெறச் செய்ய வேண்டும்.

இந்தப் போட்டி ஆறாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்படுகிறது. மாணவர்களுக்கு பாட வேளை, தேர்வு நேரம் ஆகியவை பாதிக்காத வகையில் தன்னார்வலர்களை அனுமதிக்கலாம். தொண்டு நிறுவனங்களுக்கு பள்ளிகளில் அனுமதி அளிக்கும் விவகாரத்தில் தலைமையாசிரியர்கள் தாமதம் செய்ய வேண்டாம்.

பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் ஏற்கனவே தனியார் நிறுவனங்களை பள்ளிகளில் அனுமதிக்கலாம் என ஒரு கடிதம் அனுப்பியிருந்தார்.தொண்டு நிறுவனம் என்ற பெயரில் மதம், ஜாதி, அரசியல் சார்ந்தவர்கள் எளிதாக மாணவர்களை அணுகி அவர்களின் கருத்துக்களை திணிக்க வாய்ப்புள்ளது" என அதில் குறிப்பிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details