சென்னை: உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ராகேஷ் குப்தா என்பவர், சென்னை பட்டாளம் ஹாஜி முகமது அப்பாஸ் தெருவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மகன் தேஜஸ் குப்தா(7), வேப்பேரியில் உள்ள தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தார். தந்தை ராகேஷ் குப்தா, சிறுவனை சென்னை பெரியமேட்டில், மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் இயங்கி வரும் 'மை லேடி' என்ற நீச்சல் பயிற்சி குளத்தில், கோடை கால நீச்சல் பயிற்சியில் சேர்த்துவிட்டார். நேற்று முன்தினம் (ஏப்.4) மாலையில் வழக்கம் போல் சிறுவனின் தாத்தா சசிகுமார் மற்றும் தந்தை ராகேஷ் இருவரும் சிறுவனை நீச்சல் பயிற்சிக்காக அழைத்துச் சென்றுள்ளனர். நீச்சல் குளத்திற்குள் பெற்றோருக்கு அனுமதியில்லாததால், சிறுவனின் தந்தையும், தாத்தாவும் வெளியே காத்திருந்ததாக தெரிகிறது.
பின்னர், பயிற்சியாளர்கள் செந்தில் மற்றும் சுமன் ஆகியோர் 4 அடி ஆழமுள்ள நீச்சல் குளத்தில், 15 குழந்தைகளுக்கு பயிற்சி அளித்து வந்ததாக தெரிகிறது. அப்போது சிறுவன் தேஜா குப்தா எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கியுள்ளார். பயிற்சியாளர்கள் கவனிக்காமல் போனதால், சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், அலட்சியமாக செயல்பட்ட பயிற்சியாளர்கள் செந்தில், சுமன் உள்ளிட்ட மூன்று பேரை நேற்று கைது செய்தனர்.
இந்த நிலையில் நீச்சல் குளத்தில் பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக பின்பற்றாத ஒப்பந்ததாரருக்கு நோட்டீஸ் வழங்கப்படும் என்றும், நிர்வாக ரீதியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சென்னை மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதுபோன்ற அசம்பாவிதங்களை தவிர்க்க நீச்சல் குளங்களுக்கு பின்வரும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
* சென்னை மாநகராட்சியின் நீச்சல் குளங்களில் 10 வயதுக்குட்பட்ட சிறுவர்களை அனுமதிக்கக்கூடாது.
* 14 வயதுக்குட்பட்ட சிறுவர்களை நீச்சல் தெரிந்த பெற்றோர்கள் அல்லது பெரியவர்கள் துணை இல்லாமல் அனுமதிக்க கூடாது.