தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையில் கடத்தப்பட்ட சிறுமியை ஒரு மணி நேரத்தில் மீட்ட காவல்துறை...!

சென்னை அடுத்த சிட்லப்பாக்கத்தில் தெருவில் விளையாடிக்கொண்டிருந்த போது கடத்தப்பட்ட குழந்தையை ஒரு மணி நேரத்தில் பத்திரமாக காவல்துறையினர் மீட்டுள்ளனர்.

By

Published : Nov 3, 2022, 7:26 AM IST

சென்னையில் கடத்தப்பட்ட சிறுமியை ஒரு மணி நேரத்தில் மீட்ட காவல்துறை
சென்னையில் கடத்தப்பட்ட சிறுமியை ஒரு மணி நேரத்தில் மீட்ட காவல்துறை

சென்னை: சிட்லபாக்கம் காவல் எல்லைக்குட்பட்ட, செம்பாக்கம், திருமலை நகர் முதல் மெயின் ரோட்டில் வசித்து வருபவர் வினோத். ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது 4½ வயது பெண் குழந்தை வர்ஷா வீட்டிற்கு வெளியில் விளையாடிக் கொண்டிருந்தார். சிறுமியுடன் இரண்டு ஆண் சிறுவர்களும் விளையாடிக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு ஆட்டோவில் வந்த மர்ம நபர் ஒருவர் சிறுமியையும் மட்டும் ஏற்றிக் கொண்டு, சிறுவர்களை விட்டு விட்டு சென்றுள்ளார். இதுகுறித்து அறிந்து அதிர்ச்சியடைந்த சிறுமியின் தந்தை வினோத் உடனடியாக சிட்லபாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன் பேரில் தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ், தாம்பரம் மற்றும் சென்னை காவல் எல்லைகளை உஷார்படுத்தி வாகன சோதனையில் ஈடுபட அறிவுறுத்தினார். அதனடிப்படையில் சிட்லபாக்கம், குரோம்பேட்டை, பள்ளிகரணை, தாம்பரம், பல்லாவரம் உள்ளிட்ட காவல் ஆய்வாளர்கள் போக்குவரத்து காவல்துறையினர் ஆகியோர் தலைமையில் 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டு சிறுமியை தேடி வந்தனர்.

பள்ளிகரணை துணை ஆணையர் ஜோஸ் தங்கையா அளித்த பேட்டி

சேலையூர், கேம்ப் ரோடு, வேளச்சேரி பிரதான சாலை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட இடங்களில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ஒரு மணி நேரமாக உட்புற சாலைகளில் சந்தேகத்திற்கிடமாக ஆட்டோவில் ஒரு சிறுமியை வைத்து சுற்றி வரும் மர்ம நபர் ஒருவர் இரண்டு இடங்களில் சிசிடிவியில் சிக்கியுள்ளார்.

அதன் பிறகு குரோம்பேட்டை எம்.ஐ.டி.மேம்பாலம் அருகே அந்த ஆட்டோவை போக்குவரத்து சிறப்பு உதவி ஆய்வாளர் சிவகுமார், தலைமைகாவலர் ஜலேந்திரன், முதல் நிலை காவலர் முத்துகுமார் ஆகியோர் மடக்கி பிடித்தனர். பின்னர் சிறுமியின் புகைப்படத்தை காவல்துறை உயர் அலுவலர்களுக்கு அனுப்பி உறுதி செய்த பின்னர் கடத்திய நபரை கைது செய்து ஆட்டோவை பறிமுதல் செய்தனர். சிறுமியை மீட்டு வீட்டிற்கே சென்று பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர்.

கைது செய்யப்பட்ட நபரிடம் பள்ளிகரணை துணை ஆணையர் ஜோஸ் தங்கையா நேரில் விசாரணை மேற்கொண்டார். விசாரணையில் அவர் குரோம்பேட்டை ராதாநகரை சேர்ந்த சம்சுதீன்(34), என்பதும் அவர் சிட்லபாக்கம் காவல் நிலைய சி பிரிவு சரித்திர பதிவேடு குற்றவாளி என்பதும் தெரியவந்தது. மேலும், சிறுமியை கடத்தியதற்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிகரணை துணை ஆணையர் ஜோஸ் தங்கையா, ”சிறுமி 5.15 மணியளவில் கடத்தப்பட்டதாக தகவல் கிடைத்தது. உடனடியாக தாம்பரம் மற்றும் சென்னை காவல் எல்லைகளை உஷார் படுத்தி, இரண்டு இடங்களில் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி தேடி வந்த நிலையில் எம்.ஐ.டி.பாலம் அருகே போக்குவரத்து காவல்துறையினர் ஆட்டோவை மடக்கி பிடித்து சிறுமியை மீட்டனர்.

கடத்தப்பட்ட ஒரு மணி நேரத்தில் சிறுமி மீட்கப்பட்டுள்ளார். கடத்தலுக்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா எனவும் விசாரணை நடத்தப்படுகிறது” என தெரிவித்தார்.

இதையும் படிங்க:இரண்டரை வயது குழந்தைக்குப் பாலியல் தொல்லை - இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறை

ABOUT THE AUTHOR

...view details