தமிழ்நாடு குழந்தை உரிமைகள் கண்காணிப்பகத்தின் மாநில அமைப்பாளர், பேராசிரியர் ஆண்ரூ சேசுராஜ் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில், 'கரோனா பெருந்தொற்றுக்கு பெற்றோரை இழந்த குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ள அறிவிப்புகளை தமிழ்நாடு குழந்தை உரிமைகள் கண்காணிப்பகம் வரவேற்கிறது.
உறுதியாகும் குழந்தைகளின் பாதுகாப்பு
பெற்றோரை இழந்த குழந்தைகளைக் குடும்பச் சூழலிலேயே பராமரிக்க அவர்களுக்கு 18 வயது முடியும் வரை மாதம் ரூ.3000 உதவித்தொகை அறிவித்து இருப்பது நல்லதொரு அறிவிப்பு. இதனால் குழந்தைகள் அவசியமில்லாமல் விடுதிகளில் சேர்க்கப்படுவது தவிர்க்கப்படும். குடும்ப பண்பாட்டுச் சூழலில் தொடர்ந்து குழந்தைகள் வளர வழிவகுக்கும்.
இந்த திட்டத்தினைச் செயல்படுத்த மாவட்டப் பணிக்குழுக்களை உருவாக்கும் அறிவிப்பையும் வரவேற்கிறோம். அந்தக் குழுவில் மாவட்டக் குழந்தை நலக் குழும உறுப்பினர், சைல்டுலைன், குழந்தைகளுக்குப் பணியாற்றி வரும் தொண்டு நிறுவனங்களின் பங்களிப்பை உறுதி செய்ய வேண்டும்.