தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சத்தமில்லாமல் அரங்கேறும் குழந்தைத் திருமணங்கள்: களநிலவரம் என்ன? - child marriages increase

ஒரு குழந்தைக்குத் திருமணம் செய்து வைப்பது, அந்தக் குழந்தைக்கு மன மற்றும் உடல்ரீதியான பிரச்னைகளை ஏற்படுத்துகிறது. ஒரு குழந்தையே குழந்தையை பெற்று எடுப்பதும், அதை வளர்ப்பதும் எத்தனை கடினம் என்பதை வார்த்தைகளால் சொல்லி மாளாது. இதனால் 23 விழுக்காட்டிற்கும் அதிகமாக குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் நோயால் அவதிப்படுகின்றனர். தங்களது பதின்பருவத்தின் இளமையைத் தொலைத்து, தங்கள் வயதுக்கு மீறிய பொறுப்புகளுடன் வாழ நிர்பந்திக்கப்படுகின்றனர்.

குழந்தை திருமணங்கள்
குழந்தை திருமணங்கள்

By

Published : May 27, 2021, 3:20 PM IST

கரோனா தொற்றால் பலர் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், தமிழ்நாடு அரசு அதைக் கட்டுப்படுத்தும் பணிகளில் மும்முரமாக உள்ளது. இந்நிலையில், குழந்தைகளின் திருமணங்கள் அதிகரித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. குழந்தைகள் நல அலுவலர்கள் வெறும் எச்சரிக்கை மட்டுமே விடுப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

குழந்தைத் திருமணங்கள்

கரோனா தொற்று முதல் அலையிலிருந்து தற்போது வரை தமிழ்நாடெங்கும் சுமார் 9 ஆயிரம் குழந்தைத் திருமணங்கள் நடந்துள்ளன. இவை அரசுக்கு வந்த தகவல்களின் அடிப்படையில் கணக்கிடப்பட்ட புள்ளிவிவரம். கள நிலவரம் இன்னும் அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது. சென்னையில் 28 குழந்தைத் திருமணங்கள் நடந்துள்ளதாக புகார்கள் பதிவாகியுள்ளன. இதில் சிறுமிகள் சிலர் கருவுற்றதால் திருமணம் நடந்திருப்பதாகத் தெரியவந்துள்ளது.

பதினாறு வயதை அடைந்த சிறுவர்களுக்கும் திருமணங்கள் நடந்துள்ளதாகத் தெரிவித்த பெயர் சொல்ல விரும்பாத குழந்தைகள் நல அலுவலர், 'குழந்தைத் திருமணத்தை ஒழித்தது தமிழ்நாட்டின் சாதனைகளில் ஒன்றாக இருந்தது. இந்நிலையில் இன்றைய கள நிலவரம் வருங்காலத்தின் பேராபத்தை குறிக்கிறது' என வேதனைத் தெரிவித்தார்.

குழந்தைத் திருமணத்திற்கு நோ!

திடுக்கிடச் செய்யும் ஆய்வு முடிவுகள்

முன்னணி குழந்தைகள் உரிமை அமைப்பான சைல்ட் ரைட்ஸ் அண்ட் யூ (CRY) சமீபத்தில் நடத்திய ஆய்வின்படி, 2020ஆம் ஆண்டு மே மாதத்தில் குழந்தைத் திருமணங்களில் 40 விழுக்காடு உயர்ந்துள்ளது. இதற்கு கரோனா தொற்று பரவலும், அதனால் ஏற்பட்ட நெருக்கடிகளும் ஒரு காரணம். தற்போது கரோனாவின் தாக்கம் முன்பைவிட அதிகமாகியுள்ளது. இந்நிலையில், மீண்டும் அரசு கவனம் செலுத்தத் தவறினால், குழந்தைகள் பல்வேறு வன்முறைகளை சந்திக்க நேரிடும்.

குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் கொடுமைகளை, சம்பந்தப்பட்ட துறைக்கு தெரியப்படுத்துவது கட்டாயம் என்று போக்சோ சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. குழந்தைத் திருமணமும் மிக மோசமான வன்முறை என்பது மறுக்கமுடியாத உண்மை.

குழந்தைத் திருமணம்

குழந்தைத் திருமணங்களைத் தடுப்பதில் சுணக்கம்

குழந்தைத் திருமணம் குறித்த தகவல்களை '1098' என்ற உதவி எண்ணை அழைத்து சம்பவ இடத்தை தெரிவித்தால், உதவி மைய அலுவலர்கள் அங்கு சென்று திருமணத்தை தடுத்து நிறுத்துவர். ஒரு குழந்தைத் திருமணத்தை நிறுத்தப் பின்னர் சட்டப்படி, அலுவலர்கள் அந்த குழந்தையை மீட்டு குழந்தைகள் நல குழுமத்திடம் ஒப்படைக்க வேண்டும்.

விசாரணை நடத்திய பின்னர், அந்த குழந்தையை ஒரு காப்பகத்தில் வைத்து அடைக்கலம் கொடுக்க வேண்டும். கரோனா தொற்றுப் பரவல் காலம் என்பதால், தடுத்து நிறுத்திய பின்னர் எச்சரிக்கை மட்டுமே விடுக்கப்படுகிறது. கடுமையான நடவடிக்கைகள் இல்லாததால், குற்றங்கள் நடக்கும் சாத்தியக்கூறுகளுக்கு வழிவகுக்கிறது.

குழந்தைத் திருமணத்திற்கு நோ!

தமிழ்நாடு குழந்தைகள் பாதுகாப்பு உரிமை ஆணையத்தின் முன்னாள் உறுப்பினர் பி. மோகன், ' குழந்தைகள் திருமணத்திற்கு பல காரணங்கள் உண்டு. முதலில் குடும்ப அழுத்தத்தினால் தான் பெரும்பாலான திருமணங்கள் நடக்கின்றன. முழு ஊரடங்கும் இதற்கு துணை காரணமாகியுள்ளது. பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படாததால் பெற்றோர் தங்களது குழந்தைகளுக்கு சீக்கிரமாக திருமணம் செய்து வைக்கின்றனர். சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்குத் தெரியாமல் நிறைய குழந்தைத் திருமணங்கள் நடக்கவும் வாய்ப்பிருக்கிறது' என்றார்.

குழந்தைத் திருமணத்திற்கு நோ!

கடுமையான நடவடிக்கை தேவை

அனைத்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள், சமூக நல அலுவலர்களுக்கு குழந்தைத் திருமணங்களை தடுப்பது குறித்து சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருப்பதாக சமூக நலத்துறை அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார். ஏதேனும் குழந்தை திருமணம் அலுவலர்களுக்கு தெரிந்து நடந்திருந்தால் கடுமையான நடவடிக்கை பாயும் என்றும் அவர் கூறினார்.

கரோனா தொற்று பரவலுக்கு மத்தியில் தான் குழந்தைத் திருமணங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அரசு கரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவது போலவே, குழந்தைகளின் எதிர்காலத்திற்கு கொள்ளி வைக்கும் திருமணங்களையும் தடுத்து நிறுத்தவேண்டும். அது இக்காலத்தின் தேவை!

குழந்தைத் திருமணங்கள் அதிகரிப்பதன் பின்னணி?

புகார் அளிக்க..

பதினெட்டு வயது பூர்த்தியடையாத ஆணோ, பெண்ணோ யாருக்குத் திருமண ஏற்பாடு நடந்தாலும் அதை தடுத்து நிறுத்த 1098 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.

தகவல் அளிப்பவரின் தகவல்கள் பாதுகாப்பாக வைக்கப்படும். காவல் நிலையம் அல்லது மாவட்ட சமூக நல அலுவலரின் அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம். காவல் துறையின் உதவியோடு அலுவலர்கள் அந்த குழந்தையை மீட்டு குழந்தைகள் நலக் குழுமத்திடம் ஒப்படைப்பார்கள். குழந்தைகள் நலக் குழுமத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் அந்தக் குழந்தையை விசாரணை செய்து காப்பகத்தில் ஒப்படைக்கலாமா அல்லது பெற்றோருக்கு அபராதம் விதிக்கலாமா என்பதை முடிவு செய்வர்.

ABOUT THE AUTHOR

...view details