சென்னை: தாம்பரம் அடுத்த கன்னடபாளையத்தைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (37) - வினோதா (35) தம்பதி. இவர்களுக்கு ஆறு வயது மற்றும் மூன்றரை வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர். ராதாகிருஷ்ணன் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில், நேற்று இரவு தாம்பரம் அருகே நடுவீரப்பட்டு பகுதியில் தனியார் கல்லூரியில் நடைபெற்ற ஜவான் படவிழாவை ராதா கிருஷ்ணன் தனது குடும்பத்துடன் பார்த்துவிட்டு, இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியுள்ளனர்.
அப்போது நடுவீரப்பட்டு அடுத்த தர்கா சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது மாடு ஒன்று குறுக்கே வந்துள்ளது. இதனால் மாட்டின் மீது மோதாமல் இருக்க வலது பக்கம் இருசக்கர வாகனத்தை ராதாகிருஷ்ணன் திருப்பி உள்ளார். அப்போது எதிரே வந்த டிப்பர் லாரி ஒன்று இருசக்கர வாகனத்தின் மீது வேகமாக மோதி உள்ளது.
இதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற நான்கு பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். இதில் ராதாகிருஷ்ணனின் மூன்றரை வயதுடைய இரண்டாவது மகன் ரூத்தேஷ்க்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால், ஆம்புலன்ஸ் மூலம் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், மற்ற மூவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து மருத்துவமனையில் பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்துள்ளார். மற்ற மூவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற சோமங்கலம் போலீசார், சிறுவனின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், விபத்தை ஏற்படுத்தி தப்பிச் சென்ற லாரி ஓட்டுநரைத் தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:தமிழ், ஆங்கில எழுத்துகளை தலைகீழாக எழுதி வியக்க வைக்கும் தூத்துக்குடி இளம்பெண்!