சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும் தனியார் அறக்கட்டளை ஒன்றின் பெயரில் குழந்தைகள் நல காப்பகம் இயங்கி வருகிறது. இந்த காப்பகமானது அரசு அங்கீகாரமும் பெற்று செயல்பட்டு வருகிறது. மேலும், இந்த குழந்தைகள் நல காப்பகத்திற்கு 72 வயது முதியவர் ஒருவர் உரிமையாளராக உள்ளார்.
அதேநேரம், காப்பக உரிமையாளரான இவர், பள்ளி ஆசிரியராக பணியில் இருந்து ஓய்வு பெற்றவர். இவ்வாறு உள்ள இந்த குழந்தைகள் நல காப்பகத்தில் பெற்றோரை இழந்த நிலையில் இருக்கும் 14 சிறுவர்கள் தங்கி வருகின்றனர். இந்த நிலையில், அங்கு வசித்து வரும் 13 வயது சிறுவன் ஒருவர், சில நாட்களுக்கு முன்பு யாருக்கும் தெரியாமல் குழந்தைகள் உதவி மைய எண்ணிற்கு தொடர்பு கொண்டுள்ளார்.
அப்போது, அந்த சிறுவன், தான் தங்கி இருக்கும் குழந்தைகள் நல காப்பகத்தில் உள்ள வார்டன் பல்வேறு விதமாக தனக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் சமூக நலத் துறை மற்றும் குழந்தை பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கினர்.
முதலில் சம்பந்தப்பட்ட குழந்தைகள் நல காப்பகத்திற்குச் சென்ற அதிகாரிகள், அங்கு ஆய்வு மேற்கொண்டனர். பின்னர், அருகில் இருந்த அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் ஒன்றையும் அவர்கள் அளித்துள்ளனர். இவ்வாறு அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், பாலியல் தொல்லை தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட 72 வயது முதியவரை கைது செய்துள்ளனர்.
இதனையடுத்து, புகார் அளித்த ஒரு சிறுவனுக்கு மட்டும்தான் குற்றம் சாட்டப்பட்ட முதியவர் பாலியல் தொல்லை அளித்தாரா அல்லது அங்கு வசித்து வரும் 14 சிறுவர்களுக்கும் பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதா என்ற பல்வேறு கோணத்தில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னதாக, விழுப்புரம் மாவட்டத்தில் இயங்கி வந்த அன்புஜோதி ஆசிரமத்தில் இருந்த ஆதரவற்றோர் காணாமல் போனதாகவும், அங்கு இருந்தவர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் எழுந்த விவகாரம் மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:துப்பட்டா அணியாத பெண்களே டார்கெட்..! - சென்னையில் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இளைஞர் கைது