சென்னை: அமைந்தகரையை சேர்ந்தவர் செல்வபிரகாசம்(27), இவர் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு லாவண்யா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் மாங்காடு அடுத்த செருகம்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வசித்து வந்தனர். இவர்களுக்கு இரண்டரை வயதில் சர்வேஸ்வரன் என்ற மகன் உள்ள நிலையில், கணவன், மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கடந்த சில மாதங்களாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில், தனது மகனை லாவண்யா அவருடன் வைத்து கொண்டு உள்ளார். சில வாரங்களுக்கு முன்பு சிவப்பிரகாசம், லாவண்யா வீட்டிற்க்கு சென்று பார்த்த போது வீட்டில் லாவண்யா இல்லை என்றும் மகன் சர்வேஸ்வரன் இறந்து விட்டதாக அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் தெரிவித்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
மேலும் மகன் இறந்து போன தகவலை தனக்கு தெரிவிக்காமல் குழந்தையை அடக்கம் செய்துவிட்டு லாவண்யா எங்கேயோ சென்று விட்டதாகவும் மகனின் சாவில் சந்தேகம் இருப்பதாக மாங்காடு போலீஸ் நிலையம் மற்றும் ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சிவப்பிரகாசம் புகார் ஒன்றை அளித்தார்.இது குறித்து மாங்காடு போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இதில் ஏற்கனவே தலையில் காயம் ஏற்பட்டு சர்வேஸ்வரன் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் இறந்து போனதால் மாங்காடு போலீசார் சர்வேஷ்வரன் உடலை பிரேத பரிசோதனை செய்து லாவண்யாவிடம் ஒப்படைத்த நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கை வரும் வரையில் போலீசார் காத்திருந்தனர். மேலும் லாவண்யா மற்றும் அதே பகுதியில் வசித்து இருந்த மணிகண்டன் ஆகிய இருவரிடமும் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் தலையில் காயம் ஏற்பட்ட நிலையில் சிறுவன் இறந்து இருப்பதாகவும் உடலில் அதிக அளவில் காயங்கள் இருப்பதாக பிரேத பரிசோதனை அறிக்கை வந்த நிலையில் லாவண்யா மற்றும் மணிகண்டன் ஆகிய இருவரிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டதில் குழந்தையை அடித்து சித்திரவதை செய்ததில் சர்வேஷ்வரன் இறந்து போனது தெரியவந்தது.