சென்னை, மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரூ.280 கோடி மதிப்பீட்டில் புதிய மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் தேனாம்பேட்டை மண்டலம், வார்டு-123 சி.பி. ராமசாமி சாலையில் ரூ.31 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணி மற்றும் கோடம்பாக்கம் மண்டலம், வார்டு 135க்குட்பட்ட அசோக் நகர் 19வது அவெள்பூவில் ரூ.5.8 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளையும் ஆய்வு செய்த தலைமைச் செயலாளர் இறையன்பு பணிகளை விரைந்து முடித்து உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வர உத்தரவிட்டார்.
தொடர்ந்து தேனாம்பேட்டை மண்டலம், வார்டு 123க்குட்பட்ட சி.பி. ராமசாமி சாலையில் ரூ.253 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள நகர்ப்புற சுகாதார நிலைய கட்டுமானப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்தப் பணிகளை விரைந்து முடித்து ஒரு மாதக் காலத்திற்குள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
CITIIS திட்டத்தின் கீழ் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் ரூ.90 கோடி மதிப்பீட்டில் உட்கட்டமைப்புகளை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் கோடம்பாக்கம் மண்டலம், நெசப்பாக்கம் பள்ளியில் ரூ.3.23 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் புனரமைப்பு பணிகளையும் ஆய்வு செய்தார்.