தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Chief Secretary Order: பள்ளிகளின் செயல்பாடுகளை கண்காணிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு! - chief secretary

Ennum Ezhuthum: பள்ளிகளில் 'எண்ணும் எழுத்தும் திட்டம்' கற்பிக்கப்படுவதையும், பள்ளிகளின் செயல்பாடுகள் குறித்தும் மாவட்ட ஆட்சியர்கள் ஆய்வு செய்ய தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார்.

chief secretary Shiv Das Meena directs district collectors to monitor the functioning of schools
மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 6, 2023, 10:48 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் 'எண்ணும் எழுத்தும் திட்டம்' கற்பிக்கப்படுவதையும், மாணவர்கள் மன அழுத்தம் இல்லாமல் கற்றுக்கொள்வதையும் மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும் எனவும், பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் உட்பட ஆசிரியர்கள் வகுப்பறையில் கற்பித்தல் மற்றும் ஆய்வு செய்யும் பணிகளையும் பள்ளி பார்வை செயலி மூலம் ஆய்வு செய்யலாம் என மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா (Shiv Das Meena) கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா எழுதியுள்ள கடிதத்தில், “நம்முடைய பள்ளிக்கூடங்களிலுள்ள ஆரம்ப வகுப்புகளில் ‘எண்ணும் எழுத்தும்’ திட்டத்தை முறையாக செயல்படுத்துவது தொடர்பான மிகவும் முக்கியமான விடயத்தை உங்கள் கவனத்திற்கு கொண்டுவரவே இந்த கடிதத்தை எழுதுகிறேன்.

ஒவ்வொரு குழந்தையும் தரமான கல்வியைப் பெறுவதையும், அவர்களின் கற்றல் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக அரசு மேற்கொள்ளும் முயற்சிகளின் பலன்களையும் உறுதிசெய்வது மாநிலத்தின் பொறுப்புள்ள அலுவலர்களாக நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.

அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட ‘எண்ணும் எழுத்தும்’ திட்டமானது ஆரம்பக் கல்விக்கான ஒரு புதுமையான முன்னோடி அணுகுமுறையைக் கொண்டிருக்கிறது. இது, குழந்தைகள் தங்களின் கற்றல் செயல்பாட்டில் ஈடுபாட்டோடு பங்கேற்கும் விதமாக செயலூக்கம் மிக்க இடங்களாக வகுப்பறைகளை மாற்றும் நோக்கத்தை கொண்டது.

வெறுமனே கேட்டுக்கொண்டு மட்டுமே இருக்கும் மரபான வழக்கமாக இது இருக்காது. அனுபவரீதியான கற்றலையும், சுய கண்டறிதல்களையும், சக மாணவர்களுடன் ஒருங்கிணைந்து கற்பதையும் இந்த திட்டம் ஊக்குவிக்கிறது. இது அச்சுறுத்தலற்ற மதிப்பீட்டு முறையை அறிமுகப்படுத்துகிறது. ஜனநாயகரீதியான, எல்லோரையும் உள்ளடக்கிய கல்வியை ஊக்குவிக்கிறது.

இந்தத் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தும் பொருட்டு, மாவட்டத்தில் உள்ள பள்ளிக்கூடங்களில் அவ்வப்போது ஆய்வு மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் ஆய்வு மேற்கொள்ளும்போது கீழே குறிப்பிட்டிருக்கும் அம்சங்களைக் கவனிக்க வேண்டும்.

கற்றல் நிலை: குழந்தைகள் தங்களின் கற்றல் நிலைக்கு ஏற்ப திறமையை வெளிப்படுத்துகிறார்களா என்பதை உறுதிப்படுத்தவும் ‘அரும்பு’, ‘மொட்டு’, ‘மலர்’ ஆகிய ஒவ்வொரு வகுப்பிற்கும் ஏற்ற அறிவுறுத்தல்களை அவர்கள் பெறுகிறார்களா என்பதை உறுதிப்படுத்தவும்.

கற்றல் விளைவுகள்: ஆசிரியரின் கையேடு மற்றும் செயல்முறைப் புத்தகங்களில் தெளிவாக கோடிட்டுக்காட்டப்பட்டுள்ள கற்றல் விளைவுகள் எட்டப்படுகின்றனவா என்பதை சரிபார்க்கவும்.

செயல்பாடுகள்: கற்றல் விளைவுகளுடன் எல்லா நடவடிக்கைகளும் ஒத்துப்போகின்றனவா என்பதை உறுதிப்படுத்தவும். ஆசிரியர்களின் கையேடு மற்றும் செயல்முறைப் புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ள எல்லாவற்றிலும் ஆசிரியர்களும் மாணவர்களும் ஈடுபடுவதை உறுதிப்படுத்தவும்.

மகிழ்ச்சி மற்றும் மன அழுத்த நிலைகள்:வகுப்பறைச் சூழலில், குழந்தைகள் மகிழ்ச்சியாகவும் மன அழுத்தமின்றியும் இருக்கிறார்களா என்பதைக் கவனிக்கவும்.

சிறப்புப் பகுதிகள்: படைப்பாற்றலையும் திறமையையும் ஊக்குவிக்கும் விதமாக, ‘கதைப் பகுதி’, ‘பாடல் பகுதி’, ‘செயல்பாடுகள் பகுதி’, ‘கலை மற்றும் கைவினைப் பகுதி’, ‘வாசிப்புப் பகுதி’ உருவாக்கப்பட்டிருக்கின்றனவா என்றும், அவையெல்லாம் முறையாகப் பயன்படுத்தப்படுகின்றனவா என்றும் சரிபார்க்கவும்.

அச்சுறுத்தலற்ற அணுகுமுறை: கற்பித்தல் முறைகளில் இத்தகைய முன்னுதாரண மாற்றத்தை வழிநடத்தும் ஆசிரியர்களை ஊக்குவிக்கவும் வழிகாட்டவும் உதவ வேண்டுமே தவிர நீங்கள் பார்வையிட செல்வது அச்சுறுத்துவதாக இருக்கக் கூடாது.

உட்கட்டமைப்பும் வசதிகளும்: முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் மற்றும் மதிய உணவுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உணவின் தரத்தை மதிப்பிடவும். சுற்றுப்புறத் தூய்மையையும், கழிப்பறைகள், தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளையும் உறுதிசெய்ய வேண்டும் என்பதைத் தனியாக சொல்லத் தேவையில்லை.

பள்ளி சுகாதாரத் திட்டம்: தேசிய சுகாதார இயக்கம் மற்றும் பொது சுகாதார அமைப்புடன் ஒருங்கிணைந்து பள்ளி சுகாதாரத் திட்டத்தைத் திறம்பட செயல்படுத்துவதை உறுதிசெய்யவும். அனைத்துக் குழந்தைகளின் சுகாதாரப் பரிசோதனையும் கைப்பேசி செயலி மூலம் ஆசிரியர்களால் நடத்தப்படுவதை உறுதிசெய்யவும்.

இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதை மேற்பார்வையிடுவதில் நம்முடைய கூட்டு முயற்சியானது நம் மாணவர்களுக்கு ஈடுபாட்டை உருவாக்குவதிலும் பயனுள்ள கற்றல் அனுபவத்தை வழங்குவதிலும் இன்றியமையாததாகும். நம் ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் சவால்களைக் கண்டறிந்து அவற்றை சரிசெய்வதன் மூலம் நம் மாணவர்களின் நலனை மேம்படுத்த முடியும். இந்த முன்முயற்சியை மேலும் வெற்றிகரமாக செயல்படுத்த முடியும்.

இதற்கான உங்களின் அர்ப்பணிப்பு மிகவும் பாராட்டுக்குரியது. மேலும், நீங்கள் இந்த ஆய்வுகளை விடாமுயற்சியுடனும் நம் மாணவர்களின் நலன்களைக் கருத்தில் கொண்டும் செய்வீர்கள் என்று நான் நம்புகிறேன். இந்த ஆய்வுகளுக்காக நீங்கள் பள்ளிப் பார்வை செயலியைப் பயன்படுத்தலாம்.

பள்ளிக்கல்வித் துறையின் அனைத்து மேற்பார்வை அலுவலர்களும், முதன்மைக் கல்வி அலுவலர் முதல் வட்டாரக் கல்வி அலுவலர் வரை, பள்ளிகளைத் தவறாமல் ஆய்வுசெய்வதையும், வகுப்பறைகளைக் கண்காணிப்பதையும் பள்ளிப்பார்வை செயலி மூலம் நீங்கள் உறுதிசெய்யலாம்.

இதையும் படிங்க:G20 மாநாடு; தயார் நிலையில் மருத்துவக்குழு - டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்!

ABOUT THE AUTHOR

...view details