தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அன்று குடும்பத்தின் முதல் பட்டதாரி... இன்று அரசு அலுவலர்களுக்கெல்லாம் முதல்வர்! - shanmugam ias

சேலம் மாவட்டத்தின் குக்கிராமத்தில் பிறந்து, தமிழ்நாட்டின் 46ஆவது தலைமைச் செயலாளர் என்ற நிலைக்கு உயர்ந்துள்ளார் க. சண்முகம்.

சண்முகம்

By

Published : Jun 29, 2019, 2:25 PM IST

Updated : Jun 29, 2019, 3:05 PM IST

தமிழ்நாட்டின் மூத்த ஐஏஎஸ் அலுவலர்களில் ஒருவரான க. சண்முகம் ஐஏஎஸ், புதிய தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள குக்கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் சண்முகம். குடும்பத்தின் முதல் பட்டதாரியான இவர், வேளாண் துறையில் எம்.எஸ்.சி பட்டம் பெற்றுள்ளார்.

க.சண்முகம் ஐஏஎஸ்

1985ஆம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணியில் சேர்ந்த சண்முகம், சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களின் ஆட்சியராகப் பணியாற்றினார்.

அதேபோல், தமிழ்நாடு அரசின் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆகியவற்றின் முதன்மை செயலாளராகவும் பணியாற்றியுள்ள இவர், 2010ஆம் ஆண்டு மே 19ஆம் தேதி அன்றைய முதலமைச்சர் கருணாநிதியால் தமிழ்நாடு நிதித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டார்.

அன்று முதல் ஒன்பது ஆண்டுகளாக அந்த துறையின் செயலாளராகப் பணியாற்றி வருகிறார். திமுக ஆட்சி முடிவடைந்து அதிமுக அரசு பொறுப்பேற்றவுடன் அனைத்து துறைகளின் செயலாளர்களையும் மாற்றிய ஜெயலலிதா, இவரை மட்டும் மாற்றவில்லை.

தலைமைச் செயலகம்

ஏனெனில், திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட இலவச வண்ணத் தொலைக்காட்சி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களால் கடும் நிதி நெருக்கடியில் சிக்கித்தவித்த நிதித்துறையை தனது நேர்த்தியான நிர்வாகத் திறனால் மீட்டவர்தான் சண்முகம் ஐஏஎஸ்.

அதன் காரணமாக அந்த துறையின் செயலாளராக நீடித்த இவர், அதிமுக அரசின் ‘அம்மா உணவகம்’ உள்ளிட்ட முக்கிய நலத்திட்டங்களுக்கும் நிதி ஒதுக்கீடு செய்து, அதனைத் திறம்படவும் செயல்படுத்திக் காட்டினார். அந்த வகையில், திமுக, அதிமுக உள்ளிட்ட இரண்டு கட்சிகளின் ஆட்சியிலும், கருணாநிதி, ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி என நான்கு முதல்வர்களிடத்தில் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உண்டு.

சண்முகம் ஐஏஎஸ்

சமீபத்தில் அரசு ஊழியர்கள் பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டபோது, பழைய பென்ஷன் திட்டத்தை அமலுக்குக் கொண்டு வந்தால் அரசுக்கு நிதிச்சுமை அதிகரிக்கும் என்பதில் கடைசி வரை உறுதியாக இருந்தார். இறுதியில் அந்த போராட்டமே நீர்த்துப் போனது.

எதிர்க்கட்சியின் பாராட்டு:

2019 பிப்ரவரி மாதம் நடைபெற்ற பட்ஜெட் மீதான விவாதத்தின்போது நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் அடுக்கடுக்கான கேள்விகளால் துளைத்தார். அப்போது, துரைமுருகனுக்கு பதிலளிக்க ஓ.பன்னீர்செல்வத்துக்கு நிதித்துறை செயலாளர் சண்முகம் சில தகவல்களை அவ்வப்போது எடுத்துக்கொடுத்துக் கொண்டிருந்தார். அப்போது குறுக்கிட்ட துரைமுருகன், ‘உங்கள் நிதித்துறை செயலாளர் ரொம்பவும் கெட்டிக்காரர். இப்போது உங்களுக்கு பேச குறிப்பு எடுத்து கொடுக்கும் இதே ஐஏஎஸ் தான் (சண்முகம்) நாங்கள் ஆட்சியில் இருக்கும்போது உங்களுக்கு பதிலளிக்க எங்களுக்கு குறிப்பு எழுதிக் கொடுத்தார்’ என்றதும் அவையே சிரிப்பலையில் அதிர்ந்தது.

க.சண்முகம்

இந்நிலையில், தலைமைச் செயலாளராக இருந்த கிரிஜா வைத்தியநாதனின் பதவிக்காலம் நாளையுடன் (ஜூன் 30) முடிவடைவதையடுத்து, புதிய தலைமைச் செயலாளராக க.சண்முகம் நியமிக்கப்பட்டுள்ளார்.

Last Updated : Jun 29, 2019, 3:05 PM IST

ABOUT THE AUTHOR

...view details