சென்னை:நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு முதன்மைச் செயலாளர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தூய்மைப் பணியாளர்கள் மேம்பாட்டுத் திட்டத்தை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2022 டிசம்பர் 9ஆம் தேதி மதுரையில் தொடங்கி வைத்தார்.
இந்தத் திட்டத்தின் கீழ் நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு பல்வேறு நலத் திட்டங்கள் வழங்குவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில், கழிவுநீர் கட்டமைப்புகளை தூர்வாருபவர்கள், கழிவுநீர்த் தொட்டிகளை சுத்தம் செய்பவர்கள், வணிக நிறுவனங்கள், பொது மற்றும் சமூக கழிப்பறைகளை சுத்தம் செய்து பராமரிப்பவர்கள், கழிவுநீர் கட்டமைப்பு மற்றும் உந்து நிலையங்களை இயக்கி பராமரிப்பு பணிகளை மேற்கொள்பவர்கள், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களின் இயக்கம் மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்பவர்கள் முக்கிய தூய்மைப் பணியாளர்களாக (Core Sanitation Workers) கருதப்படுவர்.
முதற்கட்டமாக, பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலம்-6, மதுரை மாநகராட்சி மண்டலம்-3, புதுக்கோட்டை மற்றும் பொள்ளாச்சி நகராட்சிகள், சேரன்மாதேவி பேரூராட்சி என ஐந்து நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றக்கூடிய முக்கிய தூய்மை பணியாளர்கள் குறித்த கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும் பயிற்சி பெற்ற பணியாளர்களால், முக்கிய தூய்மைப் பணியாளர்களின் இறுதிப் பட்டியல் சரிபார்க்கப்பட்டு 2,198 முக்கிய தூய்மைப் பணியாளர்கள் முதற்கட்டமாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இரண்டாம் கட்டமாக, முக்கிய தூய்மைப் பணியாளர்களை கணக்கெடுக்கும் பணிகள் 646 நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளுக்கு விரிவு படுத்தப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதற்கான கணக்கெடுக்கும் பணிகள் தமிழ்நாடு நகர்ப்புர வாழ்வாதார இயக்ககம் (NULM) மூலம் மேற்கொள்ளப்படுகிறது. மகளிர் சுய உதவிக் குழுவின் உறுப்பினர்களை கணக்கெடுப்பாளர்களாக தேர்வு செய்து அவர்களுக்கான சிறப்பு பயிற்சிகள் வழங்கப்படும். கணக்கெடுப்பாளர்களாக பயிற்சி பெற்ற மகளிர் சுய உதவிக் குழுவினர்களைக் கொண்டு முக்கிய தூய்மை பணியாளர்கள் கணக்கெடுக்கப்படுவார்கள்.
அவர்களது விவரங்களை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு அனுப்பி வைத்து சரிபார்க்கப்பட்ட பின்னர் முக்கிய தூய்மைப் பணியாளர்கள் பட்டியல் வெளியிடப்படும். முக்கியத் தூய்மைப் பணியாளர்களாக தேர்வு செய்யப்படுபவர்களின்
பணித்தன்மைக்கேற்ப பாதுகாப்பான முறையில் பணி செய்வது குறித்த பயிற்சிகள் வழங்கப்படும்.
இப்பயிற்சியின் போது, 2022ஆம் ஆண்டு தமிழ்நாடு மனித கழிவுகளை அகற்றும் தொழில் புரிவோர் தடுப்பு மற்றும் அவர்களது மறுவாழ்வு விதிகளின்படி, பாதுகாப்பு கவசங்களை முறையாக பயன்படுத்துவது, அந்தந்தப் பணிக்கு ஏற்றவாறு எவ்வாறு பாதுகாப்பு கவசங்களை அணிந்து பயன்படுத்துவது போன்றவை தொடர்பான உரிய நடைமுறைகள் விளக்கங்கள் அளிக்கப்பட்டு, பயிற்சிகள் வழங்கப்படும்.