சென்னை:பெருநகர சென்னை மாநகராட்சியில் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ், ரூ.55.61 கோடி மதிப்பீட்டில் 78.29 கிலோ மீட்டர் நீளத்தில் 452 சாலைகள், நகர்ப்புற உட்கட்டமைப்பு சேமிப்பு நிதித் திட்டத்தின்கீழ் ரூ.29.71 கோடி மதிப்பீட்டில் 51.37 கிலோ மீட்டர் நீளத்தில் 300 சாலைகள், நகர்ப்புற உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.39.39 கோடி மதிப்பீட்டில் 75.16 கிலோ மீட்டர் நீளத்தில் 405 சாலைகள் என மொத்தம் ரூ.124.71 கோடி மதிப்பீட்டில் 204.82 கிலோ மீட்டர் நீளத்தில் பேருந்து சாலைகள் மற்றும் உட்புறச்சாலைகள் உட்பட 1,157 சாலைகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும், நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ், ரூ.151 கோடி மதிப்பீட்டில் 221.88 கிலோ மீட்டர் நீளத்தில் 1,408 சாலைகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் நடைபெற்று வரும் சாலைப்பணிகளை கண்காணிக்க முதன்மைச் செயலாளர், ஆணையாளர் தலைமையில் அலுவலர்கள், பொறியாளர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டு, அக்குழுவினர் கண்காணிப்பில் இந்த சாலைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு நேற்று (13.3.23) இரவு 10.30 மணியளவில் தேனாம்பேட்டை மண்டலம், வள்ளுவர் கோட்டம் பிரதான சாலையில் ரூ.109.40 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக மேற்கொள்ளப்பட்டு வரும் தார்ச்சாலை அமைக்கும் பணியினையும், அதனைத் தொடர்ந்து, ராமகிருஷ்ணா மடம் சாலையில் ரூ.121.50 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக மேற்கொள்ளப்பட்டு வரும் தார்ச்சாலை அமைக்கும் பணியினையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.