தமிழ்நாட்டில் கரோனா பரவல் காரணமாக கடந்தாண்டு பள்ளிகள் மூடப்பட்டு, மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்த பள்ளிக் கல்வித் துறைக்குத் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருந்தது. அப்போது, பிளஸ் 2 தேர்வு முடிந்த நிலையில், பிற வகுப்புகளுக்குத் தேர்வுகள் நடத்தாமல் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து பள்ளிகள் நடத்த இயலாத சூழ்நிலை இருந்துவந்ததால், ஆன்லைன் வகுப்புகள் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டன.
இந்நிலையில், கரோனா தொற்று குறைந்ததால் இந்தாண்டு தொடக்கத்தில் கல்லூரிகள், பள்ளிகளில் 9, 10, 11, 12ஆம் வகுப்புகள் மட்டும் திறக்கப்பட்டன. ஆனால், நாட்டில் பரவ தொடங்கிய கரோனாவின் இரண்டாவது அலை காரணமாக, மாணவர்களுக்குத் தொற்று பாதிப்பு ஏற்பட தொடங்கியது. இதனால் ஆசிரியர்கள் மூலம் வீட்டில் உள்ளவருகும் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டது.
இதன் காரணமாக, பிளஸ் 2 வகுப்பு மாணவர்கள் தவிர மற்ற மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி அடைந்ததாகத் தமிழ்நாடு அரசு அறிவித்தது. பிளஸ் டூ மாணவர்களுக்கு மருத்துவம், பொறியியல் துறை சார்ந்த கல்லூரி படிப்புக்குச் செல்ல வேண்டும் என்பதால் அதற்கு மட்டும் தேர்வு நடத்துவது என முடிவு செய்து மே 3ஆம் தேதி அன்று தேர்வு தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் மே இரண்டாம் தேதி வாக்கு எண்ணிக்கை காரணமாக மே 5ஆம் தேதி தேர்வு தொடங்கும் என அறிவிக்கப்பட்டது.
தற்போது, தமிழ்நாட்டில் கரோனா பரவல் உச்சத்தைத் தொட்டுள்ளது. மூன்று மாதங்களில் கடந்த ஆண்டு எட்டிய உச்சத்தை 30 நாளில் எட்டியுள்ளது. நேற்று மட்டும் 8 ஆயிரம் என்கிற எண்ணிக்கையை நெருங்கியுள்ளது. கரோனா பரவல் அதிகரிப்பால் அகில இந்திய அளவில் நடக்கும் சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்புத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ பிளஸ் டூ தேர்வும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
எனவே, தமிழ்நாட்டிலும் பிளஸ் 2 தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்கின்ற கோரிக்கை வலுத்துவருகின்றது. கரோனா பரவல் வரும் மாதத்தில் அதிகரிக்கும் என்றும், அதனை முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர இன்னும் இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகலாம் என்றும் சுகாதாரத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, தேர்வை தற்போது ஒத்தி வைப்பதே சிறந்தது எனத் தமிழ்நாடு அரசுக்குச் சுகாதாரத் துறை பரிந்துரை செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், பிளஸ் 2 பொதுத்தேர்வை நடத்துவதா ஒத்தி வைப்பதா என்பது குறித்து தலைமைச் செயலர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில் தலைமைச் செயலகத்தில் இன்று(ஏப்ரல்.15) மாலை 4 மணிக்கு ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் சுகாதாரத் துறை செயலர், வருவாய்த் துறை ஆணையர், பள்ளிக் கல்வித் துறைச் செயலர், உயர்கல்வித் துறை செயலர் உள்ளிட்ட முக்கிய அலுவலர்கள் கலந்துகொள்கின்றனர். மேலும் இந்த கூட்டத்தின் முடிவில் தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் எனக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க:’கரோனாவின் 2ஆவது அலை முற்றிலும் கட்டுப்பாட்டை மீறிவிட்டது’ - தமிழ்நாடு அரசு