தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஊழியர்களின் சலுகையைப் பறித்ததால் வருவாயில் பற்றாக்குறை குறைவு: தலைமைச்செயலக சங்கத்தினர் அதிர்ச்சி - government employees affected for tn budget

அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் - ஓய்வூதியர்கள் ஆகியோருக்கு வழங்கப்பட வேண்டிய அகவிலைப்படியினை ஆறு மாதம் காலந்தாழ்த்தி நிலுவைத் தொகையினை மறுத்து, அதன் மூலம் ஈட்டிய வருவாயினைக் கொண்டு, வருவாய் பற்றாக்குறை குறைந்து விட்டது என்று பெருமை கொள்வதில் என்ன நியாயம் இருக்கிறது? என தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கத்தின் தலைவர் வெங்கடேசன் மற்றும் செயலாளர் ஹரிசங்கர் கூட்டாக தெரிவித்துள்ளனர்.

Chief Secretariat Association
தலைமைச் செயலகச் சங்கம் அதிர்ச்சி தகவல்

By

Published : Mar 20, 2023, 5:35 PM IST

சென்னை: தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கத்தின் தலைவர் வெங்கடேசன், செயலாளர் ஹரிசங்கர் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாடு அரசின் 2023 - 24ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் தொடர்பாக எந்தவித அறிவிப்பும் வெளியிடப்படாததற்கு தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கம் கடும் அதிருப்தியினை வெளிப்படுத்தியுள்ளது.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தொடர்பான தேர்தல் கால வாக்குறுதிகளான, புதிய ஓய்வூதியத் திட்டம் கைவிடப்பட்டு பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் நடைமுறைக்குக் கொண்டு வரப்படும். அரசுத் துறைகள், கல்வி நிறுவனங்களில் காலியாக உள்ள 3.5 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும் ஆகியவை குறித்து தமிழக அரசின் 2023 - 24ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையிலும் எந்தவித அறிவிப்பும் வெளியிடப்படாதது அனைத்து பணியாளர்கள் மத்தியிலும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

அதோடு மட்டுமல்லாமல், 2021-ல் இந்த அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர், வழங்கப்பட்ட மூன்று தவணை அகவிலைப் படிகளை ஆறு மாதம் காலம் தாழ்த்தி, நிலுவைத் தொகையானது மறுக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசு வழங்கும் அகவிலைப்படியினை அதே தேதியில் மாற்றமின்றி நிலுவைத் தொகையுடன் வழங்குவதற்கான கொள்கை முடிவு அறிவிக்கப்படவில்லை. ஆண்டுக்கு ஒரு முறை 15 நாட்கள் ஈட்டிய விடுப்பினை சரண் செய்வது என்பது காலவரையறையின்றி முடக்கப்பட்டுள்ளது.

மேலும் 2023ஆம் ஆண்டில் 2000-க்கும் குறைவான காலிப் பணியிடங்களை நிரப்பவதற்கான இலக்கானது, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது. பணியாளர்களின் பணிமூப்பு குறித்தான உச்ச நீதிமன்ற வழக்கு காரணமாக, தலைமைச்செயலகத்தில் உதவிப்பிரிவு மற்றும் உதவியாளர் நிலையில் ஓராண்டிற்கு மேலாகப் பதவி உயர்வு வழங்கப்படாமல் இருப்பதற்கான அரசின் நிலைப்பாடு குறித்து எந்த அறிவிப்பும் இல்லை.

தலைமைச் செயலகத்தைப் பொறுத்தவரையில், கடும் இட நெருக்கடி உள்ள நிலையில், அதைக் களைவதற்கான வழிமுறைகள் குறித்த எந்த நிலைப்பாடும் வெளியிடப்படவில்லை. பதவி உயர்வுகள் எந்தவித தாமதமுமின்றி உரிய தேதியில் வழங்கப்படும் என்ற அரசின் கொள்கை அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

மேலும் அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் - ஓய்வூதியர்கள் ஆகியோருக்கு வழங்கப்பட வேண்டிய அகவிலைப் படியினை ஆறு மாத காலம் காலந்தாழ்த்தி நிலுவைத் தொகையினை மறுத்து, அதோடு 15 நாட்கள் சரண் விடுப்பு சலுகையினைப் பறித்து, அதன் மூலம் ஈட்டிய வருவாயினைக் கொண்டு, வருவாய் பற்றாக்குறை குறைந்து விட்டது என்று பெருமை கொள்வதில் என்ன நியாயம் இருக்கிறது?

அரசு ஊழியர்களின் சலுகையை பறித்ததால் வருவாயில் பற்றாக்குறை குறைவு

4 இலட்சத்திற்கும் மேலாக உள்ள காலிப் பணியிடங்களை நிரப்பாமல், படித்து விட்டு அரசின் வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்களின் அரசு வேலைவாய்ப்பு கனவினை இருளாக்கி அதன் மூலம் மிச்சப்படுத்தும் வருவாயைக் கொண்டு வருவாய் பற்றாக்குறை குறைந்துள்ளது என்பது 69 விழுக்காடு சமூக நீதிக்கு எதிரானதல்லவா? தமிழக முதலமைச்சர் அரசு ஊழியர்கள் - ஆசிரியர்களின் வாழ்வாதார தேர்தல் கால வாக்குறுதிகள் குறித்து நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரில் அறிவிப்பு வெளியிட வேண்டும்" எனவும் அதில் கூறியுள்ளனர்.

இதையும் படிங்க: அதிமுக ஆட்சியில் சிறப்பான பட்ஜெட்; அது ஓபிஎஸ்ஸால் தானே என மடக்கிய செய்தியாளர்; ஜெர்க் ஆன ஈபிஎஸ்!

ABOUT THE AUTHOR

...view details