சென்னை: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (ஜனவரி 9) வட அமெரிக்க தமிழ் சங்கப் பேரவை, தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் இணைந்து நடத்திய உலகத் தமிழ் புத்தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில், உலகத் தமிழ் முதலீட்டாளர்களையும், தமிழ்நாட்டில் உள்ள புத்தொழில் நிறுவனங்களையும் இணைக்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ள Global Tamil Angels (www.tamilangels.fund) இணையதளத்தை தொடங்கி வைத்தார்.
அதன்பின் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “நம் மாநிலத்தில் புத்தொழில் நிறுவனங்களுக்கான நல்லதொரு சூழலை உருவாக்கும் நோக்கத்துடன், பல்வேறு ஆக்கப்பூர்வமான புதிய செயல்திட்டங்களை அரசு பொறுப்பேற்றதிலிருந்து செயல்படுத்தி வருகிறது. புத்தொழில் சார்ந்த செயல்பாட்டுக்கான 'லீடர்'(leader) அங்கீகாரத்தினை ஒன்றிய அரசின் ஸ்டார்ட் அப் இந்தியா (Startup India) அமைப்பு தமிழ்நாட்டுக்கு வழங்கியுள்ளது.
தமிழ்நாட்டில் இயங்கும் புத்தொழில்களுக்கான முதலீடுகள் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு, சுமார் 1.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கடந்த ஆண்டு கிடைத்துள்ளன. இது 2021ஆம் ஆண்டை ஒப்பிடும்போது 70 விழுக்காடு அதிகமாகும். இந்தியாவில் புத்தொழில் முதலீடுகளை அதிகம் ஈர்க்கும் பெங்களூரு, மும்பை, டெல்லி போன்ற நகரங்களில் இந்த விழுக்காடு கடந்த ஆண்டு எதிர்மறையாக இருந்தது. அத்தகைய மந்தமான பொருளாதாரச் சூழலிலும் தமிழ்நாட்டின் மீது முதலீட்டாளர்களின் நம்பிக்கையை இது காட்டுகிறது.
புத்தொழில் சார்ந்த முன்னெடுப்புகளில் மட்டுமல்ல, ஒட்டுமொத்த வளர்ச்சியிலும் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக இருப்பதை, அண்மையில் 'இந்தியா டுடே' என்ற ஏட்டின் ஆய்வறிக்கை கூறியது. தொழில்கள் தொடங்கி நடத்துவதற்கான இலகுவான சூழலை அமைத்து இருப்பதிலும் பதிமூன்றாம் இடத்தில் இருந்து, மூன்றாம் இடத்திற்கு தமிழ்நாட்டை நாம் மேம்படுத்தி இருக்கிறோம். ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான கொள்கை, வான்வெளி மற்றும் பாதுகாப்பு தொழிற்கொள்கை ஆகியவை உருவாக்கப்பட்டுள்ளது.
பசுமை தொழில்நுட்பம், ஊரக வாழ்வாதார மேம்பாடு மற்றும் பெண்களை முதன்மை பங்குதாரர்களாகக் கொண்ட புத்தொழில் நிறுவனங்களுக்கு சிறப்பு சலுகைத் தொகுப்புக்கான அரசாணை ஒன்றும் அண்மையில் வெளியிடப்பட்டது. இதனை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அனைத்துத் துறை வளர்ச்சியை இலக்காகக் கொண்டது நமது அரசு. அதில் தொழில்துறை மிக முக்கியப் பங்கை வகிக்கிறது. அனைத்து விதமான தொழில்களும் வளர வேண்டும்.