சென்னை: தமிழ்நாடு காவல்துறையில் இரண்டாம் நிலை காவலராக பணிக்கு சேர்ந்து 10 ஆண்டுகள் எந்தவிதமான துறை ரீதியிலான நடவடிக்கைகளிலும் சிக்காத காவலருக்கு முதலமைச்சர் காவல் பதக்கம் வழங்கப்படுவது வழக்கம்.
இதுமட்டுமின்றி அவர்களுக்கு சம்பளத்தில் 400 ரூபாயும், தோள்பட்டையில் இரண்டு கோடுகளும் கூடுதல் கௌரவமாக வழங்கப்படும். அந்த வகையில், ஆண்டுதோறும் 10 ஆண்டுகள் காவல்துறையில் நிறைவு செய்த 100 இரண்டாம் நிலை காவலர்களுக்கு முதலமைச்சர் காவல் பதக்கம் ஒதுக்கப்பட்டு வந்தது.
ஆனால் காவலர்களின் எண்ணிக்கை அதிகமானதால் சீனியாரிட்டி அடிப்படையில் மட்டுமே இந்தப் பதக்கம் கிடைக்க பெற்றதால் அதே பேட்ச் காவலர்களுக்கு பதக்க கௌரவம் கிடைக்காமல் மன உளைச்சலிலிருந்து வந்தனர். மேலும் கூடுதலாக பதக்கம் வழங்க வேண்டும் எனக் கோரிக்கையும் வைத்தனர்.
சென்னையில் 2018 ஆம் ஆண்டு வரையில் 300க்கும் குறைவான பதக்கங்களே வழங்கி வந்த நிலையில், 2019இல் 644 பதக்கமும், 2020இல் 608 பதக்கமும் அளிக்கப்பட்டது. இருப்பினும், 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்களுக்கு பதக்கம் கிடைத்திடவில்லை எனக் கூறப்படுகிறது.