தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

புதிய தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டுக் கொள்கை - முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு - முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு

சென்னை: சுற்றுலா, பண்பாடு, அறநிலையங்கள் துறை ஆய்வுக் கூட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.

Stalin
Stalin

By

Published : Jul 2, 2021, 8:07 AM IST

தமிழ்நாடு சுற்றுலாத் துறை பல ஆண்டுகளாக உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகையில் நாட்டிலேயே முதல் மாநிலமாக இருந்து வருகிறது.

இருப்பினும் கரோனா காரணமாக, கடந்த 18 மாதங்களாக சுற்றுலாத் துறை பெரும்பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளது. இதனால் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள சுற்றுலா மற்றும் அதனைச் சார்ந்துள்ள தொழில்களை மீட்டெடுப்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

திருவள்ளுவர் சிலை புதிய தொழில் நுட்பத்தில் வண்ண ஒளியூட்டுதல்

இக்கூட்டத்தில், கன்னியாகுமரியில் அமைந்துள்ள ஐயன் திருவள்ளுவர் சிலையைப் புதிய தொழில் நுட்பத்தில் வண்ண ஒளியூட்டுதல் மற்றும் பூம்புகார் சுற்றுலா வளாகத்தைச் சீரமைத்து மேம்படுத்தவும் முடிவெடுக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் சுற்றுலா உட்கட்டமைப்பினைச் சர்வதேச தரத்திற்கு மேம்படுத்துதல், சர்வதேச சந்தைப்படுத்துதலை மேம்படுத்துதல், வணிக சின்னத்தினைப் பிரபலப்படுத்துதல் ஆகியவற்றைப் பற்றியும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

சுற்றுலாத் துறையில் பொது – தனியர் பங்களிப்பு

புதிய தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டுக் கொள்கை, அரசு நிதியுதவியுடன் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சித் திட்டம், புதிய சுற்றுலாத் தலங்கள் உருவாக்குதல், மேம்படுத்திடுதல் மற்றும் பராமரித்தல், தனியார் முதலீடு மூலம் ஹோட்டல், ரிசார்ட், கன்வென்சன் சென்டர் உருவாக்குதல், சுற்றுலாத் துறையில் பொது – தனியர் பங்களிப்பு ஆகியவை பற்றியும் முடிவெடுக்கப்பட்டது.

கலை பண்பாடு, தொல்லியல், அருங்காட்சியங்கள் துறைகலை பண்பாட்டுத் துறையின்கீழ் கலைஞர்களுக்கு 2021ஆம் ஆண்டுக்கு கலைமாமணி விருதுகள் வழங்குதல், நாட்டுப்புறக் கலைஞர்கள் நல வாரியத்தில் புதிய கலைஞர்களை உறுப்பினராகச் சேர்க்க சிறப்பு முகாம்களை நடத்தவும், நலவாரியத்தில் பதிவுபெற்று 60 வயது நிறைவடைந்த தகுதியுள்ள கலைஞர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

அரசு அருங்காட்சியகங்கள் மேம்படுத்துதல்

அருங்காட்சியகங்கள் துறையின்கீழ் இயங்கும் சென்னை அரசு அருங்காட்சியகம், 23 இடங்களில் செயல்படும் மாவட்ட அரசு அருங்காட்சியகங்களின் செயல்பாடுகள் மற்றும் திட்டங்கள் பற்றி ஆய்வு நடத்தப்பட்டது.

சென்னை அரசு அருங்காட்சியகத்தில் கலையரங்குத் தொகுப்பை ரூ.24.56 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்துதல் குறித்தும் பாந்தியன் கட்டடம் மீட்டுருவாக்கம் ரூ.30 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்வது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

அருங்காட்சியகங்களில் இருக்கும் அரிய பொருள்களை மெய்நிகர் அருங்காட்சியகமாக ஆவணப்படுத்துதல், சேகரிப்புகளில் உள்ள அனைத்து அரிய பொருள்களையும் காட்சிப்படுத்திட புதியதாக இருபெரும் கட்டடங்கள் ஏற்படுத்துதல் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

100 திருக்கோயில்களில் திருப்பணி செய்து குடமுழுக்கு நடத்துதல்

இந்து சமய அறநிலையத்துறையின் மூலம் நிர்வகிக்கப்படும் 100 திருக்கோயில்களில் திருப்பணி செய்து குடமுழுக்கு நடத்துதல், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி, சமயபுரம் அருள்மிகு மாரியம்மன், திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணியசுவாமி ஆகிய திருக்கோயில்களைத் திருமலா திருப்பதி தேவஸ்தானத்திற்கு இணையாக மேம்படுத்துதல் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் உள்ள பனை ஓலைச் சுவடிகள் அனைத்தும் கணினிமயமாக்கும் செயல்பாடு, திருக்கோயில் சொத்துக்கள் மற்றும் ஆக்கிரமிப்புகள் அகற்றி அதனை மீட்டுப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் ஆகியவை குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

இக்கூட்டத்தில், தலைமைச் செயலாளர் இறையன்பு, அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சேகர்பாபு உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.

இதையும் படிங்க: நீலகிரிக்குள் நுழைய இ பாஸ் முறை ரத்து

ABOUT THE AUTHOR

...view details