சென்னை: இந்தோனேசியா நாட்டின் பாலிதீவில் நடைபெற்ற ஜி-20 நாடுகளின் மாநாட்டில், அந்த அமைப்பின் தலைவராக பிரதமர் மோடி தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் ஜி-20 நாடுகளின் தலைமை பொறுப்பை பிரதமர் மோடி டிசம்பர் 4 ஆம் தேதி ஏற்கிறார். டெல்லியில் ஜி-20 நாடுகளின் மாநாடு 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெறுகிறது.
ஜி-20 அமைப்பு குறித்து விளக்கவும், மாநாட்டை நடத்துவது தொடர்பாகவும் அனைத்து மாநில முதலமைச்சர் கூட்டத்தை டெல்லியில் பிரதமர் மோடி டிசம்பர் 5 ஆம் தேதி கூட்டியுள்ளார்.
இந்த கூட்டத்தில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார். இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம், அவர் டிசம்பர் 5 ஆம் தேதிடெல்லி செல்கிறார். கூட்டத்தை முடித்து விட்டு, பிரதமர் மோடியை தனியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேச வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
அப்போது தமிழ்நாட்டின் வளர்ச்சி திட்டங்கள், நிதி குறித்து ஆலோசனை நடைபெறும் என தெரிகிறது. இதை தொடர்ந்து சில ஒன்றிய அமைச்சர்களையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேச வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இந்த கூட்டத்தில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியும் பங்கேற்க உள்ளதாக அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சென்னை: கத்தார் ஏர்லைன்ஸ் விமானத்தில் கோளாறு