சென்னை:தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுடன் தமிழ்நாட்டிற்கு உள்ள பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்தும் வகையிலும், சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கும் வகையிலும், தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கத்திலும், சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்வதற்காக 23.5.2023 அன்று சென்னையிலிருந்து சிங்கப்பூர் புறப்பட்டு சென்றார்.
சிங்கப்பூரின் முன்னனி நிறுவனங்களின் தலைமைச் செயல் அலுவலர்களை சந்தித்த அவர், தமிழ்நாட்டில் தொழில் துவங்குவதற்கு நிலவும் சாதகமான சூழல்களை எடுத்துக்கூறி, தமிழ்நாட்டில் முதலீடு செய்யும் படி கோரிக்கை விடுத்தார். மேலும் சிங்கப்பூர் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் காற்றாலை அமைப்பதற்கும், ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் முதலீடு செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.
சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெற உள்ள உலக முதலீட்டாளர் மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு பல்வேறு நிறுவனங்களில் தலைமைச் செயல் அலுவலர்களுக்கு அழைப்பு விடுத்தார். மேலும் சிங்கப்பூர் தமிழ்கலைச் சங்கங்களுடன் இணைந்து நடைபெற்ற தமிழ் கலைப் பண்பாட்டு நிகழ்ச்சியில் பங்கேற்ற முதலமைச்சர் ஸ்டாலின், சிங்கப்பூரின் தந்தை என போற்றப்படும் லீ குவான் யூ-விற்கு தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நினைவுச் சின்னம் எழுப்பப்படும் என அறிவித்தார்.