தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சோசியல் மீடியாவில் திமுக மீதான தாக்குதலை தடுக்கும் கேடயம் ஜெயரஞ்சன்  - மு.க.ஸ்டாலின் - எழுத்தாளர் ஜெயரஞ்சன்

எழுத்தாளர் ஜெயரஞ்சன் எழுதிய ’மு.கருணாநிதி வரலாறு’, ’திராவிடமும் சமூக மாற்றமும்’ ஆகிய இரண்டு புத்தகங்கள் வெளியீட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார்.

சோசியல் மீடியாவில் திமுகவின் தாக்குதலை தடுக்கும் கேடயம் ஜெயரஞ்சன்! -  மு.க.ஸ்டாலின்
சோசியல் மீடியாவில் திமுகவின் தாக்குதலை தடுக்கும் கேடயம் ஜெயரஞ்சன்! - மு.க.ஸ்டாலின்

By

Published : Dec 25, 2022, 7:35 AM IST

சென்னை:தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (டிசம்பர் 23) அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற மு.கருணாநிதி வரலாறு மற்றும் திராவிடமும் சமூக மாற்றமும் நூல் வெளியீட்டு விழாவில், பங்கேற்று நூலை வெளியிட்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது பேசிய அவர், “ஜெயரஞ்சன் எழுதி, கயல்-கவின் பதிப்பகம் வெளியிட்ட புத்தகம்தான் 'A Dravidian Journey'! இந்த இரண்டு புத்தகங்களின் தமிழ் மொழிபெயர்ப்பு இன்று இங்கே வெளியிடப்பட்டிருக்கிறது.

இவை இரண்டையும் புத்தகங்கள் என்றல்ல; 'அறிவுக் கருவூலங்கள்' என்றுதான் நாம் சொல்ல வேண்டும்! இவை தமிழினத்துக்குக் கிடைத்திருக்கக்கூடிய, திராவிட இயக்கத்திற்குக் கிடைத்திருக்கக்கூடிய கொடைகள் மட்டுமல்ல, 'போர்வாட்கள்' என்றுதான் நாம் சொல்ல வேண்டும்! தமிழினத்திற்கும் அறிவியக்கமான திராவிட இயக்கத்திற்கும் கிடைத்துள்ள புதையல்கள் என்று சொன்னால்கூட அது மிகையாகாது.

யார் அறிவாளி என்பதற்கு இந்திய அறிவுலக மேதையான புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர், "எவர் ஒருவரின் அறிவு, அவர் வாழும் சமுதாயத்துக்குப் பயன்படுத்தப்படுகிறதோ அவர்தான் உண்மையான அறிவாளி!" என்று சொல்லி இருக்கிறார்.
அந்த வகையில் பார்த்தால், தங்களது அறிவையும், ஆற்றலையும், சிந்தனைத் திறனையும் இந்தச் சமுதாயத்தின்

முன்னேற்றத்துக்காகப் பயன்படுத்திக் கொள்ளக்கூடியவர்கள்தான் நம்முடைய பன்னீர்செல்வனும், ஜெயரஞ்சனும்! தலைவர் கலைஞருக்குப் பிடித்த மிக நெருக்கமான பத்திரிகையாளர். சில பத்திரிகையாளர்கள் முதலமைச்சராக இருக்கும்போது மட்டும் நெருக்கமாக இருப்பார்கள், நெருங்கி வருவார்கள்.

சோஷியல் மீடியா வளர்ந்து வந்த இந்த நேரத்தில் திமுக மீதான பொய்யான தாக்குதலை தடுத்த மாபெரும் கேடயம் தான் நம்முடைய ஜெயரஞ்சன். இந்த அளவு சிந்தனைகளும் அறிவு கூர்மையும் கொண்டவர் நம்மோடு இருக்க வேண்டும் என்று நினைத்துதான், ஆட்சிப் பொறுப்பேற்றதும் மாநில திட்டக் குழுவினுடைய துணைத் தலைவராக அவரை அரசின் சார்பிலே நாம் நியமித்தோம்.

இன்று அரசு கொள்கை வகுப்பதில், ஆலோசனைகளை வழங்குபவர்களில் ஒருவராக அவர் இருக்கிறார். தமிழினத்தின் மேன்மையை எந்தவகையில் எல்லாம் செயல்படுத்த முடியும் என்று வழிகாட்டுபவராக - அப்படி நடக்கிறதா என்பதைக் கண்காணிக்கக்கூடியவராக நம்முடைய ஜெயரஞ்சன் விளங்கிக் கொண்டிருக்கிறார். இத்தகைய ஆற்றல் வாய்ந்த இருவர் தங்களது அறிவுப்பங்களிப்பை நமக்கு வழங்கி இருக்கிறார்கள்.

ஏ.எஸ்.பன்னீர்செல்வன் ஆங்கிலத்தில் எழுதிய நூலை கலைஞர் மு.கருணாநிதி வரலாறு என்ற தலைப்பில் சந்தியா நடராசன் சிறப்பாக மொழிபெயர்த்திருக்கிறார்கள். தலைவர் கலைஞருக்குப் பிடித்த கவிஞர்களில் ஒருவராக இருக்கக்கூடிய இளையபாரதியின் வ.உ.சி. நூலகம் இதனை அழகாக வெளியிட்டுள்ளது.

'எதையும் தாங்கும் இதயம் இங்கே உறங்குகிறது' என்று பேரறிஞர் அண்ணா நினைவிடத்தில் பொறிக்கப்பட்டிருக்கும் வாசகத்தைக் காட்டி, "எனக்கும் இங்கேதான் உறங்க வேண்டும்" எனக் கலைஞர் மிக உணர்ச்சிவயமாகச் சொல்லும் பகுதி இந்த நூலில் வருகிறது. அதைப் படிக்கும்போது தலைவர் கலைஞரின் மறைவிற்குப் பிறகு, அவர் விரும்பிய இடத்தைப் பெற்றுத் தர நடத்திய போராட்டம் இன்றைக்கும் என்னுடைய கண்முன் வருகிறது.

தலைவர் கலைஞர் யார் என்பதை இந்த நூலின் ஆசிரியர் அடையாளப்படுத்துகிறார். நவீன தமிழகத்தை உருவகப்படுத்தினால் அதுதான் கலைஞர் என்று சொல்கிறார். இதைவிட யாராலும் சரியாக சொல்ல முடியாது. திராவிட இயக்கத்தின் எழுச்சியை ஒருவர் அறிய வேண்டுமா? கலைஞரைப் பற்றிப் படித்தால் மட்டுமே போதும். தலைவர் கலைஞர் பல்லாயிரக்கணக்கான தனிமனிதர்களோடு தனது தனிப்பட்ட உறவைப் பேணி வளர்த்து வந்திருக்கிறார், ஒவ்வொருவருக்கும் கலைஞரைப் பற்றிச் சொல்ல ஒரு கதை இருக்கிறது என்கிறார்.

நிலப்பிரபுத்துவக் காலக்கட்டத்தில் திருக்குவளை என்ற சிறு கிராமத்தில் பிறந்த ஒரு சிறுவன் - நவீனத் தமிழ்நாட்டை உருவாக்கும் சிற்பியாக எப்படி மாறினான் என்பதை முழுமையாகச் சொல்லும் முதன்மை நூல்தான் இந்த நூல். இடையிடையே கலைஞருக்கும் ஏ.ஏஸ்.பன்னீர்செல்வனுக்கு உரையாடல்கள் பல வருகின்றன. இது மிக அருமையாக இருக்கிறது. கலைஞரைப் பற்றிய பிற நூல்களில் இருந்து இந்த நூல் வேறுபடுவதற்கும், மேம்பட்டதாக இருப்பதற்கும் இது ஒரு முக்கியக் காரணம்.

''ஒவ்வொருவருக்கும் 3 வாழ்க்கை உண்டு. ஒன்று பொதுவாழ்க்கை, இரண்டாவது தனி வாழ்க்கை, மூன்றாவது ரகசியவாழ்க்கை...'' என்று கொலம்பியா எழுத்தாளர் மார்க்வேல் அவரது வாழ்க்கை வரலாற்றை எழுதிய மார்ட்டின் கூறியதை பன்னீர்செல்வன் தலைவர் கலைஞரிடத்திலே சொல்லியிருக்கிறார். அப்போது கலைஞர், 'பொதுவாழ்க்கையில் இருப்பவர்களுக்கு நான்காவதாக ஒரு வாழ்க்கை இருக்கிறது. அதுதான் அவர் வாழ விரும்பிய வாழ்க்கை' என சொல்லியிருக்கிறார். எவ்வளவு ஆழமான, அழகான கருத்து.

ஒருவர் எழுதும் தன் வரலாறு நூலில் அந்த நான்காவது வாழ்க்கை பற்றிப் புலப்படும்" என்று கலைஞர் கூறுகிறார். அதற்கு, 'உங்கள் நூலில் நீங்கள் வாழ விரும்பிய வாழ்க்கையை விவரிக்கும் பகுதி எது?' என்று பன்னீர்செல்வன் கேட்கிறார். அப்போது கலைஞர் சொல்கிறார், 'அதை நீயே கண்டுபிடித்துக்கொள்' என்கிறார் கலைஞர்.

தலைவர் கலைஞர் வாழ விரும்பிய வாழ்க்கை என்ன என்று நான் சிந்தித்தேன்... தான் இல்லாத பிறகும் தான் நினைக்கப்பட வேண்டும் என்பதுதான் கலைஞர் விரும்பிய வாழ்க்கையாக இருக்கக்கூடியது. அதற்கான உழைப்பைத்தான் அவர் தன் வாழ்நாள் முழுவதும் அளித்தார். இதை வைத்துப் பார்க்கும்போது கலைஞர் வாழ்க்கை நிகழ்காலத்தில் நிறைவாகவே இருக்கிறது.

ஆயிரம் ஆண்டு சமூக அழுக்கை ஒழிக்கத்தான் நாம் பாடுபட்டுக் கொண்டிருக்கிறோம். மாற்றம் என்பது ஒரே நாளில் நிகழக்கூடியதல்ல. அதனை நாமும் அறியாதவர்கள் அல்ல. மாற்றத்தை நோக்கித்தான் நாம் உழைக்கிறோம்.
அதனால்தான், சாதியின் பேரால் தொடக்கூடாது - கண்ணில் படக்கூடாது – தெருவில், கோயிலில் நுழையக் கூடாது என்பதெல்லாம் உடைத்து நொறுக்கப்பட்டு விட்டன.

கல்வியும் படிப்பும், வேலையும் பதவியும் - ஒடுக்கப்பட்ட சமூகத்தின் கையில் அதிகாரம் செலுத்தும் லகானைக் கொடுத்துவிட்டது. இதுதான் திராவிட இயக்கம் ஏற்படுத்தியுள்ள மாற்றம்! கல்வி, வேலைகள், அரசாங்கம், அதிகாரம், நிர்வாகம், அறிவு என பலவும் ஜனநாயக மயமானது. இந்த முன்னோக்கிய பாய்ச்சலில்தான் சமூகம் ஜனநாயக மயமாக வேண்டும். நமது திராவிட மாடல் கொள்கையில் அதனைத்தான் சொல்லி இருக்கிறோம்.

கல்வியில், தொழிலில், உள்கட்டமைப்பில், சிந்தனையில் மட்டுமல்ல, சமூகத்திலும் சேர்த்து வளர்வதுதான் உண்மையான வளர்ச்சி என்று சொல்லி இருக்கிறோம். ''கலைஞர் பாணி சமூகநீதிக்கும் - மதச்சார்பற்ற அரசியலுக்கும் இனி ஆற்றல் அற்றுப் போகும்" என்று 1991-ஆம் ஆண்டு துக்ளக் ஆசிரியர் சோ.இராமசாமி சொன்னதாக பன்னீர்செல்வன் எழுதி இருக்கிறார். கலைஞர் பாணி சமூகநீதிக்கும் - மதச்சார்பின்மைக்கும் -சுயமரியாதைக்கும்- மாநில சுயாட்சிக்கும்- மொழி இன உரிமைக்கும் ஆற்றல் என்றும் அற்றுப் போகாது என்பதன் அடையாளம்தான் இன்றைய திராவிட மாடல் ஆட்சி! ஆற்றல் அற்றுப் போய்விடவில்லை என்பதன் அடையாளம்தான் இத்தகைய புத்தகங்கள்.

சுயமரியாதை - சமதர்ம அரசியலை எந்நாளும் உயர்த்திப் பிடிப்போம். இத்தகைய சிந்தனைகளை விதைக்கவும் உருவாக்கவும் ஏ.எஸ்.பன்னீர்செல்வன் போல, ஜெயரஞ்சன் போல ஏராளமான சிந்தனையாளர்கள் தேவை. இதுபோன்ற புத்தகங்கள் ஆங்கிலத்திலும் தமிழிலும் அதிகம் தேவை. ஜெயரஞ்சன் ஏற்புரையாற்றும்போது குறிப்பிட்டுச் சொன்னார், ‘நீங்கள் கட்டளையிடுங்கள் என்று’ கட்டளையிட வரவில்லை, உங்களோடு சேர்ந்து பணியாற்ற வந்திருக்கிறோம்.

அதே நேரத்தில் என்னுடைய அன்பான வேண்டுகோளாக, தமிழ் புத்தகங்களை ஆங்கிலத்திலும் - ஆங்கிலப் புத்தகங்களை தமிழிலும் மொழிபெயர்த்து வெளியிட வேண்டும். அதுதான் உங்களுக்கு இருக்கக்கூடிய பெரும் கடமை. எனவே, இந்த நூல் வெளியீட்டு விழா என்பது உங்களது அறிவிப் பணியினுடைய தொடக்கக் காலம்தான். உங்களது அறிவுப்பணியை நீங்கள் இருவரும் மேலும் இதே வீரியத்தோடு மேலும் தொடர வேண்டும்” என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: திமுகவுக்கு வாக்களித்த அதிமுக கவுன்சிலர்.. கரூர் தேர்தலில் திடீர் மாற்றம்!

ABOUT THE AUTHOR

...view details