தென் மாவட்டங்களில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார் கோயம்புத்தூர்:தமிழ்நாடு அரசின் சேவைகள் பொதுமக்களை விரைவாக சென்றடையவும், மக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணும் வகையிலும் ‘மக்களுடன் முதல்வர்’ என்ற புதிய திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று (டிச.18) கோவையில் உள்ள எஸ்.என்.எஸ் கல்லூரியில் தொடங்கி வைத்தார்.
பின்னர் திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர் ஸ்டாலின், மக்களின் கோரிக்கை மனுக்களைப் பெற்றார். அதைத் தொடர்ந்து, மனுக்கள் பெற்றதற்கான ஒப்புகை சீட்டுகளையும் பொதுமக்களுக்கு வழங்கினார். அதைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில், 47 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மழை பெய்தது.
அப்போது, முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு அதனை தமிழக அரசு எதிர்கொண்டது. நிவாரணப் பணிகள், முக்கிய சாலைகளில் போக்குவரத்து சீரமைப்பு உள்ளிட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்றது. சில பகுதிகளைத் தவிர மற்ற பகுதிகள் அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. இதற்கிடையே, தற்போது தென் மாவட்டங்களில் இரண்டு நாட்களாக கடுமையான மழை பெய்து வருகிறது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தென் மாவட்டங்கள் முழுவதும், அரசு மீட்பு இயந்திரங்கள் குவிக்கப்பட்டு உள்ளன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் விரைந்து நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மழை வெள்ள பாதிப்பில் இருந்து தென்மாவட்ட மக்களை மீட்பதில் அரசு உறுதியாக உள்ளது. சென்னையில் கற்றுக் கொண்ட பாடத்தின் அடிப்படையில், தென் மாவட்டங்களில் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:South TN Rain Live Update:எந்தெந்த பகுதிக்கு 'ரெட் அலர்ட்'..தென்மாவட்டங்களில் கொட்டித்தீர்க்கும் கனமழை..நிலவரம் என்ன?