சென்னை:தமிழகத்தில் டிசம்பர் மாத துவக்கத்தில் மிக்ஜாம் புயல் தாக்கத்தால் பெய்த கனமழையால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்கள் பெரும் பாதிப்பைச் சந்தித்தன. புயல் தாக்கத்தால் வந்த பெருமழையால் ஏற்பட்ட பாதிப்புகளுக்காகத் தமிழக அரசு மத்திய அரசிடம் நிதி கோரி இருந்தது.
இதனையடுத்து மத்திய குழுவினர் தமிழகத்தில் மிக்ஜாம் புயல் தாக்கத்தால் ஏற்பட்ட மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தனர். இந்நிலையில் டிச.17, 18ஆம் தேதி தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்டங்கள் அதி கனமழையால் பெரும் வெள்ளத்தைச் சந்தித்தன.
இதனையடுத்து மிக்ஜாம் புயல் தாக்கத்தால் ஏற்பட்ட சேதத்திற்கு நிவாரணம் கோரியிருந்த நிலையில், அந்த நிவாரண தொகையை விரைந்து வழங்கக்கோரி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி சென்று பிரதமரைச் சந்தித்தார். அப்போது தென் மாவட்டங்களில் அதி கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகள், மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்தும் எடுத்துரைத்தார். தொடர்ந்து அப்பாதிப்புகளைச் சீரமைத்திடத் தேவையான நிதியினையும் விரைந்து ஒதுக்கீடு செய்திட வேண்டும் என்று கேட்டுக்கொண்டு கோரிக்கை மனுவினை (Memorandum) அளித்திருந்தார்.