சென்னை:நெடுஞ்சாலைத் துறையின் பவள விழாவை முன்னிட்டு சென்னை கிண்டி நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையத்தில் பவளவிழா நினைவுத்தூணை திறந்து வைத்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பல்வேறு மேம்பாலப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். 46 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்படவுள்ள மத்திய கைலாஷ் மேம்பாலம் , 199 கோடியே 12 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்படவுள்ள மதுரை கோரிப்பாளையம் மேம்பாலம், கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை - விவேகானந்தர் பாறையை இணைக்க 37 கோடி ரூபாய் மதிப்பில் கண்ணாடி இழை நடைமேம்பாலம் ஆகியவற்றிற்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.
மேலும் சென்னையில் ஆழ்வார்பேட்டை , தேனாம்பேட்டை பகுதியை அண்ணா சாலையில் இணைக்கும் எல்டாம்ஸ் சாலை சந்திப்பு , பாண்டிபஜார் சாலை , செனடாப் சாலை சந்திப்பு , நந்தனம் சந்திப்பு , சிஐடி நகர் 3வது மற்றும் முதல் பிரதான சாலை சந்திப்பு , சைதாப்பேட்டை ஜோன்ஸ் சாலை சந்திப்பில் 4 வழித்தடங்களில் 485 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்படவுள்ள மேம்பாலங்களின் கிராபிக்ஸ் காணொலிகள் ஒளிபரப்பப்பட்டன. இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் ஸ்டாலின் பேசினார்.
அவர் பேசியதாவது, “நான் மனதில் நினைப்பதை சொல்லாமலேயே, எனது கண் ஜாடையிலேயே தெரிந்துகொண்டு செயலாற்றுவதில் முன்னிலையில் எ.வ. வேலு இருக்கிறார் என கலைஞரே பாராட்டியவர். எ.வ. என்றால் எதிலும் வல்லவர் என்று அர்த்தம். அடிக்கல் நாட்டப்பட்ட மேம்பாலப் பணிகள் 2 ஆண்டில் மக்கள் பயன்பாட்டுக்கு வரும். சாலை சரியில்லை என்றால் வாகனத்தில் செல்வோர் முதலில் திட்டுவது அரசாங்கத்தைத்தான். அரசுக்கு நல்ல பெயரும், அவப்பெயரும் நெடுஞ்சாலைத்துறை மூலமே கிடைக்கும்.
தமிழ்நாடு இந்தளவிற்கு வளர்ச்சி பெற நெடுஞ்சாலைத்துறையே காரணம். உலகத்தரம் வாய்ந்ததாக கிண்டி நெடுஞ்சாலைத்துறை ஆராய்ச்சி நிலையம் மாற வேண்டும். முதலமைச்சரானவுடன் 5 சாலைகளின் நெரிசலைக் குறைக்கும் விதமாக அண்ணா மேம்பாலத்தைக் கட்டினார் கருணாநிதி. கிராமங்களை நகரங்களுடன் இணைக்க கிராமப்புற சாலைகள் மற்றும் இணைப்புச் சாலைகளை கருணாநிதி உருவாக்கினார். தமிழ்நாட்டில் 1000க்கும் மேல் மக்கள் தொகை கொண்ட அனைத்து கிராமங்களிலும் இணைப்புச் சாலைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
சாலை போடுவதற்கு நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல் இருப்பதால், திட்டத்தை நிறைவேற்றி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு செல்வதில் தாமதம் ஏற்படுகிறது. இதை சரிசெய்ய 184 பணி இடங்கள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் சாலைப்பாதுகாப்புத்திட்டம் சிறப்பாக இருப்பதாக ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். சென்னையில் வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகள் நெடுஞ்சாலைத்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
முதலமைச்சர் சாலை மேம்பாட்டுத்திட்டம் மூலம் மாவட்ட தலைமை மற்றும் வட்டத் தலைமையிடங்களை இணைக்கும் விதமாக 2ஆயிரத்து 200 கி.மீ., தூரத்திற்கு மாநில நெடுஞ்சாலையில் 10 ஆண்டில் , போக்குவரத்துச் செறிவைப் பொருத்து 4 வழிச் சாலைகள் அமைக்கப்படவுள்ளன. ஆயிரத்து 281 தரைப்பாலங்கள், 2ஆயிரத்து 400 கோடி ரூபாய்க்கு மேல் செலவிடப்பட்டு உயர்மட்ட பாலங்களாக மாற்றப்படவுள்ளன.