“ஆடியோ மூலம் மட்டமான அரசியல்” - அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் விவகாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி சென்னை:தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உங்களின் ஒருவன் பதில்கள் (Ungalil Oruvan answers) என்னும் பெயரில், திமுக அரசின் மீது எதிர்கட்சிகள் வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கும், மக்களின் மனதில் எழும் கேள்விகளுக்கும் பதில் அளித்து வருகிறார். அந்த வகையில் இன்று வெளியான உங்களில் ஒருவன் பதில்கள் காணொலியில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆடியோ விவகாரம் குறித்து விளக்கமளித்துள்ளார்.
அந்த காணொலியில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசியதாவது, ”சட்டமன்றக் கூட்டத்தொடர், கள ஆய்வு என்று ஒரு மாதத்திற்கும் மேல் உங்களுடைய கேள்விகளுக்குப் பதில் அளிக்கின்ற இந்த 'உங்களில் ஒருவன்' நிகழ்ச்சிக்கு ஒரு சிறிய இடைவெளி விழுந்துவிட்டது. இது இடைவெளி என்பது நிகழ்ச்சிக்குத் தானே தவிர, உங்களுக்கும் எனக்கும் இல்லையே. அதனால்தான் கொஞ்சம் நேரம் கிடைத்தவுடனேயே உங்கள் கேள்விகளுக்கு பதில் சொல்ல வந்துவிட்டேன். கேள்விகளுக்குப் பதில் சொல்வதற்கு முன்னால் திராவிட மாடல் அரசு, ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டாண்டு ஆக போகிறது என்பதற்காக நன்றியையும், மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறினார்
கேள்வி: ஆளுநர்கள் சட்டமன்ற மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க கால நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்ற உங்களின் சட்டமன்றத் தீர்மானம் இந்தியா முழுவதும் எதிரொலிக்கிறதே. உச்சநீதிமன்றமும் இதே கருத்தை வலியுறுத்தியிருக்கிறதே?
பதில்: உண்மைதான். இந்தியா முழுமைக்குமானது தான் தமிழ்நாட்டுடைய குரல்! சமூகநீதிக்கு தமிழ்நாடு தான் தலைநகர்! அதேபோலத்தான், மாநில சுயாட்சி உரிமைகளுக்கும் தமிழ்நாடுதான் தலைநகர்! அந்த அடிப்படையில்தான் இது மாதிரியான தீர்மானத்தை நிறைவேற்றுகிறோம். கோடிக்கணக்கான மக்களுடைய பிரதிநிதிகள் சேர்ந்து நிறைவேற்றி அனுப்புகின்ற சட்ட மசோதாக்களை, ஒரு நியமன ஆளுநர் கிடப்பில் போடுவார் என்றால், அதைவிட மக்களாட்சி மாண்புக்கு இழுக்கு இருக்க முடியாது.
அதனால் தான், சட்டமன்ற மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க கால நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்று சொல்கிறோம். இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு உடனடியாக என்னுடைய குரலுக்கு வலுசேர்த்த மாநில முதலமைச்சர்களுக்கு நன்றி! அதேபோல, இன்னும் இருக்கின்ற மற்ற மாநில முதலமைச்சர்களும் இதை ஆதரிப்பார்கள் என்று நம்புகிறேன்.
கேள்வி: ஆட்சிக்கு வந்து இரண்டாண்டு நிறைவடைய இருக்கிறது. திரும்பிப் பார்க்கையில் என்ன மாதிரியான உணர்வு உங்களுக்கு ஏற்படுகிறது? எதிலெல்லாம் இன்னும் நிறைய கவனம் தேவைப்படுகிறது என நினைக்கிறீர்கள்?
பதில்: ரொம்ப மனநிறைவோடு இருக்கிறேன். ஐந்தாண்டு கால ஆட்சியில், இரண்டு ஆண்டுகள் என்பது, பாதி கூட இல்லை! ஆனால், இரண்டே ஆண்டுகளில் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளில் முக்கால் பங்குக்கும் மேல் நிறைவேற்றி இருக்கிறோம். சொன்னதை மட்டுமல்ல, சொல்லாத பல திட்டங்களையும் தீட்டி இருக்கிறோம்.
மிகக் குறுகிய காலத்தில் இவ்வளவு திட்டங்களை தீட்டியது, ஒட்டுமொத்த இந்தியாவிலேயே இப்போது இருக்கின்ற தி.மு.க. அரசாகத்தான் இருக்க முடியும். எதில் இன்னும் நிறைய கவனம் தேவைப்படுகிறது என்று உங்கள் கேள்வியில் கேட்டிருக்கிறீர்கள். பத்தாண்டு காலமாக அ.தி.மு.க. ஆட்சியாளர்களால் சீரழிக்கப்பட்ட அரசு நிர்வாகத்தை ஓரளவிற்கு மீட்டெடுத்திருக்கிறோம். இன்னும் சரிசெய்யப்பட வேண்டியது நிறைய இருக்கிறது.
கேள்வி: பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் தெலங்கானாவில் முஸ்லீம்களுக்கான இடஒதுக்கீட்டை ரத்து செய்வோம் என்று உள்துறை அமைச்சரே பேசியிருக்கிறாரே? முஸ்லீம்களுக்குப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ஒதுக்கீடு வழங்கிய கட்சியின் தலைவராக உங்கள் கருத்து என்ன?
பதில்:சிறுபான்மைச் சமூகத்தினர் மீதான வன்மம்தான் இதன் மூலமாக வெளிப்படுகிறது. தேர்தல் அரசியல் லாபங்களுக்காக உள்துறை அமைச்சர் இவ்வாறு சொல்லி இருக்கிறார். இசுலாமியர்கள் மீது வெறுப்பை உமிழ்வதுதான் இந்து மக்களை திருப்திப்படுத்தும் என்று பா.ஜ.க.-வினுடைய தலைமை அவர்களாவே கற்பனை செய்திருக்கிறார்கள்.
ஆனால், உண்மை அப்படியில்லை. பா.ஜ.க.-விற்கு வாக்களிக்காத பெரும்பான்மையான மக்களும் இந்துக்கள்தான். ஆனால் அவர்கள் அமைதியையும் சகோதரத்துவத்தையும் விரும்புகிற மக்கள். பா.ஜ.க. தன்னுடைய வெறுப்புணர்ச்சியை குறிப்பிட்ட சிலரிடம் திணித்து, அதுதான் ஒட்டுமொத்த மக்களுடைய மனநிலை என்று காட்ட நினைக்கிறது.
அதற்கு துணையாக, பொய்களையும், கற்பனைக் கதைகளையும் மக்களிடம் கொண்டு சேர்க்கின்ற பரப்புரை இயந்திரமாக சமூக ஊடகங்களில் செயல்படுகிற பா.ஜ.க ஆதரவு கணக்குகள். பா.ஜ.க.-வினுடைய ஊதுகுழலாக மாறி, ஜனநாயகத்தினுடைய நான்காவது தூண் என்பதை மறந்து, பா.ஜ.க.-வை தாங்கி பிடிக்கிற சில ஊடகங்கள். இப்படி பல காரணிகள் மூலம் தன்னுடைய வெறுப்பரசியலை பா.ஜ.க. செய்துகொண்டு இருக்கிறது.
மதச்சார்பின்மையை அரசியலமைப்பு நெறிமுறையாக கொண்ட நாட்டில், உள்துறை அமைச்சரே இவ்வாறு பேசுவது அரசியலமைப்புச் சட்டத்தை மீறுகிற செயல்! மக்கள் எல்லாவற்றையும் பார்த்து கொண்டுதான் இருக்கிறார்கள்! கோயபல்ஸினுடைய பொய்கள் நாஜிகளுக்கு. ஆனால், உண்மை, மக்களுக்கு! இதுதான் வரலாறு சொல்கின்ற பாடம்! நாங்கள் மக்களை நம்புகிறோம்! இந்திய மக்களுடைய மனசாட்சி என்றைக்கும் உறங்கிவிடாது என்று நம்புகிறோம்!
கேள்வி: நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனின் பேரில் வெளியான ஆடியோ பற்றி உங்களுடைய கருத்து என்ன?
பதில்: இதுகுறித்து அவரே இரண்டு முறை விரிவான விளக்கம் அளித்துவிட்டார். மக்களுக்கான பணிகளைச் செய்யவே எனக்கு நேரம் சரியாக இருக்கிறது. மேலும் இதைப் பற்றி பேசி, மட்டமான அரசியலில் ஈடுபடுகிறவர்களுக்கு நான் விளம்பரம் தேடித் தர விரும்பவில்லை.
கேள்வி: கலைஞர் நூற்றாண்டு வரும் ஜூன் மாதம் தொடங்கவிருக்கிறதே. அதை எப்படிக் கொண்டாடத் திட்டமிட்டிருக்கிறீர்கள்?
பதில்: 'மறந்தால் அல்லவா நினைப்பதற்கு!'- என்று சொல்வார்கள். நமது நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கும் தமிழினத் தலைவர் கலைஞரை மக்கள் நாள்தோறும் கொண்டாடிக் கொண்டு இருக்கிறார்கள்! வருகின்ற சூன் 3 அன்று அவருடைய நூற்றாண்டு தொடங்கப்போகிறது! இந்த விழாவை இந்தியாவே திரும்பிப் பார்க்கிற மாதிரி கொண்டாட இருக்கிறோம். ஓராண்டு காலம் முழுவதும் தலைவர் கலைஞரின் சாதனைகளை நினைவுபடுத்தி, நன்றி செலுத்தும் ஆண்டாக இருக்கப்போகிறது.
சூன் 5-ஆம் நாள், இந்த நூற்றாண்டு தொடக்க விழா நடைபெற இருக்கிறது. இதற்காக மாண்புமிகு குடியரசுத் தலைவர் அவர்களை டெல்லி சென்று சந்தித்து அழைப்பு விடுத்திருக்கிறேன். இந்தச் சந்திப்பில், தலைவர் கலைஞர் மீதும், தமிழ்நாட்டின் மீதும் மாண்புமிகு குடியரசுத் தலைவர் அவர்கள் வைத்துள்ள மதிப்பையும் மரியாதையும் நான் அறிந்தேன்.
பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த முதல் குடியரசுத் தலைவர் அவர். இரண்டாவது பெண் குடியரசுத் தலைவர் அவர். விளிம்பு நிலை மக்கள், அதிலும் குறிப்பாக பெண்கள் அரசியல் ஆளுமைகளாக வரவேண்டும் என நினைத்த தலைவர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை மாண்புமிகு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்கள் தொடங்கி வைப்பது மிகமிகச் சிறப்பானது!
சென்னை கிண்டியில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு சிறப்பு பன்னோக்கு மருத்துவமனையை மாண்புமிகு குடியரசுத் தலைவர் அவர்கள் திறந்து வைக்கிறார்கள். மதுரையில் அமைக்கப்பட்டு வரும் கலைஞர் நூற்றாண்டு நூலகமும் விரைவில் திறந்து வைக்கப்பட இருக்கிறது. வாழ்ந்த காலத்தில் மட்டுமல்ல, அதன்பிறகும் மக்களுக்கு பயனளிக்கும் தலைவராக கலைஞர் விளங்கி வருகிறார் என்பதை சொல்லத்தக்க வகையில் பயனுள்ள விழாக்களாக இவை அனைத்தும் அமையும்!
கேள்வி: கூட்டணிக் கட்சிகள், எதிர்க்கட்சியினர், செயற்பாட்டாளர்கள் இவர்களுடைய கருத்துக்கு மதிப்பளித்து தொழிலாளர் சட்டத்தில் கொண்டு வந்த திருத்தத்தை நிறுத்தி வைத்தீர்கள். இது உங்கள் ஜனநாயகப் போக்கையும், முதிர்ச்சியையும் காட்டுகிறது. ஆனால் இதை பலவீனமாக ஒருதரப்பினர் கட்டமைக்க முயல்கிறார்களே?
பதில்: "மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. எங்களின் மனச்சாட்சியே நீதிபதி"-என்று தலைவர் கலைஞர் அவர்கள் சொல்வார். அப்படித்தான் நானும் செயல்பட்டு வருகிறேன். மக்களின் எண்ணத்தைப் புரிந்து செயல்படுவதே மக்களாட்சி! அப்படி எடுக்கப்பட்ட முடிவு அது. பலத்தை வைத்து இந்த சட்டம் கொண்டு வரப்படவுமில்லை. பலவீனமாக இதனை வாபஸ் பெறவுமில்லை.
கேள்வி: அண்மையில் விழுப்புரம் உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் கள ஆய்வுக்காக சென்றிருந்தீர்கள். அங்கு சிறப்பான முறையில் சமூகத் தொண்டாற்றியவர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கியிருந்தீர்கள். அதில் அரசு ஊழியர்கள் மட்டுமின்றி, அரசுசாரா சமூகநல ஊழியர்களுக்கும் நினைவுப் பரிசு கொடுத்திருந்தீர்கள். இந்த நினைவுப் பரிசு வழங்கப்படுவதற்கான நோக்கம் என்ன?
பதில்:பாராட்டு என்பது தங்களுடைய பணியைக் கடமையாக செய்யாமல், மக்களுக்கான சேவையாக செய்கிறவர்களுக்கு காட்டுகின்ற நன்றி மட்டுமல்ல, இதை பார்த்து இன்னும் நிறைய பேர் இவ்வாறு சேவை செய்ய முன்வர வேண்டும் என்று ஊக்கப்படுத்தவும்தான். மக்கள் தொகைப் பெருக்கம் அதிகமாக இருக்கின்ற இந்தியா போன்ற நாடுகளில் மக்களுடைய தேவைகள் அத்தனையையும் அரசு மட்டுமே செய்துவிட முடியாது. அரசு சாரா சமூகநல ஊழியர்களின் பங்களிப்பும் மிக மிக அவசியம். எனவேதான் இவ்வாறு சேவை மனப்பான்மை கொண்ட அரசுப் பணியாளர்கள், அரசுசாரா நிறுவன ஊழியர்களை வெளிப்படையாக அழைத்துப் பாராட்டுகிறோம்!
கேள்வி: ஒன்றிய அரசின் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் பல்வகைப் பணியாளர் தேர்வுகளும், ஒருங்கிணைந்த மேல்நிலைப் பணியாளர் தேர்வுகளும் இனி தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் நடத்தப்படும் என்று ஒன்றிய அரசு அறிவித்திருக்கிறது. இதன் அடுத்தகட்டமாக, எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளிலும் இந்த நிலை வருமா?
பதில்: விரைவில் வரவேண்டும். நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் தி.மு.க. தொடர்ந்து வலியுறுத்தி வரும் கொள்கை இது. நம்முடைய கோரிக்கையின் காரணமாக, இன்று தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியாவில் பல்வேறு மாநில மொழிகளைப் பேசும் இளைஞர்களும் அவரவர் மொழியில் இந்தத் தேர்வுகளை எழுதலாம் என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது.
அறிவுத் திறனை இந்தி, ஆங்கிலம் என்ற குறிப்பிட்ட மொழி எல்லைக்குள் சுருக்கக் கூடாது. இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம்தான் என்பதால், எல்லா மாநில இளைஞர்களுக்கும் வேலைவாய்ப்பில் சமவாய்ப்பு வழங்கப்பட வேண்டும். அதற்கான முதற்படிதான், நமது வலியுறுத்தல் காரணமாக நடந்திருக்கும் இந்த நல்விளைவு. விரைவில் அனைத்து ஒன்றிய அரசுத் தேர்வுகளும், அனைத்து மாநில மொழிகளிலும் நடத்தப்பட குரல் கொடுப்போம். வெல்வோம்.
கேள்வி: கடந்த அ.தி.மு.க. ஆட்சியில், அப்போதைய முதலமைச்சரின் பொறுப்பில் இருந்த பொதுப்பணித்துறை டெண்டர்கள் வழங்கியதில் தொடங்கி, காவல்துறையை நவீனப்படுத்தும் திட்டத்தில், பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் என பல்வேறு திட்டங்களிலும் பெருமளவு முறைகேடு நடந்துள்ளதாக சிஏஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதுகுறித்து நடவடிக்கைகள் எடுக்கப்படுமா? ஏற்கனவே அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்கள் தொடர்பாக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளின் நிலை என்ன?
கேள்வி: கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை! அ.தி.மு.க.வின் கரெப்ஷன் ஆட்சியை பற்றி மக்களுக்கு நன்றாக தெரியும். அதை சிஏஜி அறிக்கையும் உறுதி செய்திருக்கிறது. ஆதாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியிருக்கிறது. இதுகுறித்து அடுத்தகட்ட விசாரணைகள் மேற்கொள்ளப்படும்.
ஊழல் தடுப்புச் சட்டத்தில் 2018-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சில திருத்தங்களின் அடிப்படையில், இந்த விசாரணைகளை முன்னெடுத்துச் செல்ல சில முன் அனுமதிகளையும், இசைவு ஆணைகளையும் பெற வேண்டியுள்ளது. அந்த அடிப்படையில் விசாரணை நிறைவடைந்து – கடந்த அ.தி.மு.க. ஆட்சியாளர்கள் மேல் இருக்கும் ஊழல் வழக்குகள் அனைத்தும் நிச்சயம் நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லப்படும். உப்பு தின்றவர்கள் தண்ணீர் குடித்துத்தான் ஆக வேண்டும். அது உறுதி!
கேள்வி: டெல்லிக்குப் சென்றதும் எடப்பாடி பழனிசாமியின் வீரியம் அடங்கிவிட்டதைப் பார்த்து என்ன தோன்றியது?
பதில்: வீராவேசமாக டெல்லிக்குக் கிளம்பிச் சென்று காத்திருந்து, காற்று போன பலூனாக திரும்பி வருவது அவருக்கோ, அவர் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கோ ஒன்றும் புதிதில்லையே” என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: K.Ponmudi: "ஓசி" வரிசையில் "எவ இவ" மீண்டும் சர்ச்சையில் சிக்கிய அமைச்சர் பொன்முடி!