டெல்லியில் இன்று (ஆக.17) தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, இந்திய குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர், பிரதமர் மோடி ஆகியோரை சந்தித்த போது, தமிழ்நாட்டிலுள்ள மரபு தானியங்களின் தொகுப்பு அடங்கிய பெட்டகத்தை வழங்கினார்.
தமிழ்நாட்டு மரபு தானியங்களின் தொகுப்பு:ஓடி ஓயாது உழைக்கும் விளிம்பு நிலை மனிதனின் வயிற்றுப் பசியையும், மரத்தின் விளிம்பில் நின்றுகொண்டு காடு வளர்க்கும் பணி செய்யும் பறவையின் பசியையும் ஆற்றிய நிலம், 100-க்கும் மேற்பட்ட அரிசி வகைகளாலும், பல வகை சிறுதானியங்களாலும் நிறைந்தது தமிழ் நிலம்.
இந்நிலத்தின் முக்கிய மரபு தானியங்கள்:மாப்பிள்ளை சம்பா (RED RICE) - சிகப்பு நிறத்தால் ஆண்ட்டி ஆக்சிடன்ட் தன்மையைக்கொடுத்து நோயின்றி காக்கும் அரிசி. குள்ளக்கார் (RICE FOR ANTI & POST-NATAL WOMEN) - பாலூட்டும் பெண்களுக்கும் கருத்தரிக்கும் பெண்களுக்கும் ஊட்டம் தரும் அரிசி.
கருப்புக்கவுனி (EMPEROR OR FORBIDDEN RICE) - நெடுங்காலம் அரசர்களுக்கு மட்டும் பயிரிடப்பட்ட ஆந்தோசயனைன் நிறைந்த புற்றைத் தடுக்கும் கருப்பு அரிசி. சீரகச்சம்பா (AROMA RICE OF ARCOT) - பாலாற்றங்கரையில் பயிராகும் தனித்துவ மணம் கொண்ட சுவைமிக்க அரிசி. குடவாழை (RED RICE OF DELTA) – தோலுக்குப் பொலிவு அளிக்கும் மரபு சிகப்பு அரிசி இது.