சென்னை:கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட திரு.வி.க. நகர், பல்லவன் சாலையில் பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் சிங்காரச் சென்னை 2.0 நிதியிலிருந்து 3 கோடியே 30 லட்சம் செலவில், பார்வையாளர் மாடம், நடைபாதை, இறகுப்பந்து கூடம், குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள், மழைநீர் வடிகால் வசதி உள்ளிட்ட வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள செயற்கை புல் தரையுடன் கூடிய கால்பந்து விளையாட்டுத் திடலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து, திரு.வி.க நகர் 8வது தெருவில் குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள், திறந்த வெளி உடற்பயிற்சிக் கூடம், நடைபாதை, இருக்கை வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள பெருநகர சென்னை மாநகராட்சி சிறுவர் பூங்காவை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
ஸ்ரீ அகஸ்தியர் அறக்கட்டளை சார்பில் கலைஞர் நூற்றாண்டு கட்டணமில்லா உயர் சிகிச்சை வசதிகளுடன் கூடிய கண் சிகிச்சை மையத்தையும், அக்கட்டடத்தின் முதல் தளத்தில் அனிதா அச்சீவர்ஸ் அகாடமியின் தையல் பயிற்சி மையத்தையும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உபகரணங்கள், பயனாளிகளுக்கு மருத்துவ உதவித்தொகை, திருமண உதவித்தொகை, மாவு அரவை இயந்திரம், காது கேட்டும் கருவி, தையல் இயந்திரம் என 55 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.