சென்னை:அதிமுகவில் ஒற்றைத்தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்து, இறுதியாக எடப்பாடி கே.பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எடப்பாடி பழனிசாமி தரப்பினர் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைத்தனர்.
அதேநேரம், இந்த பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாது, பொதுக்குழுவே செல்லாது என இந்திய தேர்தல் ஆணையத்தை ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் நாடியுள்ளனர். இதற்கிடையில் கடந்த ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழு நடைபெற்ற தினத்தில், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் மோதிக்கொண்டனர்.
இதனால் அதிமுக தலைமை அலுவலகம் வருவாய் கோட்டாட்சியரால் சீல் வைக்கப்பட்டது. எனவே, இதுதொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வத்துக்கு நேற்றைய தினம் கரோனா தொற்று கண்டறியப்பட்டு, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.