சென்னை: நேரு உள் விளையாட்டரங்கில் இன்று பிரதமர் நரேந்திர மோடி ரூ.31,530 கோடி மதிப்பிலான 11 திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்து அடிக்கல் நாட்டினார். முன்னதாக பிரதமர் மோடியை வரவேற்ற முதலமைச்சர் ஸ்டாலின் சிலப்பதிகாரம் ஆங்கில புத்தகத்தை வழங்கினார்.
இந்த விழாவில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின்; ’கல்வி, பொருளாதாரம், மருத்துவம், வேளாண்மை, ஏற்றுமதி, திறன்மிகு மனித ஆற்றல் எனப் பல்வேறு வகையிலும் தமிழ்நாடு ஒரு சிறப்பான பங்களிப்பை இந்திய நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் அளித்து வருகிறது எனவும்; இந்தியாவின் வளர்ச்சியில் தமிழ்நாட்டு மக்களின் பங்களிப்பு என்பது மிக மிக முக்கியமானதாக அமைந்திருக்கிறது எனவும் கூறினார்.
பிரதமர் மோடியை வரவேற்ற முதலமைச்சர் ஸ்டாலின் மற்ற மாநிலங்களின் வளர்ச்சியைவிட தமிழ்நாட்டின் வளர்ச்சி தனித்துவமிக்கது எனக் குறிப்பிட்ட அவர், தமிழ்நாட்டின் இந்த வளர்ச்சியானது வெறும் பொருளாதாரம் சார்ந்தது மட்டுமல்ல; சமூகநீதி, பெண்கள் முன்னேற்றம், சமத்துவம் போன்ற அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி எனத் தெரிவித்தார்.
அப்போது சில முக்கியமான கோரிக்கைகளை பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் ஸ்டாலின் முன்வைத்தார். தமிழ்நாட்டின் கடலோர மீனவ சமுதாய மக்களின் முக்கியப் பிரச்சனைக்குத் தீர்வு காணும் வகையில் கச்சத்தீவினை மீட்டெடுத்து தமிழக மீனவ மக்களின் பாரம்பரிய மீன்பிடிப் பகுதியில் அவர்களின் உரிமையை நிலைநாட்ட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரை இம்மாத 15ஆம் தேதி வரை தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீடு நிலுவைத்தொகையான 14 ஆயிரத்து 6 கோடி ரூபாயை விரைந்து வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். பல்வேறு மாநிலங்களின் வருவாயானது முழுமையாக சீரடையாமல் இருக்கக்கூடிய நிலையில், ஜிஎஸ்டி இழப்பீட்டுக் காலத்தை ஜூன் 2022-க்குப் பின்னரும், குறைந்தது அடுத்த 2 ஆண்டுகளுக்கு நீட்டித்து தரவேண்டும் என்றார்.
பழமைக்கும் பழமையாய், புதுமைக்கும் புதுமையாய், உலகச் செம்மொழிகளில் இன்றளவும் சீரிளமைத் திறத்துடன் உயிர்ப்போடு விளங்கும் தமிழை – இந்திக்கு இணையான அலுவல் மொழியாகவும், உயர் நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாகவும் அறிவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடி , முதலமைச்சர் ஸ்டாலின் இறுதியாக, மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ள நீட் தேர்வை எதிர்த்து தமிழ்நாடு அரசு கொண்டு வந்த சட்ட மசோதாவுக்கான அனுமதியை, விரைந்து வழங்கிட பிரதமரிடம் தமிழ்நாடு மக்கள் அனைவரின் சார்பில் நான் கேட்டுக் கொள்கிறேன்’ என்றார். 'எல்லார்க்கும் எல்லாம்' என்ற இலக்கை எய்திட அனைவரும் இணைந்து மக்கள் நலத்திட்டங்களைச் செயல்படுத்துவோம் எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'ஒருபுறம் பாரத் மாதா கி ஜெ... மறுபுறம் கலைஞர் வாழ்க..!' - திக்குமுக்காடிய நேரு அரங்கம்!