தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழகம் மட்டுமல்ல.. இந்தியாவைக் காப்பாற்ற வேண்டிய கடமை திமுகவிற்கு இருக்கிறது..! முதலமைச்சர் ஸ்டாலின் தொண்டர்களுக்கு மடல்..! - Chief Minister Stalin letter to DMK

முதலமைச்சர் ஸ்டாலின் திமுகவினருக்கு எழுதியுள்ள கடிதத்தில், “தமிழ்நாட்டை மட்டுமல்ல, இந்தியாவைக் காப்பாற்ற வேண்டிய கடமையையும் திராவிட முன்னேற்றக் கழகம் தன் தோளில் சுமந்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

Chief Minister Stalin letter to the DMK volunteers and said DMK has a duty to save India
முதலமைச்சர் ஸ்டாலின்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 2, 2023, 2:19 PM IST

சென்னை:தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான முதலமைச்சர் ஸ்டாலின், நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராகும் வகையில் தனது கட்சியினர் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து தொண்டர்களுக்கு, “களம் காணட்டும் கழகப் படை” என்ற தலைப்பில் கடிதம் எழுதி உள்ளார்.

அதில், "நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் மடல். திராவிட முன்னேற்றக் கழகம் ஆறாவது முறையாக ஆட்சி செய்கின்ற வாய்ப்பினை வழங்கிய தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கையை நிறைவேற்றுகிற வகையில், நாள்தோறும் சாதனைத் திட்டங்களை சிறப்பாக நிறைவேற்றி வருகிறது நமது திராவிட மாடல் அரசு. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களும் பின்பற்றக்கூடிய வகையில் நம்முடைய அரசின் திட்டங்கள் மக்களுக்குப் பயனளித்து வருகின்றன.

அதேநேரத்தில், மாநிலங்களின் வளர்ச்சியை விரும்பாத - மாநிலங்களின் உரிமைகளை மதிக்காத - மாநிலங்களுக்குப் போதிய நிதியளிக்காத - மாநிலங்கள் என்ற கட்டமைப்பே இருக்கக்கூடாது என்ற கொள்கையைக் கொண்டவர்களின் ஆட்சி இந்திய ஒன்றியத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இது குறித்து Speaking for India என்ற நிகழ்வின் மூன்றாவது பகுதியில் பேசியிருக்கிறேன். முத்தமிழறிஞர் கலைஞர் சட்டமன்றத்தில் நிறைவேற்றிய மாநில சுயாட்சிக் கொள்கையையும் அதன் இன்றைய தேவையையும் அந்த உரையில் குறிப்பிட்டிருக்கிறேன். தமிழிலும் இந்திய மொழிகள் பலவற்றிலும் வெளியாகியுள்ள அந்த உரையை உடன்பிறப்புகளாகிய நீங்கள் கேட்டிருப்பீர்கள் என நம்புகிறேன். அதனை எல்லாரிடமும் எடுத்துச் செல்ல வேண்டிய பணியையும் நீங்கள் மேற்கொள்ள வேண்டும்.

இந்தியாவின் பன்முகத்தன்மைக்கும் ஒருமைப்பாட்டிற்கும் எதிரான மதவாதக் கொள்கை கொண்ட ஆட்சியை அகற்றிட இந்தியா கூட்டணி உருவாகி, நாளுக்கு நாள் வலுவடைந்து வருகிறது. அதில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் பங்கு மகத்தானது. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் முழுமையான வெற்றியை இந்தியா கூட்டணி பெற்றிட, தமிழ்நாடு, புதுவை உள்ளடக்கிய 40 தொகுதிகளிலும் நாம் வெற்றி பெற்றாக வேண்டும். அதற்கான கட்டமைப்பை இந்தியா கூட்டணி உருவாவதற்கு முன்பே நாம் தொடங்கிவிட்டோம்.

கடந்த மார்ச் 22-ஆம் நாள் நடந்த மாவட்ட கழகச் செயலாளர்கள் கூட்டத்தில் ஒவ்வொரு வாக்குசாவடிக்கும் 100 வாக்காளர்களுக்கு ஒருவர் என பூத் கமிட்டி அமைப்பது எனத் தீர்மானிக்கப்பட்டது. ஒவ்வொரு பூத் கமிட்டியிலும் மகளிர், இளைஞர், சமூக வலைத்தளச் செயல்பாட்டாளர்கள் இருக்க வேண்டும் எனவும் முடிவு செய்யப்பட்டது. அதன்படி தமிழ்நாடு முழுவதுமுள்ள வாக்குச்சாவடிகளுக்கு பூத் கமிட்டிகள் அமைக்கப்பட்டு, அதில் பங்கேற்றுள்ள உறுப்பினர்களின் விவரங்கள் சரியாக இருக்கிறதா என்பதும் உறுதி செய்யப்பட்டது.

அதே மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டத்தில், தி.மு.கழகத்தில் ஏற்கனவே உள்ள ஒரு கோடி உறுப்பினர்களுடன் புதிதாக ஒரு கோடி உறுப்பினர்கள் சேர்க்கப்பட வேண்டும் என்கிற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டு, ஒரு தொகுதிக்கு எத்தனை உறுப்பினர்கள் என்ற விவரமும் மாவட்ட நிர்வாகத்திடம் வழங்கப்பட்டு, அதன்படி புதிய உறுப்பினர்கள் சேர்ப்பு நிறைவடைந்துள்ளது.

புதிய உறுப்பினர்களின் வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஆதாரங்களும் சரிபார்க்கப்பட்டுள்ளன. நவம்பர் 7-ஆம் நாள் முதல் கழகத்தின் புதிய உறுப்பினர்களுக்கான அட்டைகள் வழங்கப்படவிருக்கின்றன. அதுபோலவே, பூத் கமிட்டிக்குரிய பாக முகவர்களின் (BLA2) கூட்டம் மண்டலவாரியாக நடைபெற்று வருகிறது.

26-07-2023 அன்று திருச்சியில் டெல்டா மண்டல பாக முகவர்களுக்கான பயிற்சிக் கூட்டமும், 17-08-2023 அன்று இராமநாதபுரத்தில் தென்மண்டல பாக முகவர்களுக்கான பயிற்சிக் கூட்டமும், 24-09-2023 அன்று காங்கேயத்தில் மேற்கு மண்டல பாக முகவர்களுக்கான பயிற்சிக் கூட்டமும், 22-10-2023 அன்று திருவண்ணாமலையில் வடக்கு மண்டல பாக முகவர்களுக்கான பயிற்சிக் கூட்டமும் சிறப்பான முறையில் நடந்தேறிய நிலையில், நவம்பர் 5 அன்று சென்னை மண்டலத்திற்கான பாக முகவர்களுக்குரிய பயிற்சிக் கூட்டம் திருவள்ளூரில் நடைபெறவிருக்கிறது.

மாநாடுகள் போல நடைபெற்ற ஒவ்வொரு கூட்டத்திலும், பாக முகவர்களும், பூத் கமிட்டி உறுப்பினர்களும் எத்தகைய பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதற்கான பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன. சமூக வலைத்தளங்களில் எப்படி செயல்படவேண்டும் என்பதையும், கழகத்தின் சார்பிலான செயலிகளைப் பயன்படுத்தும் முறையையும் தெளிவாக விளக்கி, ஒவ்வொரு வாக்கையும் சிந்தாமல் சிதறாமல் கழக அணிக்குக் கொண்டு வருவதற்குரிய வகையில் பயிற்சிகள் அமைந்தன.

வெறும் கூடிக் கலையும் கூட்டமாக இல்லாமல், கொள்கைத் தெளிவுடனும் அந்தக் கொள்கைகளைக் கொண்டு சேர்க்கத் தேவையான தொழில்நுட்பப் பயிற்சியுடனும் இந்தக் கூட்டங்கள் மிகச் சிறந்த பயிலரங்குகளாக நடைபெற்றிருக்கின்றன. பூத் கமிட்டிகளை அமைப்பதற்காகவும், புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணியை மேற்கொள்வதற்காவும் தமிழ்நாட்டின் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் கழகத்தின் சார்பில் தொகுதிப் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு, அவர்கள் தங்கள் பணியை நிறைவேற்றியுள்ளனர்.

100 வாக்காளர்களுக்கு ஓர் உறுப்பினர் என்ற அளவில் நியமிக்கப்பட்ட பூத் கமிட்டி உறுப்பினர்களின் விவரங்களை இந்தப் பார்வையாளர்கள் சரிபார்த்ததுடன், புதிய உறுப்பினர்கள் சேர்ப்பு நிகழ்வுகளையும் வீடு வீடாகச் சென்று மேற்கொள்வதை உறுதி செய்தனர். இந்தப் பணிகள் நிறைவடைந்த பிறகும், வாரம் ஒரு நாளேனும் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிக்கு நேரில் சென்று களப்பணியாற்றி, வாக்காளர்களின் ஆதரவை உறுதி செய்யும் பணியும் தொகுதிப் பார்வையாளர்களுக்கு ஒப்படைக்கப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது.

கழகத்தின் கடைக்கோடி தொண்டர்கள் வரை களத்தில் பணியாற்றும்போது, கழகத் தலைவர் என்ற பொறுப்பை உங்களால் அடைந்த கழகத்தின் மூத்த தொண்டனான உங்களில் ஒருவனான நானும் - தமிழ்நாடு முழுவதும் பயணித்து வருகிறேன். அரசு அறிவித்த திட்டங்கள் மக்களுக்கு எந்தளவில் பயன்களைத் தருகின்றன, எந்தெந்த திட்டங்களில் சுணக்கம் தெரிகிறது, அவற்றை மேம்படுத்த வேண்டிய வழிமுறைகள் என்ன என்பதை நான் மாவட்டந்தோறும் ஆய்வு செய்து, ஆலோசனைகளை வழங்கி, பணிகளை விரைந்து நிறைவேற்றச் செய்து வருகிறேன். கழகத்தின் மூத்த அமைச்சர்களும் இதே போல ஆய்வுப் பணியை மேற்கொண்டு, இளைய அமைச்சர்களுக்கும் வழிகாட்டுகிறார்கள்.

கழகத்தின் இளைஞரணிச் செயலாளரும், இளைஞர் நலன்-விளையாட்டு மற்றும் சிறப்பு திட்ட செயலாக்கத் துறை அமைச்சருமான தம்பி உதயநிதியும் தமிழ்நாடு முழுவதும் கழக நிகழ்வுகளில் தொடர்ச்சியாகப் பங்கேற்பதுடன், கழக அரசின் திட்டங்கள் எந்தளவில் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன என்பதை ஆய்வு செய்யும் பணிகளிலும் முனைப்பாகச் செயல்பட்டு வருவதை நான் செல்லும் மாவட்டங்களில் என்னைச் சந்திக்கும் மூத்த அமைச்சர்களும் மாவட்டக் கழகச் செயலாளர்களும் தெரிவித்து வருகின்றனர்.

கழகத்தில் எந்தவிதப் பிரதிபலனும் எதிர்பாராமல் நம் உயிர்நிகர் தலைவர் கலைஞருக்காகவும், கருப்பு-சிவப்பு கொடியின் நிறமே தங்கள் குருதி நிறம் என்ற உணர்வுடனும் தங்கள் இளமை வாழ்வை இயக்கத்திற்கு அர்ப்பணித்து, இன்று மூத்த உறுப்பினர்களாகத் திகழ்பவர்களுக்கு மாவட்டந்தோறும் பொற்கிழி வழங்குகிறார் தம்பி உதயநிதி.

கழகம் என்றென்றும் வலிமையுடன் திகழ்ந்து, ஆதிக்க சக்தியினரையும், அவர்களிடம் அடிமைப்பட்டுக் கிடக்கும் கூட்டத்தினரையும் ஒருசேர வீழ்த்த வேண்டும் என்பதற்காக அயராது பாடுபடும் மூத்த உறுப்பினர்களைத் தம்பி உதயநிதி மதித்துப் போற்றுகின்ற விதம் எனக்கு மிகவும் பிடித்துள்ளது.

இதைத்தான் ஒவ்வொரு மாவட்டத்திலும், ஒன்றியத்திலும், நகரத்திலும், பேரூர்களிலும் பொறுப்பில் இருக்கும் கழகத்தினர் செய்ய வேண்டும். மூத்த உடன்பிறப்புகளின் அர்ப்பணிப்பையும் நெஞ்சுறுதியையும் இளைய உடன்பிறப்புகள் பெற வேண்டும் என்பதை இளைஞரணிச் செயலாளர் பங்கேற்கும் இந்த நிகழ்வுகள் எடுத்துக் காட்டுகின்றன.

அதுபோலவே, தமிழ்நாட்டின் மருத்துவக் கட்டமைப்பை உருக்குலைத்து, தமிழ்நாட்டு மாணவமணிகளின் மருத்துவப் படிப்புக் கனவைச் சிதைக்கும் நீட் எனும் கோடரிக்கு எதிராகத் தம்பி உதயநிதி கழக இளைஞரணி-மாணவரணி-மருத்துவ அணியை இணைத்து தொடங்கியுள்ள கையெழுத்து இயக்கமும் மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

நீட்டை விரட்டும் இயக்கத்திற்கான முதல் கையெழுத்தைக் கழகத்தின் தகவல் தொழில்நுட்ப அணி நடத்திய நிகழ்வில் உங்களில் ஒருவனான நான் போட்டேன். இந்தக் கையெழுத்து இயக்கத்தில், கழகத்தின் கடைக்கோடி தொண்டர்கள் பங்கேற்று கையெழுத்திடுவது மட்டுமின்றி, அவரவர் பகுதியில் உள்ள பொதுமக்களிடமும் மாணவர்களிடமும் நீங்கள் கையெழுத்தைப் பெற வேண்டும்.

50 லட்சம் என நிர்ணயித்திருக்கின்ற இலக்கையும் தாண்டி உங்களுடைய பங்களிப்பு இருக்க வேண்டும். குறிப்பாக மருத்துவக் கனவு சிதைகின்ற அச்சத்தில் உள்ள மாணவர்கள், நீட் தேர்வினால் பெரும் அவதிக்கு உள்ளாகும் பெற்றோர் ஆகியோரிடம் கையெழுத்து பெற வேண்டும்.

இளைஞரணி சார்பில் வருகின்ற டிசம்பர் 17-ஆம் நாள் சேலம் மாநகரில் இளைஞரணியின் மாநில மாநாடு சீரோடும் சிறப்போடும் நடைபெற இருக்கிறது. மாநில உரிமைகளை மீட்டெடுக்கும் நோக்கத்துடன், இந்தியாவின் தென் திசையிலிருந்து எத்திசைக்கும் பரவுகின்ற வகையில் நடைபெறவுள்ள எழுச்சி மாநாட்டைக் கழகத்தினர் அனைவரும் ஒருங்கிணைந்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

தமிழ்நாட்டை மட்டுமல்ல, இந்தியாவைக் காப்பாற்ற வேண்டிய கடமையையும் திராவிட முன்னேற்றக் கழகம் தன் தோளில் சுமந்துள்ளது. அதற்குப் பாக முகவர்களும், பூத் கமிட்டியினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். தொகுதிப் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டிருப்போரும் வாரம் ஒரு முறையேனும் தொகுதிக்குச் சென்று பணிகளை மேற்கொள்ள வேண்டும். அனைவரின் பணிகளையும் மூத்த தொண்டன் என்ற முறையில் கழகத்தின் தலைவனான நான் கண்காணித்து, ஒவ்வொரு தொகுதியின் நிலவரத்தையும் பெற்றுக் கொண்டுதான் இருப்பேன்.

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் எனும் புரட்சித் திட்டம், பேருந்துகளில் பெண்களுக்குக் கட்டணமில்லாத விடியல் பயணத் திட்டம், காலை உணவுத் திட்டம், நான் முதல்வன் திட்டம், மக்களைத் தேடி மருத்துவம் உள்ளிட்ட மகத்தான திட்டங்களின் பயன்கள் மக்களிடம் சரியாகப் போய்ச் சேரவேண்டும். அது பற்றி அவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும்.

அரசின் திட்டங்கள் எவருக்கேனும் கிடைக்காமல் இருந்தால், அவர்கள் தகுதியான விண்ணப்பதாரர்களாக இருக்கும்பட்சத்தில் அவர்களுக்கு அரசின் திட்டங்களின் பயன்கள் கிடைக்கும்படி செய்திட வேண்டியது தொகுதிக்குட்பட்ட மாவட்டச் செயலாளர்கள், ஒன்றிய - நகரச் செயலாளர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் பொறுப்பாகும்.

வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணியினைத் தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும் நாட்களில் நம்முடைய கழகத்தினர் கண்ணும் கருத்துமாக இருந்து, யார் யார் உண்மையான வாக்காளர்கள், யார் யார் போலியானவர்கள், இறந்துபோனவர்கள் எத்தனை பேர், இடம் மாறியவர்கள் எத்தனை பேர், இரண்டு இடங்களில் பெயர் கொடுத்திருப்போர் யார் என்பது உள்ளிட்டவற்றைக் கவனித்திட வேண்டும்.

சென்னை மண்டல பாக முகவர்கள் கூட்டம் நடைபெறும் நாளான நவம்பர் 5-ஆம் நாளன்று கூட வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புப் பணி நடைபெறவிருக்கிறது. தொகுதியின் ஒவ்வொரு வார்டிலும் இருக்கக்கூடிய பூத் கமிட்டி உறுப்பினர்களைக் கொண்டு அந்தப் பணியைத் தவறாமல் மேற்கொள்ள வேண்டும்.

நாம் உழைப்பது நம் இயக்கத்தின் வெற்றிக்காக மட்டுமல்ல, நாட்டு மக்களின் விடுதலைக்காக! ஏழரை லட்சம் கோடி ஊழல் செய்ததாக சி.ஏ.ஜி.யால் குற்றம்சாட்டப்பட்டுள்ள பா.ஜ.க.வின் கைகளிலிருந்து காப்பாற்றும் வகையிலும், அவர்களுடன் கூட்டு சேர்ந்து நாட்டுக்கும் மக்களுக்கும் எண்ணற்ற துரோகங்கள் செய்துவிட்டு, இப்போது கூட்டணி முறிந்துவிட்டதாக வேடம் போடும் அ.தி.மு.க.வின் கள்ளக்கூட்டணியை அம்பலப்படுத்தும் வகையிலும் வீடு வீடாக உங்கள் பணி மேற்கொள்ளப்பட வேண்டும்.

நாற்பதும் நமதே, நாடும் நமதே என்று கடந்த 2022-ஆம் ஆண்டு விருதுநகரில் நடந்த முப்பெரும் விழாவில் என் முழக்கத்தை முன்வைத்தேன். அதைச் செயல்படுத்தும் வியூகங்கள் வலுப்பெற்று, இன்று இந்தியா முழுவதும் பா.ஜ.க. அரசுக்கு எதிரான அலை கடுமையாக வீசிக்கொண்டிருக்கிறது.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா நம் வசம்தான்! ஜனநாயகம் காப்பதில் உறுதியாக உள்ள தோழமை சக்திகளுடன் இணைந்து மகத்தான வெற்றியைப் பெறுவோம். அதற்கேற்ற வகையில் ஒவ்வொரு வாக்குச்சாவடியாகக் களம் காணட்டும் கழகப் படை. வெற்றியை உறுதி செய்யும் உழைப்பை வழங்கட்டும். இப்படை தோற்கின் எப்படை வெல்லும்!" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: "தமிழக அரசின் மீதான அவநம்பிக்கையை மறைக்க எடுத்துள்ள அஸ்திரம்.. ஆளுநர் எதிர்ப்பு" - அண்ணாமலை!

ABOUT THE AUTHOR

...view details