சென்னையில் உள்ள கிண்டி அண்ணா பல்கலைக்கழக விவேகானந்தா அரங்கில் "தமிழ் பரப்புரைக் கழகம்" திட்டத்தின் தொடக்க விழா நேற்று (செப் 24) நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு திட்டத்தை தொடங்கி வைத்தார்.
மேலும் தமிழ் கற்றல், கற்பித்தலுக்கான பாடப் புத்தகங்கள், கற்றல் மேலாண்மை செயலி மற்றும் துணைக் கருவிகளை முதலமைச்சர் வெளியிட்டார். தொடர்ந்து விழாவில் பேருரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின், “உளங்கவர் ஓவியமே, உற்சாகக் காவியமே, ஓடை நறுமலரே, ஒளியுமிழ் புதுநிலவே, அன்பே, அமுதே, அழகே, உயிரே, இன்பமே, இனியத் தென்றலே, பனியே, கனியே, பழரசச் சுவையே, மரகத மணியே, மாணிக்கச் சுடரே, மன்பதை விளக்கே என்றெல்லாம் தமிழை அழைக்கத் தோன்றுகிறது. இருந்தாலும் தமிழை தமிழே என்று அழைக்கக்கூடிய சுகம் வேறு எதிலும் இருக்காது.
அத்தகைய தமிழ் வாழும் காலமெல்லாம் நின்று நிலைபெறக் கூடிய தமிழ் பரப்புரைக் கழகத்தைத் தொடங்கி வைப்பதை என்னுடைய வாழ்நாளில் கடமையாக மட்டுமல்ல, என்னுடைய வாழ்நாளில் பெருமையாகவும் நான் கருதிக் கொண்டிருக்கிறேன்.
திமுக பாடல்: 'வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்' என்பதை முழக்கமாகக் கொண்ட திராவிட முன்னேற்றக் கழக அரசுக்கு, தமிழ் பாதுகாப்புக் கழகம் தொடங்குவது என்பது முழுமுதல் கடமை. திமுக என்று சொல்வதைத் திரையுலகத்தில் பரப்பியபோது, ஒரு பாடல் பிரபலப்படுத்தப்பட்டது.
அந்தப் பாடலை எழுதியவர் கவிஞர் கண்ணதாசன். பாடி நடித்தவர் கலைவாணர். திராவிட முன்னேற்றக் கழகம் பிறந்த நான்கே ஆண்டில் வந்தது, அந்தப் படம். தொண்டர்களுடைய உணர்ச்சியைத் தட்டி எழுப்பியது மட்டுமல்ல, திமுக என்றால் என்ன என்பதை சொன்னது அந்தப் பாடல்.
"தீனா... மூனா... கானா... எங்கள் திருக்குறள் முன்னேற்றக் கழகம் தீனா ... மூனா.... கானா அறிவினைப் பெருக்கிடும்! பகுத்தறிவோடு நாட்டினர் வாழ திருக்குறள் தந்தார் பெரியார். வள்ளுவப் பெரியார். அந்தப்பாதையிலே நாடு சென்றிடவே வழி வகுப்பதையும் அதன்படி, தீனா... மூனா...கானா... திருக்குறள் முன்னேற்றக் கழகம்..." என்று கலைவாணர் பாடுவார்.
அதாவது திமுக என்றாலே தமிழ். தமிழ் என்றாலே திமுக என்று வளர்க்கப்பட்டதுதான் இந்த இயக்கம். அத்தகைய இயக்கம் ஆட்சிக்கு வந்தபோது, தாய்த்தமிழ் நாட்டுக்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்டது. அதற்கு முன்னால், இந்த மாநிலத்துக்கு சென்னை ராஜதானி, சென்னை மாகாணம் என்று பெயர். அதனை மாற்றி தமிழ்நாடு என்று பெயர் சூட்டியவர் அண்ணா.
அத்தகைய அண்ணாவின் பெயரால் அமைந்துள்ள இந்தப் பல்கலைக்கழகத்தில் தமிழ் பரப்புரைக் கழகம் தொடங்குவது மிக மிகப் பொருத்தமாக அமைந்திருக்கிறது. அனைவருக்குமான வளர்ச்சி என்பதை உள்ளடக்கமாகக் கொண்ட திராவிட மாடல் ஆட்சியை நாம் நடத்தி வருகிறோம்.
இணைய சேவையில் தமிழ் மொழியின் வளர்ச்சி: அந்த வகையில் தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் எண்மச் சேவைகள் துறையும் வளர்ச்சி அடைந்து வருகிறது. தமிழ்நாட்டில் தகவல் தொழில் நுட்பவியலுக்கு அடித்தளம் அமைத்ததே திமுக அரசு தான். இதற்கு கம்பீரமான சாட்சியாக இன்றும் எழிலுடன் நிற்கிறது டைடல் பார்க்.
உலகம் முழுக்க தமிழ்நாட்டு இளைஞர்கள் பணியாற்றுகிறார்கள் என்றால், அதற்கு கருணாநிதி தான் அடித்தளம் அமைத்தார். அதன் அடுத்த கட்டம்தான் கணினிமயமாக்கல். நம்முடைய அறிவுச் சொத்துக்கள் அனைத்தையும் முழுமையாக அறிவியல் தொழில் நுட்பங்களின் அடிப்படையில் மாற்றிச் சேமித்து வைக்கக்கூடிய, மகத்தான பணியைத் தமிழ் இணையக் கல்விக் கழகம் செய்து வருகிறது.
1999 ஆம் ஆண்டு Tamilnet99 என்ற தமிழ் இணையவழி மாநாட்டின் மூலம் இணையத்தமிழ் தொடர்பான முன்னெடுப்புகளையும், தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் தோற்றத்தையும் முதலமைச்சர் கருணாநிதி அறிவித்தார். அதன் பின் 5.7.2000 அன்று தமிழ் இணையக் கல்விக் கழகம் தோற்றுவிக்கப்பட்டது.
பல நூறு ஆண்டுகளாகத் தமிழின் சொத்துக்கள் சேகரித்து வைக்கப்படாமல் அழிந்து போய்விட்டது. அந்தத் தவறு தடுக்கப்பட்டு, இன்று தொகுத்தும், சேகரித்தும் மற்றும் தொழில்நுட்ப அடிப்படையில் மாற்றியும் வைத்திருக்கிறோம். இதற்கு மகுடம் வைப்பதைப் போல தமிழ் பரப்புரைக் கழகம் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
தமிழர்கள் முப்பதுக்கும் மேற்பட்ட நாடுகளில் அதிகமாகவும், அறுபதுக்கும் மேற்பட்ட நாடுகளில் குறைந்த எண்ணிக்கையிலும் வாழ்கிறார்கள். சில நாடுகளில் தமிழ் எழுதவும், பேசவும், படிக்கவும் மறந்த தமிழர்களும் இருக்கிறார்கள். இவர்கள் அனைவருக்கும் தமிழைச் சொல்லிக் கொடுப்பதற்காகத்தான் தமிழ் பரப்புரைக் கழகம் தொடங்கப்பட்டுள்ளது.
24 மொழிகளில் தமிழ் பாட நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. 30 நாடுகள், 20 மாநிலங்களைச் சேர்ந்த தமிழ் அமைப்புகளின் பொறுப்பாளர்களும், ஆசிரியர்களும், மாணவர்களும் இணைய வழியாக இணைந்து இந்த விழாவில் பங்கேற்றுள்ளது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.
உணர்வால், உள்ளத்தால், தமிழால் நாம் அனைவரும் இணைந்துள்ளோம். அமெரிக்கா, குவைத், ஓமன், நார்வே போன்ற நாடுகளைச் சேர்ந்த நம் உறவுகளும் இணைந்துள்ளார்கள். மொழிக்கு மட்டும் தான் இத்தகைய அன்பால் இணைக்கக்கூடிய ஆற்றல் உண்டு. மொழியால் இணைந்தவர்களை சாதியால், மதத்தால் பிரிக்க முடியாது.
தமிழால் ஒன்றிணைய வேண்டிய காலக்கட்டத்தில் தமிழ் பரப்புரைக் கழகம் தொடங்கப்பட்டுள்ளது. ஒரு காலத்தில் பேராசிரியர் செந்தமிழ் அரிமா என்று போற்றப்பட்ட இலக்குவனார், தமிழ் காப்புக் கழகம் தொடங்கினார். அது தமிழைக் காக்க வேண்டிய காலக்கட்டமாக இருந்தது.
பிரத்யேக எழுத்துருக்கள்: தமிழை நாம் பாதுகாத்துவிட்டோம். இது தமிழை பரப்ப வேண்டிய காலக்கட்டம். அதனால் தமிழ் பரப்புரைக் கழகம் தொடங்கி இருக்கிறோம். தாய்மொழியாம் தமிழ் மொழியை உலகெங்கும் கொண்டு செல்லும் உயரிய நோக்கம்தான் இதற்குக் காரணம். தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் சார்பில் அயலக வாழ் தமிழ் மாணவர்களுக்கு அடிப்படை நிலை முதல் பட்டக்கல்வி நிலை வரை தமிழ்க்கல்வி இணைய வழியாக அளிக்கப்படுகிறது.
உலகம் முழுவதும் உள்ள தொடர்பு மையங்கள் மூலம் இந்த இணையவழி தமிழ்க் கல்வித் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் 28 தொடர்பு மையங்கள் மட்டுமே ஏற்படுத்தப்பட்டன. ஆனால் கடந்த ஒராண்டில் மட்டும் 17 புதிய தொடர்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.