சென்னை: வேளாண் உழவர் நலத்துறை சார்பில், சம்பா பருவப் பயிர்களுக்கான இழப்பீட்டுத் தொகையாக ரூ.1,597.18 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்தத் தொகையை சுமார் ஆறு லட்சம் விவசாயிகளுக்கு வழங்கிடும் விதமாக, சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (அக்.18) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 10 விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகைக்கான சான்றிதழ்களை வழங்கினார்.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “2020-2021ஆம் ஆண்டில் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் குறுவை, சம்பா, குளிர்கால பருவப் பயிர்கள் 42.75 லட்சம் ஏக்கர் பரப்பளவு பயிர் காப்பீடு செய்வதற்காக, 25.76 லட்சம் விவசாயிகள் பதிவுச் செய்திருந்தனர்.
இதில் குறுவை பருவத்திற்கான இழப்பீட்டுத் தொகையாக ரூ.133.07 கோடி, இரண்டு லட்சத்து இரண்டாயிரத்து 335 விவசாயிகளுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு நிதி நெருக்கடியான சூழ்நிலையிலும் விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு 2021-22ஆம் ஆண்டில் பயிர் காப்பீட்டுத் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்துவதற்காக 2,327 கோடி ரூபாய் நிதியினை வேளாண் நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கீடு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
சம்பா பருவப் பயிர்களுக்கு ரூ.1,597 கோடி இழப்பீடு! அதில், 2020-2021ஆம் ஆண்டு சம்பா பருவப் பயிர்களுக்கான இழப்பீட்டு தொகைக்கு இப்கோ-டோக்யோ பொது காப்பீட்டு நிறுவனத்தின் மூலம் 1,089.53 கோடி ரூபாயும், இந்திய வேளாண் காப்பீட்டு நிறுவனத்தின் மூலம் ரூ.507.65 கோடியும், சுமார் ஆறு லட்சம் விவசாயிகளுக்கு வழங்க தற்போது ஒப்புதல் செய்யப்பட்டுள்ளது.
அனைத்து விவசாயிகளும் பயிர் காப்பீடு செய்து கொள்ளுமாறு முதலமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பா பருவப் பயிர்களுக்கு ரூ.1,597 கோடி இழப்பீடு! இந்நிகழ்ச்சியில், தலைமைச் செயலாளர் இறையன்பு, வேளாண்மை - உழவர் நலத்துறை செயலர் சமயமூர்த்தி உள்பட அரசு உயர் அலுவலர்கள், பயிர் காப்பீட்டு நிறுவனங்களின் உயர் அலுவலர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க:வீரப்பன்.. விஜய குமார்.. பட்டுக்கூடு.. நடந்தது என்ன?