தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வள்ளலார் முப்பெரும் விழாவைத் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின் - Vallalar special edition by tn govt

வள்ளலாரின் முப்பெரும் விழாவினை முன்னிட்டு, இலச்சினை, தபால் உறை மற்றும் சிறப்பு மலரை வெளியிட்டது மட்டுமல்லாமல், ஆண்டு முழுவதும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

வள்ளலார் முப்பெரும் விழாவை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
வள்ளலார் முப்பெரும் விழாவை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்

By

Published : Oct 5, 2022, 4:14 PM IST

சென்னை ராஜா அண்ணாமலைபுரம் அருள்மிகு கபாலீசுவரர் கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில் இன்று (அக் 5) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வள்ளலார் முப்பெரும் விழாவினை கொண்டாடுகின்ற வகையில், “வள்ளலார் – 200” இலச்சினை, தபால் உறை மற்றும் சிறப்பு மலர் ஆகியவற்றை வெளியிட்டார்.

மேலும் 52 வாரங்களுக்கான விழாக்களில் முதல் வார நிகழ்ச்சிகளையும், ஆண்டு முழுவதும் அன்னதானம் வழங்கும் நிகழ்வையும் முதலமைச்சர் தொடங்கி வைத்தார். “வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்” என்று பாடிய திருவருட் பிரகாச வள்ளலார் என்று அழைக்கப்படும் ராமலிங்க அடிகளார், 5.10.1823அன்று சிதம்பரம் அருகில் உள்ள மருதூரில் பிறந்தார்.

ஆண்டு முழுவதும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

ஆன்மிகவாதியான வள்ளலார், சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபையை நிறுவினார். கடவுளின் பெயரில் செய்யப்படும் உயிர் பலியை தடுத்து நிறுத்தினார். மக்களின் பசியைப்போக்குவதற்காக வடலூரில் சத்திய தரும சாலையையும் நிறுவினார். சமத்துவம், கல்வி மற்றும் தியானம் போன்றவற்றை மக்களிடம் பரப்பினார். திருவருட்பா, ஜீவகாருண்யம் மற்றும் அருள்நெறி போன்ற பல ஆன்மிக நூல்களை எழுதியுள்ளார்.

2022 - 2023ஆம் ஆண்டுக்கான இந்து சமய அறநிலையத்துறை மானியக்கோரிக்கையின் அறிவிப்பில், "உயிர்த்திரள் ஒன்றெனக்கூறி தனிப்பெரும் கருணை ஆட்சி நடத்திய வள்ளல் பெருமானார் தருமசாலை தொடங்கிய 156ஆவது ஆண்டு தொடக்கமும் (25.05.2022) வள்ளல் பெருமான் இவ்வுலகிற்கு வருவிக்க உற்ற 200ஆவது ஆண்டு தொடக்கமும் (5.10.2022), ஜோதி தரிசனம் காட்டுவித்த 152ஆவது ஆண்டும் (5.02.2023) வரவிருப்பதால், இம்மூன்று நிகழ்வுகளையும் இணைத்து அவரது 200ஆவது அவதார ஆண்டான அக்டோபர் 2022 முதல் அக்டோபர் 2023 வரை 52 வாரங்களுக்கு முக்கிய நகரங்களில் முப்பெரும் விழா நடத்தப்படும் எனவும், இதற்கென ஒரு சிறப்புக்குழு அமைக்கப்படும்'' எனவும் அறிவிக்கப்பட்டது.

வள்ளலார் தனிப்பெருங்கருணை என்ற சிறப்பு மலரை வெளியிட்டார் முதலமைச்சர் ஸ்டாலின்

அதன்படி, அருட்பிரகாச வள்ளலாரின் முப்பெரும் விழாவினை சிறப்புற நடத்திடும் வகையில் டாக்டர் பி.கே.கிருஷ்ணராஜ் வானவராயர் தலைமையில் 14 உறுப்பினர்களைக்கொண்ட சிறப்புக்குழு தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்டது. வள்ளலார் பிறந்த 200ஆவது ஆண்டைக் கொண்டாடுகின்ற வகையிலும், அவர் தருமசாலை தொடங்கிய 156ஆவது ஆண்டினைக் கொண்டாடுகின்ற வகையிலும், அதேபோல் ஜோதி தரிசனம் காட்டுவித்த 152ஆவது ஆண்டை கொண்டாடுகின்ற வகையிலும் வள்ளலார் முப்பெரும் விழாவினை தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

அப்போது “வள்ளலார் தனிப்பெருங்கருணை” என்ற சிறப்பு மலரை வெளியிட்டார். மேலும் சுத்த சன்மார்க்க அன்பர்கள் மழையூர் சதாசிவம், சா.மு. சிவராமன், தனலட்சுமி, எம். பாலகிருஷ்ணன் மற்றும் சிவப்பிரகாச சுவாமிகள் ஆகியோருக்கு பொன்னாடை அணிவித்து நினைவுப் பரிசுகளை வழங்கினார்.

சுத்த சன்மார்க்க அன்பர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நினைவுப்பரிசுகளை வழங்கினார்

இதனைத்தொடர்ந்து வள்ளலார் முப்பெரும் விழாவில், வள்ளலாரின் “தனிபெருங்கருணை நாள்” முன்னிட்டு, 5.10.2022 முதல் ஆண்டு முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், சட்டப்பேரவை உறுப்பினர் த.வேலு, வள்ளலார் முப்பெரும் விழா சிறப்புக்குழுத் தலைவர் டாக்டர் பி.கே. கிருஷ்ணராஜ் வானவராயர் உள்ளிட்டப் பலரும் பங்கேற்றனர்.

இதையும் படிங்க:வள்ளலாரின் 200ஆவது ஆண்டு அவதார தினம் - வள்ளலாரின் பேரன் பங்கேற்பு

ABOUT THE AUTHOR

...view details