சென்னை:கள்ளச்சாராயம் அருந்தி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருபவர்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். சிறப்பான சிகிச்சை அளித்திடவும் மருத்துவர்களுக்கு அறிவுரை வழங்கினார். விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே எக்கியார் குப்பத்தில் கள்ளச்சாராயம் அருந்தியதால் ஒன்பது நபர்கள் உயிரிழந்துள்ளனர்.
கள்ளச்சாராயம் மற்றும் போதைப்பொருட்களை முற்றிலும் ஒழிக்க தமிழ்நாடு அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், இச்சம்பவம் நடைபெற்ற பகுதியைச் சேர்ந்த மரக்காணம் காவல் நிலைய ஆய்வாளர் அருள் வடிவழகன், உதவி ஆய்வாளர் தீபன், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஆய்வாளர் திருமதி.மரியா சோபி மஞ்சுளா மற்றும் உதவி ஆய்வாளர் திரு. சிவகுருநாதன் ஆகியோர் ஏற்கனவே தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் கள்ளச்சாராயம் விற்பனை செய்த அமரன் என்ற நபர் நேற்று கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது இச்சம்பவத்தில் தொடர்புடைய மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து பின்னர் செய்தியாளிடம் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், ”விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே இருக்கக்கூடிய எக்கியார்குப்பம் மீனவர் கிராமத்தைச் சேர்ந்த பலர் கள்ளச் சாராயம் அருந்தியதால் உடல்நிலைப் பாதிக்கப்பட்டனர்.
இது அரசினுடைய கவனத்திற்கு வந்தவுடன் விழுப்புரம் மாவட்டம், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனை போன்ற பல்வேறு மருத்துவமனைகளுக்கு அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டு உடனடியாக மருத்துவ சிகிச்சைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மருத்துவ சிகிச்சை பலனளிக்காமல் இதுவரை 9 பேர் இறந்திருக்கிறார்கள். மேலும் 40 பேர் முண்டியம்பாக்கம் மருத்துவமனையிலும் 3 பேர் ஜிப்மர் மருத்துவமனையிலும் ஒருவர் புதுச்சேரி அரசு மருத்துவமனையிலும் தற்போது சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கிறார்கள்.
இவர்களுக்குத் தேவையான அனைத்து சிகிச்சைகளையும் வழங்கி உயிர்களைக் காப்பாற்றிடுமாறு மருத்துவர்களை நான் கேட்டுக் கொண்டிருக்கிறேன். இந்தச் சம்பவம் தொடர்பான முதற்கட்ட விசாரணையில் கள்ளச்சாராயம் விற்ற குற்றவாளிகள் மெத்தனால் எரிசாராயத்தைப் பயன்படுத்தியதால் இந்தத் துயரச் சம்பவம் ஏற்பட்டுள்ளது எனத் தெரியவந்துள்ளது. இதில் ஈடுபட்டவர்கள் காவல்துறையினரின் நடவடிக்கையால் உடனடியாக கைதும் செய்யப்பட்டிருக்கிறார்கள்.
மேலும் இந்தச் சம்பவம் நடைபெற காரணமாக இருந்த அனைவரையும் கைது செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் காவல்துறையால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதைத் தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்டம், பெருக்கரணை கிராமத்தில் ஐந்து பேர் கள்ளச்சாராயம் குடித்து இறந்த துயரச் சம்பவமும் நிகழ்ந்திருக்கிறது. மேலும் ஏழு நபர்கள் தற்போது செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களும் உடனடியாக காவல்துறையால் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.