தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திராவிடவியல் கோட்பாடு என்பதே திராவிட மாடல் சாசனம் - சட்டப்பேரவையில் முதலமைச்சர் பேச்சு! - திராவிடவியல் கோட்பாடு குறித்து பேசிய முதலமைச்சர்

தமிழக சட்டப்பேரவையில், உரையாற்றிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உரைகளை ஆதரித்தாலும் எதிர்த்தாலும் எதிர்க்கட்சிகளை தான் ஏற்றுக் கொள்வதாகவும், இந்த அரசு தனிப்பட்ட அரசாக இல்லாமல் எட்டு கோடி மக்களின் அரசாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Chief Minister Stalin has said at Speaking in tn Assembly he is the one who accepts opposition parties
சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் தான் எதிர்கட்சிகளின் எதிர்ப்பையும் எற்றுக்கொள்பவனாக இருப்பதாக தெரிவித்துள்ளார்

By

Published : Apr 21, 2023, 3:02 PM IST

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில், காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை குறித்த மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்குப் பதிலளித்து, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது அவர், ''இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி அவர்கள், தனது துறையின் சார்பில் நடைபெற்ற மானியக்கோரிக்கை விவாதத்திற்கு பதிலளித்துப்பேசியபோது, முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் பேசிய ஒன்றைச் சுட்டிக்காட்டினார்.

பேரறிஞர் அண்ணாவின் அமைச்சரவையில் இருந்த அமைச்சர்களின் ஒவ்வொரு துறையையும் குறிப்பிட்ட தலைவர் கலைஞர் அவர்கள், நாம் வகிக்கக்கூடிய துறைகள் வேறுபட்டிருந்தாலும் நாம் அனைவரும் ‘அண்ணாத்துரை’-யைச் சேர்ந்தவர்கள் என்று தலைவர் கலைஞர் அவர்கள் குறிப்பிட்டதாக, இங்கே எடுத்துச்சொன்னார். உண்மைதான், எனக்கு தலைவர் கலைஞர் முதலில் வைக்க நினைத்த பெயர் என்னவென்றால், அய்யாத்துரை! எனவே, அமைச்சர்கள் அனைவரும் தனித்தனி துறையை வகித்தாலும் நீங்கள் அனைவரும் இந்த அய்யாதுரையின் இரத்த நாளங்கள் தான்.

இது ஏப்ரல் 2023; 2 ஆண்டுகளுக்கு முன்னால் இதே ஏப்ரல் மாதத்தில் தான் தமிழ்நாட்டு மக்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆட்சியில் அமர்த்துவதற்கு முடிவெடுத்தார்கள். திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்தால், வீழ்ந்து கிடக்கும் தமிழ்நாடு எழுச்சி பெறும்; ‘தாழ்ந்த தமிழ்நாடு தலைநிமிரும்’ என்று மக்கள் முடிவெடுத்தார்கள்! மே 7ஆம் நாள், ‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்!’ என்று முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டேன்.

இன்னும் இரண்டு வார காலத்தில், இரண்டு ஆண்டுகாலம் நிறைவடைந்து, திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைக்க இருக்கிறது. இனி, தமிழ்நாட்டை நிரந்தரமாக திராவிட முன்னேற்றக் கழகம்தான் ஆளவேண்டும் என்று மக்கள் மனநிறைவுடன் முடிவெடுக்கும் வகையில், இந்த இரண்டாண்டு காலமாக நாம் ஆட்சியை ஆட்சி நடத்தி வருகிறோம் என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை.

மிக மோசமான நிதி நெருக்கடி, நிதி மேலாண்மையில் ஒன்றிய அரசின் உதவியின்மை ஆகிய மிகக் கடினமான சூழல்கள் உள்ள போதிலும், மகத்தான சாதனைகளை திமுக அரசு நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் செய்து கொடுத்துள்ளது.

வருவாய் பற்றாக்குறை குறைப்பு:தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொருவருக்கும், ஏதாவது ஒரு வகையில் தமிழ்நாடு அரசு நன்மை செய்து கொண்டிருக்கிறது என்பதை என்னால் தலைநிமிர்ந்து சொல்ல முடியும். மகளிருக்கு பேருந்துகளில் கட்டணமில்லா பயண வசதி செய்து தரப்பட்டதன் மூலமாக, இதுவரை 265 கோடி பயணங்களை மகளிர் மேற்கொண்டுள்ளார்கள்.

குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகையை செப்டம்பர் மாதம் முதல் தரவிருக்கிறோம். இதன் மூலம் ஒரு கோடி மகளிர், மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் பெறப் போகிறார்கள். பல்வேறு மாவட்டங்களில் நான் கலந்துகொண்ட நலத்திட்ட உதவி விழாக்களின் மூலமாக மட்டும் ஒரு கோடிப் பேருக்கு பல்வேறு உதவிகள் செய்யப்பட்டுள்ளன.

திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்றபோது 62 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்த வருவாய் பற்றாக்குறையை, நடப்பு மதிப்பீடுகளில் 30 ஆயிரம் கோடி ரூபாயாகக் குறைத்துள்ளோம்.

தமிழ்நாட்டை நோக்கி 2 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான புதிய தொழில் முதலீடுகளை நாம் ஈர்த்துள்ளோம். மாநில உள்நாட்டு உற்பத்தி 6.11 விழுக்காடாக உயர்ந்துள்ளது. வேளாண் உற்பத்தி அதிகமாயிருக்கிறது. பாசனப் பரப்பும் அதிகமாகியிருக்கிறது. இப்படித் துறைவாரியாக நான் சொல்லத் தேவையில்லை. அனைத்து அமைச்சர்களும் அவற்றை இதே அவையில், விரிவாக ஆதாரங்களோடு சொல்லி இருக்கிறார்கள். இப்படி துறைரீதியாகச் சாதனைகளை நெஞ்சை நிமிர்த்திச்சொல்லும் திராவிட மாடல் அரசாக, நமது அரசு அமைந்துள்ளது.

உதயசூரியன் உதிப்பதற்கு முன்னால் எழுந்து உழவுக்குச்செல்லும் உழவர்களின் முகத்தில் மலர்ச்சி இருக்கிறது; காரணம், இலவச மின்சாரம் கிடைக்கிறது. காலை நேரத்தில் பள்ளிக்குச்செல்லும் குழந்தைகள் முகத்தில் மலர்ச்சி காணப்படுகிறது. காரணம், பள்ளியிலேயே காலை உணவு கிடைக்கிறது. பல்வேறு பணிகளுக்காக புறப்படும் மகளிர் முகத்தில் மலர்ச்சி காணப்படுகிறது – காரணம் - பேருந்துகளில் கட்டணமில்லை.

இப்படி மக்களுக்கு நேரடியாக தினமும் பலன் தரும் அரசாக தமிழ்நாடு அரசு இருக்கிறது. அதனால்தான் அவதூறுகளை யார் அள்ளி வீசினாலும், திசைதிருப்பும் திருகுவேலைகளை யார் செய்தாலும், மக்கள் மனங்களை யாராலும் மாற்ற முடியவில்லை; ஏமாற்றவும் முடியவில்லை! நாங்கள் தேர்தலில் மட்டும் வெல்லவில்லை; மக்களின் மனங்களையும் வென்று, அவர்கள் நெஞ்சங்களில் நிரந்தரமாகக் குடியேறி இருக்கிறோம்.

திராவிடவியல் கோட்பாடு என்பதே திராவிட மாடல் சாசனம்:இது தனிப்பட்ட ஸ்டாலினின் அரசு அல்ல; இது திராவிட முன்னேற்றக் கழகம் என்ற தனிப்பட்ட கட்சியின் அரசு அல்ல; ஒரு இனத்தின் அரசாக, எட்டுக் கோடி மக்களின் அரசாக, ஒரு கொள்கையின் அரசாக இருக்கிறது; திராவிட மாடல் என்ற கோட்பாட்டின் அரசாக இருக்கிறது.

சமூகநீதி - சமத்துவம் - சமதர்மம் - சகோதரத்துவம் - மொழி உரிமை - இன உரிமை - மாநில சுயாட்சி ஆகிய கொள்கைகளை உள்ளடக்கிய ‘திராவிடவியல் கோட்பாடு’ என்பதே திராவிட மாடல் சாசனம். ஓர் அரசு மக்கள் நல அரசாகவும் இருக்க வேண்டும், அதே நேரத்தில் கொள்கை அரசாகவும் இருக்க வேண்டும். மக்களுக்கான உதவிகளை மட்டும் செய்துவிட்டு, கோட்பாடுகளில் இருந்து விலகிச்சென்று விடக் கூடாது. ஒரு பக்கம் மக்கள் நலன், இன்னொரு பக்கம் கொள்கை உரம். இவை இரண்டையும் முன்னெடுக்கும் ஆட்சியாக இரண்டாண்டுகளை நாம் நிறைவு செய்யப்போகிறோம்.

இது இந்தியாவையே ஈர்க்கும் ஆட்சியாக அமைந்துள்ளது என்பது, என்னுடைய பெருமை மட்டுமல்ல; இந்த அமைச்சரவையின் பெருமை! ஏன், எங்களோடு தோளோடு தோள் சேர்த்து நிற்கும் கூட்டணிக் கட்சிகளுடைய பெருமை! இன்னும் சொல்லப்போனால், நாங்கள் கவனிக்கத் தவறும் இடங்களைச் சுட்டிக்காட்டும் உரிமை எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் உண்டு. ஆனால், அந்தக் கடமையிலிருந்து தவறி, என்ன நிலைக்கு அவர்கள் போய்க் கொண்டிருக்கிறார்கள், அதுதான் எனக்கும் வேதனையாக இருக்கிறது.

இந்த அவை பல ஆரோக்கியமான விவாதங்களை கண்டிருக்கிறது. அதேபோன்ற ஆரோக்கியமான விவாதமாகவே உங்கள் அனைவரது உரைகளையும் நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆதரித்தாலும், எதிர்த்தாலும் மக்களுக்காகத்தான் பேசுகிறீர்கள் என்று எடுத்துக் கொள்பவனாக, ஏற்றுக்கொள்பவனாக நான் இருக்கிறேன். ஆசிரியராய் இருந்து இந்த அவைக்கு தலைமை ஆசிரியராக மட்டுமல்ல, சட்டமன்ற நெறிமுறைகளுக்கு ஆசானாகவும் திகழ்ந்து வரும் பேரவைத் தலைவரான தங்களுக்கும் எனது நன்றியைத் நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

“எந்த சமுதாயத்தில் இருந்து போலீஸ் படையினர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்களோ, அந்தச் சமுதாயத்தைப் பிரதிபலிக்கின்ற நிலைக் கண்ணாடியாக அந்தப் படையினர் விளங்குவார்கள். அந்தச் சமுதாயத்திலிருந்து வெகுதூரம் அவர்கள் விலகி இருப்பது இல்லை.
போலீஸ் படை நன்றாக நேர்த்தியாகச் செயல்படுகிறது என்றால், அது சமுதாயத்தின் தன்மையைக் காட்டும். அதேபோல் போலீஸ் படையினர் எங்கேனும் செயலாற்றுவதில் தவறு இழைத்தால், சமுதாயத்தில் நிலவும் குறைபாட்டையே அவை காட்டுகின்றன.

தங்களால் உருவாக்கப்படாத பிரச்னைகளுக்குத் தீர்வு காண வேண்டியவர்களாக அவர்கள் இருக்கிறார்கள். முரண்பாடு ஏற்படுகின்ற இடங்களில் எல்லாம் அவர்கள் இருந்தாக வேண்டியிருக்கிறது. சகல விதத்திலும் சகிப்புத் தன்மையோடு அவர்கள் நடந்துகொள்ள வேண்டியிருக்கிறது.

உள்ளக் கொந்தளிப்பு அடையாமல் பற்றற்ற அமைதியுடன் நடந்துகொள்ள வேண்டியவர்களாக இருக்கிறார்கள். பெற்ற பயிற்சிக்கு ஒப்ப, கடமை உணர்ச்சிமிக்கவர்களாக அவர்கள் நடந்துகொள்ள வேண்டி இருக்கிறது” என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் குறிப்பிட்டார்கள், அப்படித்தான் காவல் துறையினர் நடந்து வருகிறார்கள்.

அவர்களது செயல்பாட்டில் குற்றங்குறைகள் இருக்கலாம். குறையே இல்லை என்று நான் சொல்லமாட்டேன். குறை கண்டுபிடிக்கப்பட்டதும், அவை திருத்தப்பட்டனவே தவிர, கண்டும் காணாமல் விடப்படவில்லை. சம்பவம் நடந்ததும் குற்றவாளி தப்பிவிட்டார் என்றோ, குற்றவாளியைக் கைது செய்யவில்லை என்றோ, குற்றவாளியைக் காப்பாற்றினார்கள் என்றோ புகார் இருந்தால் சொல்லுங்கள். உடனடியாக நடவடிக்கை எடுக்கச் சொல்கிறேன், அதில் உறுதியாக நான் இருக்கிறேன்.

எந்தக் குற்றவாளியையும், அது யாராக இருந்தாலும், எப்படிப்பட்ட கொம்பனாக இருந்தாலும், அவர்களை நாங்கள் நிச்சயமாக காப்பாற்ற மாட்டோம் என்று இந்த மாமன்றத்தில் உறுதியாகக் கூறுகிறேன். சிறுசிறு தவறுகள் நடந்திருந்தாலும், அதனைத் திருத்திக் கொள்ளும் பண்பை காவல் துறையினர் பெற வேண்டும்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: அதிமுக அரியாசனத்தில் அமர எடப்பாடிக்கு பிளான் போட்டு கொடுத்த மூவர்.. ஈபிஎஸ் திட்டம் சாத்தியமானது எப்படி?

ABOUT THE AUTHOR

...view details