சென்னை: உலக மகளிர் தினத்தையொட்டி சென்னை அண்ணா சாலையில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலைய பெண் காவலர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். மார்ச் 8ஆம் நாளான உலக மகளிர் தினத்தையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை இன்று (8.3.2023) முகாம் அலுவலகத்தில் சந்தித்த காவல் துறை இயக்குநர்கள் முதல் காவலர்கள் வரையிலான பெண் காவல்துறையினர் மற்றும் முதலமைச்சரின் பாதுகாப்பு பிரிவில் பணிபுரியும் பெண் காவலர்களுக்கு, தனது மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டு, அவர்களுக்கு பரிசாக மரக் கன்றுகளை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து, சென்னை, அண்ணா சாலையில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சென்று, அங்கு பணிபுரியும் பெண் காவலர்களுக்கு மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்து, நினைவுப் பரிசாக புத்தகங்களை வழங்கினார். முன்னதாக, சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற சர்வதேச மகளிர் தினவிழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (8.03.2023) கலந்துகொண்டு பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறப்பாக பணியாற்றிய மாவட்ட நிர்வாகங்களுக்கு விருதுகளை வழங்கினார். இந்நிகழ்வில் நாமக்கல், நாகை மற்றும் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர்கள் விருதுகளை பெற்று கொண்டனர்.
இந்த நிகழ்வின்போது, உயர்கல்வித் துறை அமைச்சர் க. பொன்முடி, சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், மற்றும் காவல்துறை உயர் அலுவலர்கள் உடனிருந்தனர். மேலும் மகளிர் தினத்திற்கு வாழ்த்து தெரிவித்து தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவரது ட்விட்டர் பக்கத்தி வாழ்த்து செய்தி பதிவிட்டுள்ளார்.